விவாகரத்து வழக்குகளில், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதிமன்றங்கள் தங்கள் முன்னுள்ள வழக்குகளின் தன்மைகளைப் பொறுத்து, கட்டாய ஆறு மாத காலம் காத்திருப்பு என்ற நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கலாம்; மண முறிவை அறிவிக்கலாம் என்று, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
விவாகரத்து பெற விரும்பும் தம்பதி, குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, விவாகரத்து பெற ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று, இந்து திருமணச் சட்டம் 13பி சட்டப்பிரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தம்பதியில் ஒருவர் சம்மதம் தெரிவிக்காவிட்டால், விவாகரத்து கிடைப்பதில் சிக்கலும் தாமதமும் உண்டாகிறது. இந்த நிலையில், பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து கோரும் தம்பதிக்கு, ஆறு மாத காத்திருப்புக் காலத்தில் விலக்கு அளிக்கக்கோரும் வழக்கு, கடந்த பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின் போது, இந்து திருமண சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ள எந்தவித முறைகளையும் பின்பற்றாமல், தம்பதி சேர்ந்த வாழவியலாத நிலைக்கு சென்ற திருமணத்தை முறிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இவ்வழக்கில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏ.எஸ். ஓகா, விக்ரம் நாத், ஜே.கே. மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், `` உச்ச நீதிமன்றத்துக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள 142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி, பரஸ்பர சம்மதத்தின் மூலம் கோரப்படும் விவாகரத்து வழக்குகளில் மண முறிவை நீதிமன்றம் அறிவிக்கலாம். மேலும், நீதிமன்றங்கள் தங்கள் முன்னுள்ள வழக்குகளின் தன்மைகளைப் பொறுத்து, கட்டாய ஆறு மாத கால நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கலாம்" என்றனர்.
திருமண முறிவு எப்போது ஏற்படும் என்பதை தீர்மானிக்கக்கூடிய காரணிகளை, குறிப்பாக பராமரிப்பு, ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பாக பங்குகளை எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதையும் அமர்வு வகுத்துள்ளதாக, நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதிகள் சிவகீர்த்தி சிங் மற்றும் ஆர் பானுமதி (இருவரும் ஓய்வு பெற்றவர்கள்) ஆகியோர் அடங்கிய அமர்வு, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
from India News https://ift.tt/VfpojQx
0 Comments