விழுப்புரம் மாவட்டம், எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர், செங்கல்பட்டில் 8 பேர் என இதுவரை 23 பேர் உயிரிழந்திருக்கின்றனர். புதுவை ஜிப்மர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பலர் அதிக பாதிப்புடன் இருப்பதால், பலி எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். ``உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல. மெத்தனால் கலந்த விஷச்சாராயம் என்று தடயவியலில் தெரிந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு.
இதற்கிடையில், இந்த இரண்டு மாவட்டங்களிலும் எஸ்.பி-க்கள் முதல் ஏட்டுவரை தற்காலிகப் பணி நீக்கமும், பணி மாறுதலும் செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக காவல்துறை. தொடர்ந்து, தமிழகம் முழுக்க களமிறங்கிய காவல்துறை, கள்ளச்சாராயம் விற்றவர்களைத் தட்டித் தூக்க, "தமிழகத்தில், கள்ளச்சாராயம் தொடர்பாக இரண்டு நாள்களில் மட்டும் 1,600 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், இந்தக் கள்ளச்சாராய விற்பனையும், போலி மதுபான விற்பனையும் அரசுக்கும், காவல்துறைக்கும் முன்பே தெரிந்திருக்கிறது” என்று சீறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
அதையடுத்து மரக்காணம் பகுதி கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடையதாக அமரன், முத்து, ரவி, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, குணசீலன், புதுவையைச் சேர்ந்த முத்தியால்பேட்டை ராஜா, ஏழுமலை என எட்டு பேரைக் கைதுசெய்த தனிப்படை, மரக்காணம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தது. அவர்கள், ”சென்னையிலுள்ள ஜெய்சக்தி பிரைவேட் லிமிடெட் கம்பெனி உரிமையாளர் இளைய நம்பிதான் எங்களுக்கு மெத்தனாலை விற்றார்” என்று கைகாட்ட, இளைய நம்பியைத் தூக்கியது போலீஸ். ”பண்ருட்டியைப் பூர்வீகமாகக்கொண்ட இளைய நம்பி சென்னையில் வார்னிஷ், தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்திவந்தார். இவற்றுக்கு மெத்தனால்தான் முக்கியமான மூலப்பொருள். கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட, 2021-ல் கம்பெனியை மூடிவிட்டார்.
அப்போது அவரிடம் தங்கிவிட்ட ஆறு பேரல் மெத்தனாலைப் பணமாக்கிவிடலாம் என்று நண்பர் ஒருவர் கூற, வில்லியனூரைச் சேர்ந்த ஏழுமலையிடம் விற்றிருக்கிறார்கள். அவர் முத்தியால்பேட்டை ராஜாவிடம் மூன்று பேரல்களை விற்றிருக்கிறார். ராஜா அதை மரக்காணம் முத்துவுக்கு ஒரு பேரலும், செங்கல்பட்டு சாராய வியாபாரி விளம்பூர் விஜயகுமாருக்கு இரண்டு பேரல்களும் விற்றிருக்கிறார். இவர் பா.ஜ.க-வின் செங்கல்பட்டு தெற்கு ஓ.பி.சி அணியின் தலைவர். அதேபோல வில்லியனூர் ஏழுமலை என்பவர், வில்லியனூர் தொகுதியில் தட்டாஞ்சாவடி தி.மு.க கிளைச் செயலாளர்” என்றனர் நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள்.
இது ஒருபுறமிருக்க, “தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகத்திலுள்ள டாஸ்மாக்கில் விற்பனை செய்யும் போலி மதுபானங்களைத் தயாரிக்க, தமிழகத்தின் வழியாக புதுச்சேரி மாநிலத்துக்கு எரி சாராயம் கொண்டுவரப்படுகிறது. அதன்மூலம் போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரியிலுள்ள தி.மு.க துணையோடு பல தி.மு.க உறுப்பினர்கள் தமிழகத்துக்கு போலி மதுபானம் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். இது குறித்து பலமுறை அ.தி.மு.க சார்பில் தொடர் குற்றச்சாட்டை கூறி வருகிறோம். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதில் தி.மு.க-வைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் வில்லியனூர் தொகுதியில் தட்டாஞ்சாவடி கிளைச் செயலாளராக இருக்கிறார்.
இவர் தி.மு.க எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநில அமைப்பாளருமான சிவாவுக்கு நெருக்கமானவர். இது போன்ற குற்றச்செயலில் அதிகம் ஈடுபட்டுவருபவர்கள் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தி.மு.க-வினர்தான். புதுச்சேரி, தமிழகத்திலுள்ள தி.மு.க-வினர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு கூட்டுவைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர் 23 பேர் இந்தக் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தனர். ஆனால், இது தொடர்பாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வி.சி.க-வினர் ஆர்ப்பாட்டமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று செய்தியாளர்களிடம் காட்டமாகக் கூறியிருக்கிறார் புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன்.
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமியோ, ``கள்ளச்சாராயத்தை புதுவையிலிருந்து கடத்திச் சென்று தமிழகத்தில் விற்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான முழுப் பொறுப்பையும் புதுவை அரசு ஏற்க வேண்டும். கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரி கலால்துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து, முதல்வர் ரங்கசாமிக்கு நேரடியாகப் பணம் தருவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். தமிழக உயிரிழப்புக்கு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கடுகடுத்திருப்பதன் மூலம் புதுச்சேரி அரசியலிலும் இந்த விவகாரம் புயலைக் கிளப்பியிருக்கிறது.
அதேபோல, திண்டிவனம் நகராட்சியில் 20-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருக்கும் ரம்யாவின் கணவர்தான் மரூர் ராஜா. திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதியின் பிரபல சாராய வியாபாரியான இவர்மீது கள்ளச்சாராய வழக்கில் தற்போது குண்டாஸ் போடப்பட்டிருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக தி.மு.க-வில் ஐக்கியமான ராஜா, குறுகிய காலத்திலேயே அமைச்சர் செஞ்சி மஸ்தான், அவரின் மருமகன், மகனுடன் நெருக்கமாகிவிட்டார். அதைப் பயன்படுத்தி, சீனியர்களை ஓரம்கட்டி திண்டிவனம் நகராட்சியின் 20-வது வார்டில் தி.மு.க வேட்பாளராக தன் மனைவி போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றார் என்கிறார்கள்.
"அந்த வார்டில் தொடர் ஆளுமை செலுத்தி வந்தது அ.தி.மு.க நகரச் செயலாளர் தீனதயாளனின் குடும்பத்தார். அவர்களுக்கு முடிவுகட்டுவதற்காக, மரூர் ராஜாவின் மனைவிக்கு அந்த வாய்ப்பை நம்பிக்கையுடன் வழங்கினார் அமைச்சர்" என்கின்றனர் விவரம் அறிந்த உடன்பிறப்புகள்.
அமைச்சரின் குடும்பத்தின் ஆதரவுடன் அந்தத் தேர்தலில் ரம்யா வெற்றிபெற்று கவுன்சிலரானதும், சாராய தொழிலை இன்னும் விரிவுபடுத்தினாராம் ராஜா. இந்த நிலையில்தான், கடந்த ஏப்ரல் மாதத்தில் திண்டிவனம் அருகே காரில் சாராயம் கடத்திச் சென்றபோது மதுவிலக்கு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 105 லிட்டர் எரி சாராயம், சாராய பாக்கெட்டுகள், தயாரிக்கப் பயன்படுத்தும் மெஷின்கள், காலி சாராய கேன்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, திண்டிவனம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளச்சாராய வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள்மீது உடனே போட்டிருக்க வேண்டிய குண்டாஸ் சட்டத்தை, இத்தனை நாள்கள் கழித்து இப்போது போட்டு கடமையை ஆற்றியிருக்கிறது தமிழக காவல்துறை.!
from India News https://ift.tt/TVnfbpQ
0 Comments