ஒரு சர்வாதிகாரியின் மரணம், பல சர்வாதிகாரிகளுக்கு இறுதி எச்சரிக்கை! I Hitler Death Anniversary

'கொடுங்கோலனே... இந்த நாட்டின் சாபங்கள் அனைத்தையும்

உன் கையில் ஏந்தி நிற்கின்றாய்

உன் ஆட்சியில் நீதி விற்கப்படுகிறது

உன் ஆட்சியில் இயற்கையின் விதிகள் தூக்கி எறியப்படுகின்றன

அராஜகத்தின் அரக்கக் குரல்கள் உரக்கக் கேட்கின்றன

அழிவின் அரியாசனத்தில் நீ உன்னை அறியாமல் வீற்றிருக்கின்றாய்'

- பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தாலும், கொடுங்கோன்மைக்கு எதிராக மக்கள் கவிஞன் ஷெல்லி பாடிய கவிதை வரிகள் இவை.

யாருக்காகவோ எப்பொழுதோ எழுதப்பட்ட கவிதை வரிகள் என்று கடந்துவிட முடியாத காத்திரம் மிக்க வரிகள். இப்பொழுதும் எப்பொழுதும் பொருந்தும் நெருப்பு வரிகள்!

அடால்ஃப் ஹிட்லர்

தாரகமந்திரம்!

'அடக்கமுடியாத கோபத்தைக் கட்டி வை. காலம் உன்னிடம் வரும்போது ஒருவரையும் விடாதே... கருவறு'

- இதுதான் அடால்ஃப் ஹிட்லரின் தாரகமந்திரம்

நாடுகளைப் பிடிக்கும் பேராசையால், தன் நாட்டை ஆளும் உரிமையையும் இழந்து, பாதாள அறையில் தன்னைத்தானே சுட்டுப் படுகொலை செய்து கொண்ட அடால்ஃப் ஹிட்லரின் 78-வது நினைவு நாள் இன்று (ஏப்ரல் 30).

நாட்டுக்காக உழைத்த நல்லவர்களைத் தெரிந்துவைதிருப்பதைப் போல, அவர்களை நினைவுகூர்வதைப் போல... மிகமிக முக்கியமானது, கொடுங்கோலர்களைப் பற்றியும் தெரிந்துவைத்திருப்பது. அப்போதுதான்... நிகழ்காலத்தில் நம் கண்முன்னே 'தலைவன்' என்கிற பெயரில் நடமாடுபவர்களில் யார் நல்லவர், யார் நயவஞ்சகர் என்பதைத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

‘நானே நாடு... எல்லா நீதிபதிகளும் என்னுடைய வழக்கறிஞர்கள்' என்று அகம்பாவம் பிடித்து அலைந்த ஹிட்லர், யூதர்களை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்து உலகநாடுகள் பலவற்றின் மீதும் போர் தொடுத்தார். 'எதிரிக்குஎதிரி நண்பன்' என்கிற வகையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் தங்களுக்குள் உள்ள பகைமையை மறந்து, பொதுஎதிரியை வீழ்த்தக் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றன.

அடால்ஃப் ஹிட்லர்

டான்யூப் நதி

ஆஸ்திரியாவின் வடபகுதியிலிருக்கும் டான்யூப் நதிக்கரையின் ஓரம், காஸ்தாப் ஜும் பொம்மர் எனும் ஊரில், சுங்க அதிகாரியான அலாய்ஸ் ஹிட்லர்- கிளாரா போல்ஸ் தம்பதிக்கு, நான்காவது மகனாக விவரிக்க முடியாத சில உடல் குறைபாடுகளுடன் பிறந்தவர் (20/04/1889) ஹிட்லர். படிப்பில் நாட்டம் இல்லாமல் மதபோதகராக விரும்பி, ஒருகட்டத்தில் ஒவியராக ஆனார் ஹிட்லர்.

ஹிட்லரைப் பொறுத்தவரையில் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவர். புகை, மது, மாது, மாமிசம் ஆடம்பரம் இவற்றைத் தவிர்த்து எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். நாட்டின் எதிர்காலமாகத் திகழும் குழந்தைகள், இளைஞர்கள் மீது அன்பு பாராட்டி, பாசமழை பொழிந்தவர்.

நிராகரிப்பு... நிரந்தரம் இல்லை!

ஹிட்லர், பிறப்பால் ஆஸ்திரியர். அதனால், ஜெர்மனியின் குடியுரிமை மறுக்கப்பட்டவர். ராணுவ உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர். ஆனாலும் முதல் உலகப் போர் துவங்கிய காலத்தில், ஜெர்மனியின் ஆதிக்க மனப்பான்மை கொண்ட பவேரியா பகுதியின் ரிசர்வ் ராணுவப் படையில், கடைநிலை சிப்பாயாக இணைந்தார் ஹிட்லர். அப்போரின் மூலமாக, ஜெர்மனியை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 16. அவர்தான், தன்னுடைய 16-வது வயதில், ஜெர்மனியின் மீட்பராகச் சர்வவல்லமைப் பெற்ற சர்வாதிகாரியாக மாறினார்.

ஹிட்லர்

'நிராகரிப்பு... நிரந்தரம் அல்ல. நிரந்தரங்கள் நிலையானவையும் அல்ல. மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதை ஹிட்லர் வாழ்க்கையும் நமக்குப் பாடமாகச் சொல்கிறது!

ஹிட்லர், மூன்று முறை உயிருக்குக் குறிவைக்கப்பட்டபோதும் தப்பியவர். 'நாம் இந்த உலகத்துக்கு பெரிய காரியத்தைச் செய்துமுடிக்கும் பொருட்டு கடவுளால் ஆசீர்வதித்து அனுப்பப்பட்டிருக்கிறோம். நாம் தெய்வீக சக்திபெற்ற சரித்திர புருஷன்' என்கிற தலைவிதி தத்துவத்தில் மூழ்கியிருந்தார் ஹிட்லர்.

யூதர்களைக் கொல்லக் காரணம்?

'ஜெர்மனி எங்கே?'

'அதோ... ஹிட்லரின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது'

'ஹிட்லர் எங்கே?'

'ஜெர்மனிக்கு முன்னாலே கம்பீரமாக சென்று கொண்டிருக்கிறார்'

- இப்படி சொல்லப்படுகிற அளவுக்கு, ஹிட்லரிடம் தன்னை முழுமையாக இழந்திருந்தது ஜெர்மனி!

முதல் உலகப்போரில் மிகப்பெரிய தோல்வியை ஜெர்மனி தழுவியதுதான் ஹிட்லரின் அரசியல் பிரவேசத்தை விஸ்வரூபம் எடுக்கவைத்தது. தோல்விக்குப் பின் சுயபரிசோதனை செய்தபோது... அதற்குக் காரணம் யூதர்களும், கம்யூனிஸ்ட் போல்ஷ்விக்குகளும்தான் என்பதைக் கண்டறிந்தார். ஹிட்லருக்கு யூதர்கள் மீது கோபம் வரக் காரணங்களில் ஒன்று... கிறிஸ்தவ மதப் புரட்சியாளர் மார்ட்டின் லூதர் எழுதிய 'யூதர்களும் அவர்களின் பொய்மையும்'  என்ற நூல்.

ஆரிய-யூத சித்தாந்தங்கள்!

அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் ஆரியச் சித்தாந்தம் மற்றும் யூத சித்தாந்தம் என இரண்டுவகை சித்தாந்தங்கள் இருந்தன. யூதர்களின் பொருளாதார பலமே, ஜெர்மனியின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் திசைவழியை மாற்றி அமைத்தது. இதை மாற்றியமைக்க, 'இனவேறுபாட்டை உருவாக்கி, ஆரிய இனமே உயர்ந்த இனம். நாம் ஆளப்பிறந்தவர்கள்' என்ற கருத்தியல் ஆரியர்களால் அப்போது முன்வைப்பட்டது.

ஜெர்மனியின் ஆக்கப் பணிகளுக்கு ஆரியரையும், அழிவுப் பணிகளுக்கு யூதர்களையும் மேற்கோள் காட்ட, இந்தியாவில் இந்து- முஸ்லீம் மதங்களிடையே நிலவிய வேறுபாடுகளைத்தான் எடுத்துக்காட்டாக உலகுக்கு முன்வைத்தனர் ஆரியர்களான நாஜிக்கள். திராவிட - ஆரிய இனவேறுபாடு; வடக்கு - தெற்கு திசை வேறுபாடு; தமிழ் - சமஸ்கிருத மொழி வேறுபாடு அரசியலைப் போன்றதுதான் இந்த ஆரிய - யூத வேறுபாடு!

ஸ்வஸ்த்திக் கொடி

யூத கலப்படமற்ற ஆரிய இனத்தின் மீது ஜெர்மனி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று ஹிட்லர் விரும்பினார். நாஜிக் கட்சியின் ஸ்வஸ்திக்கொடி, ஜெர்மன் அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான கொடியாக இருக்கும் என்று 1935-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ம் தேதியன்று சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது யூதர்களுக்கு எதிரான ஆரியர்களின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுவதாகவே உலகம் உணர்ந்தது.

யூதர்கள், வட்டித் தொழில் செல்வாக்கு பெற்றிருந்த காலகட்டத்தில் ஜெர்மனியர்கள் வறுமையில் ஒரு ரொட்டித் துண்டுக்கு ஏங்கிய துன்பமான சூழலில் வாழ்ந்தார்கள். பழரச பானம், பன்னீர் குளியல், பளிங்கு மாளிகை என யூதர்கள் வாழ்ந்த வாழ்க்கை, ஜெர்மனிய மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

ஜெர்மன் நாட்டின் மக்கள் தொகையில், நூற்றுக்கு ஒருவர் யூதர். ஆனால், ஆண்டு வருமானம் ஜெர்மனியரைவிட நான்கு மடங்கு அதிகம். 1930-ம் ஆண்டு, ஜெர்மனியின் மொத்த வங்கி 994. இதில் 485 வங்கிகள் யூதர்களின் வசம். நியூ ரென்பர்க் நகரில் நூற்றுக்கு என்பது டாக்டர்கள் யூதர்கள். பெர்லினில் 3,450 பாரீஸ்டர்களில் (வழக்கறிஞர்கள்) 1,925 பேர் யூதர்கள். நாடக மண்டபங்கள் மற்றும் சபாக்கள் 29. இவற்றில் 23 யூதர்கள் வசம்.

அடால்ஃப் ஹிட்லர்

நாஜிசம்!

இந்த அடிப்படையில், ஐரோப்பிய யுத்தத்தில் ஜெர்மனிக்காக உயிரைக் கொடுத்த யூதர்கள் வெறும் ஏழே பேர்தான். ஆனால், ஜெர்மனியர்கள் நூற்றுக்கு இருபது பேர் உயிரிழந்தார்கள். இதைத்தான், யூதர்களுக்கு எதிரான பிரசார ஆயுதமாகக் கையில் எடுத்தார் ஹிட்லர். மேற்கண்ட புள்ளி விவரங்களைப் பட்டியலிட்டார். மக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்தது, அவருக்கு ஆதரவு பெருகியது. நாஜிக்கள் கட்சியில் படித்தவர்களும் பாமரர்களும் இணைந்தனர். நாஜிக்களின் செயல் திட்டம் துவங்கியது. யூதர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அவர்களுடைய வர்த்தக நிறுவனங்கள், நாட்டுடைமையாக்கப்பட்டன. அரசு வேலையிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஹிட்லர், நாஜிக் கட்சியின் தலைவரானார். 1933-ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் சான்சலர் ஆனார். 1934-ம் ஆண்டு, நாட்டின் தலைவரானார். பலதடவைகள் போலியான வாக்கெடுப்பு நடத்தி, தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று நாட்டுமக்களுக்கும் உலகுக்கும் காட்டியபடி அரசியலில் தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டார்.

புழுக்களின் உடலில், புலியின் ரத்தம்!

ஹிட்லர், படிப்பாளி அல்ல. ஆனால், பட்டறிவு கொண்டவர். வெகுஜன மக்களை வசிகரிக்கும் ரத்தத்தைச் சூடேற்றும் நாவன்மை பெற்ற பேச்சாளர். புழுக்களின் உடலில், புலியின் ரத்தத்தைப் பாய்ச்சிய ரசவாதி!

ஹிட்லர் பேசத் துவங்கி விட்டால்... 'ஜெர்மனி, ஜெர்மானியர்களுக்கே. துரோகம் செய்த யூதர்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கவேண்டும்' என்று உறுதி ஏற்றுக் கொண்டு, கும்பல் கும்பலாக யூதர்களைக் கொல்வதற்கு ஜெர்மானிய மருத்துவர்கள் விதவிதமான ஆலோசனை வழங்கினார்கள். புதிது புதிதாகக் கொலைக் கருவிகளை ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துக் கொடுத்தனர். குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்று ஐம்பது லட்சம் யூதர்களை இனப்படுகொலை செய்து அழித்தார், ரத்தவெறி பிடித்த ஹிட்லர்!

அடால்ஃப் ஹிட்லர்

'ஹிட்லர் செய்வது சரியே. அவர் ஜெர்மனியின் நலனுக்காகத்தானே பேசுகிறார், போராடுகின்றார்' என்று நம்பி அத்தனை நாள்களாக ஆதரவு தெரிவித்த ஜெர்மனி மக்கள் (ஆரியர்கள்), தாங்கள் பேராபத்தில் இருப்பதை உணர்வதற்குள்ளாகவே எல்லாம் முடிந்து விட்டது. ஜெர்மனி, நாஜிக்கள் மயமாகிவிட்டதை உணர்ந்தபோது... எல்லாம் கைமீறிப் போய்விட்டது.

பாதிக்கப்பட்டவனின் குரல்!

ஹிட்லருக்குத் தார்மீக ஆதரவு அளித்து, பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் குமுறல் சொல்லில் அடங்காது. அத்தகையோரின் எண்ணிக்கையும் எண்ண முடியாதது. இறைப்பணியாளர் மார்ட்டின் நெய்ம் எழுதிய கவிதை வரிகளே அதற்கு சாட்சி.

'நாஜிக்கள், முதலில் பொதுவுடைமை கம்யூனிஸ்ட்டுகளைக் கைது செய்தனர்

நான் கேட்கவில்லை. காரணம், நான் கம்யூனிஸ்ட் அல்ல

அவர்கள், தொழிற்சங்கவாதிகளைக் கைது செய்தனர்

நான் கேட்கவில்லை. காரணம், நான் தொழிற்சங்கவாதியல்ல

அவர்கள் யூதர்களைத் தேடி கைது செய்தனர்

நான் கேட்கவில்லை. காரணம், நான் யூதனல்ல

என்னைக் கைது செய்தனர்

யாரும் கேட்கவில்லை. காரணம், நான் யாருக்காகவும் பேசவில்லை'

- இந்தக் கவிதை வரிகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. அது இப்போதும் இந்தக் காலத்துக்கும் பொருந்தும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சர்வாதிகாரத்துக்கு நாமும் துணை போனவர்கள் ஆவோம். சர்வாதிகாரம் என்பதற்குத் தனிமனித கோளாறு மட்டும் காரணம் அல்ல. அடங்கிப் போவதையே வாழ்க்கையாகக் கொண்ட தலைவிதி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே முக்கியக் காரணம்.

அடால்ஃப் ஹிட்லர்

அங்கம் முழுக்க அகம்பாவம்... அளவில்லா ஆணவம்!

'உலகம் என் காலடியில்' என்ற கர்வம். உதட்டளவில் உறவு... உள்ளத்திலே பகை. 'ஆண்டவன் கூட ஹிட்லர் மீது நம்பிக்கை கொள்ளமாட்டான்' என்கிற அளவுக்கு சர்வாதிகார வெறி ஹிட்லரின் கண்களை மறைத்தது.

பகைநாடு எது... நட்பு நாடு என்று பார்க்காமல், திட்டமிடாமல் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மீது யுத்தம் என்று உலக நாடுகள் மீதான ஆதிக்கப் போர்களைத் தொடுத்தார் ஹிட்லர். பொருளாதார வல்லரசான அமெரிக்கா மீது படையெடுக்க ஆயத்தம் ஆனார். ரஷ்யாவின் மீது பகைமைப் பாராட்டிய உக்ரைன் நாட்டைக்கூட தன் நட்பாகப் பாவிக்காமல், அதன் மீதும் யுத்தம் நடத்தினார். ஆக, 'ஹிட்லரின் ஆணவத்துக்கு அளவே இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தே தீரவேண்டும்' என்று நேசநாடுகள் கூட்டாகப் போரில் குதித்தன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஒருபுறமும், ரஷ்யா மறுபுறமும் இணைந்து இருமுனைத் தாக்குதலைத் தொடுத்தன.

மரணத்துக்குத் தயாரான மரண வியாபாரி!

தோல்வியின் முகட்டுக்கு ஜெர்மனி வந்தபோது, சமாதானத்துக்கு முயற்சி செய்து தோல்வியைத் தழுவியது. 'இனி தப்ப முடியாது' என்ற சூழலில்தான் ஏப்ரல் 24 ரஷ்யாவின் ரெட் ஆர்மியிடம் ஜெர்மன் படை சரணடைந்தது.

ஜெர்மனி, இரண்டானது. அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் கைப்பற்றிய பகுதிகள்... மேற்கு ஜெர்மனி. ரஷ்யா கைப்பற்றிய நிலப்பரப்பு... கிழக்கு ஜெர்மனி என நாடு இரண்டானது. தலைநகர் பெர்லினுக்கு ஊடாக சுவர் எழுப்பப்பட்டது (காலங்கள் பல கடந்து சுவர் இடிக்கப்பட்டு, நாடு ஒன்றானது பிந்தைய வரலாறு).

தோல்விக்குப் பொறுப்பேற்று மரணத்துக்குத் தயாரானார் மரணவியாபாரி ஹிட்லர். நேச நாட்டுப் படைகள் தன்னைக் கைது, தன் நண்பர் இத்தாலியின் சர்வாதிகாரி பாசிஸ்ட் முசோலினியின் மோசமான படுகொலையைப் போன்று, அவமானகரமான மரணம் தனக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று முதன்முதலாக அச்சம் ஏற்பட்டது ஹிட்லருக்கு. பயம் அவருடைய கண்களில் தெரிந்ததாகப் பின்னாளில் அங்கு இருந்தவர்கள் எழுதியுள்ளனர்.

'தன்னுடைய ஆதர்ச நாயகனான ஃபிரான்ஸ் சக்கரவர்த்தி நெப்போலியன் போனபார்ட் மறைந்த மே 5-ம் தேதியன்று மரணத்தைத் தழுவலாம்' என்று திட்டமிட்டார் ஹிட்லர். ஆனால், பலருக்கும் நாள், நேரமெல்லாம் குறித்து, கொன்றுக் குவித்த சர்வாதிகாரி ஹிட்லரின் உயிருக்குக் காலம் வெகு வேகமாக நாள் குறித்துவிட்டது.

முடிவுக்கு வந்த மோசமான சகாப்தம்!

'எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவோம்' என்ற நிலையில், நீண்டநாள் காதலியான ஈவாபிரனுக்கு 'மனைவி' என்ற அந்தஸ்தை மரணத்தருவாயில் வழங்கி, 1945 ஏப்ரல் 30 அன்று மதிய உணவுக்குப் பின் தன் இறுதி ஆணையை ராணுவ தளபதிக்குப் பிறப்பித்தார். 'என்னுடைய மரணத்துக்குப் பின் சாம்பல்கூட எதிரிகளுக்குக் கிடைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு, ஹிட்லரும் ஈவாபிரானும் நிலவறைக்குள்ளே சென்று கதவைத் தாழிட்டனர்.

பத்து நிமிடம் கழித்துத் திறந்து பார்த்தபோது மார்பில் தன் தாயின் புகைப்படத்தைத் தழுவியபடி, நெற்றியில் தோட்டாக்கள் பாய்ந்து ரத்தம் வழிந்தோட ஹிட்லரின் உடல் கிடக்க, அவர் மீது சாய்ந்தபடியாகக் கிடந்தது ஈவாபிரானின் உடல். இருவரும் சனைடையும் உண்டிருந்தனர். ஹிட்லரின் உத்தரவுப்படியே, இரண்டு உடல்களும் எரிக்கப்பட்டு, சாம்பல்கூட மிஞ்சாத அளவுக்குத் தண்ணீர்விட்டுக் கழுவப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் பிறந்து, ஏப்ரலிலேயே முடிவுக்கு வந்தது சர்வாதிகாரியின் மோசமானதொரு சகாப்தம்! ஆனால், சர்வாதிகாரத்துக்குச் சாவு மணி அடிக்கப்பட்டுவிடவில்லை.

மானிடம் எம்மை மோசம் செய்தால்

வகையறிவோம் வழியுமறிவோம்

அன்னையர் நாட்டுக்கு உண்மையாய் உழைத்தோம்

ஹிட்லரின் சக்தி இதயத்திலே பதிந்து நிற்கிறது

அதை அழிக்க யாருக்குத் திறனுண்டு

மீண்டும் எழுந்து நிற்பார் எங்கள் ஹிட்லர்

புயற்காற்றென முடுகிநிற்பார் எங்கள் ஹிட்லர்

- ஹிட்லரின் மரணத்தையடுத்து, அவருடைய நண்பர் ஒருவர் எழுதிய கவிதை இது. இன்றும்கூட சர்வாதிகாரம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்பதற்கு எத்தனையோ நாடுகளை எடுத்துக்காட்டாகக் காட்டமுடியும். அதேபோல, சர்வாதிகாரிகளும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ நபர்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

இனப்படுகொலை செய்தவர்களுக்கும் இனப்படுகொலை செய்ய நினைப்பவர்களுக்கும் ஹிட்லரின் வாழ்க்கை ஒரு பாடம். எமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள், தங்கள் சொந்தநாட்டு மக்களால் நாட்டைவிட்டு விரட்டப்பட்டு, நிலவறையில் தஞ்சம் அடைந்ததைச் சிலமாதங்களுக்கு முன்பு கண்டோம். ஆனால், அது முடிவல்ல!

கட்டுரையாளர் : மல்லை சி.ஏ.சத்யா

மூளையை மழுங்கடித்த மதபோதை!

யூதர்களின் அராஜகம், அன்றிலிருந்து இன்றுவரை தொடரத்தான் செய்கிறது. இப்போதும்கூட இஸ்ரேல் எனும் சிறு பிரதேசத்தைக் கட்டமைத்து, பாலஸ்தீன மக்களை மட்டுமல்ல, உலகையே மிரட்டிக் கொண்டுதான் உள்ளனர். அப்பயிருக்க, ஹிட்லரின் காலத்தில் அந்த ஒரு சதவிகித யூதக்கூட்டம் நடத்திய கொடுமைகள் சொல்லி மாளாதுதான். அதற்கு எதிராக மக்களைத் திரட்டிய ஹிட்லர், அந்த இயக்கத்தை வெகுஜன மக்கள் இயக்கமாகக் கட்டமைத்து, யூதர்களும் உண்மையை உணரும்படி செய்து, அனைவரையும் அரவணைத்து நாட்டைக் கட்டமைத்திருந்தால்... அவருடைய சர்வாதிகாரம், ஜனநாயகத்தை வென்றெடுத்திருக்கும். இன்றைக்கு உலகம் முழுக்கவே சர்வாதிகாரம் வேரோடும்... வேரடி மண்ணோடும் சாய்க்கப்பட்டிருக்கும். ஆனால், உலகையே சூறையாட நினைக்கும் அளவுக்கு மூளையை மழுங்கடித்துவிட்டது மதபோதை.

எந்த மதபோதை கொண்டவர்களுக்கும் ஹிட்லரின் மரணம்... பாடமே!

குறிப்பு:

’ஹிட்லர் இறக்கவில்லை!’

ஹிட்லர், தற்கொலை செய்து கொண்டதை இங்கிலாந்து ஆய்வாளர்கள் மறுக்கின்றார்கள். ஏன், அமெரிக்கா உளவுத்துறையும் உலகம் முழுவதும் தேடத்தான் செய்தது. 'ஹிட்லரின் ஆத்மாத்மா நண்பன் மார்ட்டின் பார்மணின் யோசனைப்படி, உலகநாடுகளை ஏமாற்றுவதற்காக, இறந்துபோன வேறு இரண்டு உடல்கள் எரிக்கப்பட்டன. ஹிட்லர் தப்பிவிட்டார்' என்று சொல்லப்படுவதை மறுப்பதற்கு இல்லை. காரணம், ஹிட்லரின் எச்சங்கள் இன்றும்கூட, 'ஆரிய இனமே உயர்ந்தது' என்று கூக்குரல் இட்டபடிதானே இருக்கின்றன உலகம் முழுக்கவே!

- மல்லை சி.ஏ.சத்யா

துணை பொதுச் செயலாளர் ம.தி.மு.க. தலைவர், மல்லைத் தமிழ்ச் சங்கம்.



from India News https://ift.tt/lXPs8t4

Post a Comment

0 Comments