``நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும்; மீண்டும் அதிமுக ஆட்சி" - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க கழக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி தொண்டர்கள் மாவட்ட எல்லையான தலைவாசலில் ஒன்று கூடி வரவேற்பு அளித்தனர். தலைவாசல் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “பல்வேறு தடைகளை கடந்து இன்று உங்கள் முன் கட்சியின் பொதுச் செயலாளராக நின்றுக்கொண்டிருக்கிறேன்.

தமிழகத்தில் சாதாரண கட்சி தொண்டனால், ஒரு கட்சியின் உச்சக்கட்ட பொறுப்புக்கும் செல்லமுடியும் என்பதற்கு நானே ஒரு முன் உதாரணம். ஆனால் அ.தி.மு.கவின் வளர்ச்சி பிடிக்காததால் இன்று ஆளுங்கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை நம் மீது வைத்து வருகின்றனர். அ.தி.மு.க என்பது தொண்டர்களுக்கான கட்சியே தவிர, வாரிசுகளுக்கான கட்சி கிடையாது. ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கான கட்சி நடத்தாமல் குடும்பக்கட்சி நடத்தி வருகிறார். இதில், அமைச்சர் துரை முருகன் வேற உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் இன்பநிதிக்கும் நானே உடன் இருப்பேன் என்று பேசுகிறார். இவரை போன்ற அடிமைகளால் தான் கட்சி இன்னும் பாதாளத்திற்கு சென்றுக்கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோர், கட்சியை வழிநடத்தும்போது சந்தித்த சோதனைகளை, நாமும் சந்தித்து கொண்டிருக்கிறோம். அவர்கள் வகித்த பதவியை, தற்போது தொண்டர்கள் எனக்கு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரையும் பொதுச் செயலாளராக தான் நான் பார்க்கிறேன். விரைவில் தி.மு.கவை வீட்டுக்கு அனுப்பும் விதமாக வருகின்ற 2024 இல் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. அப்படி வந்தால் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றார்.



from India News https://ift.tt/DHOJb09

Post a Comment

0 Comments