``சீமான் இப்படியே பேசிக்கொண்டிருப்பதும் நல்லதுதான்..!” - சொல்கிறார் ஆளூர் ஷாநவாஸ்

``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க கொண்டுவந்த 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்த்த தி.மு.க அரசு, இப்போது கொண்டுவருவது எதற்காக... கூட்டணியைப் பகைத்துக்கொள்ளவா?”

“கூட்டணியைப் பகைத்துக் கொள்ள வேண்டுமென்றால் மசோதாவை ஏன் நிறுத்தி வைக்கவேண்டும்... ஓர் அரசுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டியது, நிதியாதாரத்தைப் பெருக்க வேண்டியது என அரசுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அதே சமயம் மக்களை கவனிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த மசோதாவை கொண்டுவருவதற்கு முன்பு ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்திடம் ஆலோசித்திருந்தால்கூட, ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் விஜயபாஸ்கரையும் உள்ளடக்கி குழு அமைத்தார்கள். அப்படியொரு ஜனநாயகமான நடவடிக்கையை இந்த விவகாரத்திலும் எடுத்திருந்திருக்கலாம்.”

அண்ணாமலை

“அண்ணாமலை வெளியிட்ட DMK files ஊழல் பட்டியல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?”

“அண்ணாமலை பொறுப்பேற்ற நாளிலிருந்து ஏதாவது ஒரு ஃபைல் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஒரு மாதம் கழித்து அவரே அது குறித்து திரும்பப் பேசமாட்டார். மைக்கேல்பட்டி மாணவி மரண விவகாரத்துக்கு மதமாற்றம்தான் காரணம் என்றார். ஆனால் என்ன ஆனது... முதல்வர் கடந்த ஆண்டில் துபாய்க்குச் சென்றது ரூ.5,000 கோடி சொந்தப் பணத்தை முதலீடு செய்ய என்றார். என்ன ஆனது... ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என பெருமைப் பேசிக்கொள்ளும் பா.ஜ.க மீதுதான் இப்போது ஆருத்ரா மோசடிப் புகார் வந்திருக்கிறது. ஆர்.கே.சுரேஷை ஏன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட்கூட செய்யவில்லை. அமர்பிரசாத் ரெட்டிமீது புகார் வந்திருக்கிறதே... என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?"

“ `DMK files பிற மாநிலங்களைப்போல ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தரும் முயற்சி' என தி.மு.க-வினர் கூறுகிறார்களே?”

“நிச்சயமாக இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைதான். குற்றச்சாட்டு எல்லோர்மீதும் வரும். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. அதைப்பற்றி பேசுவாரா அண்ணாமலை... கர்நாடகாவில் 40% கமிஷன் முதல்வர் என பொம்மை அரசுமீது ஊழல் புகார்கள் வெடித்ததே, ஏன் அங்கு ரெய்டுகூட நடத்தவில்லை... இதிலிருந்தே தெரியவில்லையா பா.ஜ.க-வின் ஊழல் ஒழிப்பு அப்பட்டமான நாடகம் என்று?”

நிதியமைச்சர் பி.டி.ஆர்

“பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே?”

“ஆங்கில ஊடகங்களில் பி.டி.ஆர் கொடுக்கும் பேட்டிகள் அவர்களை கதறவைக்கின்றன. ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவுகளை மாநிலங்கள் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறார். உச்ச நீதிமன்றமும் இதை அப்படியே சொன்னது. பி.டி.ஆர் முன்வைக்கும் வாதங்களை நிர்மலா சீதாராமனால் எதிர்கொள்ள முடியவில்லை. மற்ற மாநில நிதியமைச்சர்களையும் தூண்டிவிடுவதாக பி.டி.ஆரின் பேச்சுகள் இருக்கின்றன. அதைப் பார்த்து மத்திய அரசுக்கு அச்சம் வருகிறது. தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவே முடியாது, அதைவைத்து அரசியலாக்கலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கும்போது, அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதியாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்கிறார். ஆளுநர் மாளிகையில் நடந்த முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆளுநர் மாளிகை நிதியில் கைவைத்துவிட்டார். எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்ற பழமொழிபோல, அடிமடியிலேயே பி.டி.ஆர் கைவைத்துவிட்டார். அதனால் பி.டி.ஆர் குறிவைக்கப்பட்டிருக்கிறார்.”

``தமிழ்நாட்டு அரசியலில் கண்ணியம் இல்லை என கர்நாடகாவில் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?”

“அது அவருக்கான சுய விமர்சனம். கண்ணியமாக இருந்த தமிழ்நாட்டு அரசியலை கண்ணியக்குறைவாக மாற்றிவிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.”

“எல்லோரும் கேட்டதைப்போலவே வாட்ச் பில் கொடுத்துவிட்டாரே... அது கண்ணியம் இல்லையா?”

“அண்ணாமலை கொடுத்த வாட்ச் பில் மிகப்பெரிய ஊழல். 3 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்து வாங்கக் கூடாது என அவருக்குத் தெரியாதா... ஜனவரியில் வாங்கியதாக பில் காட்டியிருந்தால் வேட்பு மனுத்தாக்கலில் ஏன் காட்டவில்லை எனக் கேட்பார்கள் என்பதற்காக, தேதியை மாற்றியிருக்கிறார். இது அப்பட்டமான தகிடுதத்தம். கீரைக்கட்டுகூட ஜி-பேயில் வாங்குகிறார்கள். இது மோடியின் டிஜிட்டல் எகானமி வளர்ச்சிக்கான சாதனை என பெருமைப் பேசுகிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ரொக்கப் பணம் கொடுத்து வாட்ச் வாங்கியிருக்கிறார். இது மோடியின் டிஜிட்டல் எகனாமி வளர்ச்சியைச் சந்தி சிரிக்கச் செய்யும் செயல் இல்லையா?”

“பா.ஜ.க-விலிருந்து வருவோருக்கு வி.சி.க-வில் இடமில்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார். ஆனால் சமீபத்தில் இருவரைச் சேர்த்திருக்கிறீர்களே?”

“இருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தவறான புரிதலின் அடிப்படையில் அங்கு சென்றுவிட்டார்கள். எனவே திரும்பி வருகிறார்கள் என்பதால் ஏற்றுக்கொண்டோம். இவர்கள் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்திருக்க மாட்டார்கள். அப்படியிருந்தால்தான் ஆபத்து.”

திருமாவளவன்

“மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை வைப்பதாக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறாரே?”

“சட்டமன்றத்தில் எனது அறிமுக உரையிலேயே வைத்த கோரிக்கை இது. அதை நிறைவேற்றுவதாக முதல்வர் அறிவித்ததில் மகிழ்ச்சி. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததுடன், அவரின் எழுத்துப் பேச்சுகளை அரசு செலவில் வெளிக் கொண்டுவந்தவர் வி.பி.சிங். காவிரி வாரியம் உட்பட தமிழ்நாட்டுக்கும் எண்ணற்றவற்றைச் செய்துகொடுத்தவர் வி.பி.சிங். பொற்கால ஆட்சியைக் கொடுத்த வி.பி.சிங்குக்கு இவ்வளவு காலம் எதுவும் செய்யாததே பெரும் பின்னடைவு. அந்தப் பின்னடைவை முதல்வர் சரி செய்திருக்கிறார். சமூகநீதிக்காகப் பங்காற்றிய வி.பி.சிங்குக்கு இன்னும் பல அடையாளங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.”

சீமான்

“பெரியார் சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் 2-வது திருமணம் செய்துகொண்டார் என சீமான் கூறியிருக்கிறாரே?”

“பெரியார் சொத்துகளைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைத்திருந்தால் தென்னந்தோப்பை அழித்திருக்க மாட்டார். ஆதரவற்ற குழந்தைகள் மையத்தை ஏற்படுத்தியிருக்க மாட்டார். கல்விக்கூடங்கள் கட்டியிருக்க மாட்டார். பதவியையும், பணத்தையும் விட்டுவிட்டு சமூக சீர்திருத்தப் பணிக்கு வந்திருக்க மாட்டார். இப்போது பெரியாருக்கு நேரெதிரான சித்தாந்தத்தில் சீமான் பயணிக்கிறார் என்பதால் அவரைக் கொச்சைப்படுத்தும் வகையில் அப்படி பேசியிருக்கிறார். பெரியார் என்கிற ஆளுமையை அடித்து நொறுக்க வேண்டுமென்ற பின்புல நோக்கம் சீமானுக்கு இருக்கிறது. ஆனால் அது எடுபடாது. சீமானுடைய பேச்சு உண்மைதானா என்று இளைஞர்கள் பெரியாரை தேடிப்பிடித்து படிக்கிறார்கள். எனவே சீமான் இப்படியே பேசிக்கொண்டிருப்பது நல்லதுதான்..”



from India News https://ift.tt/IlfB19L

Post a Comment

0 Comments