"எல்லோருக்கும் தேசத்துரோக சான்றிதழ் வழங்குபவர்கள், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதில் சொல்ல வேண்டும்" என அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், "புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான தகவல்களைக் கூறியிருக்கிறார். இது குறித்து மோடி அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.
அதில், 'வீரர்கள் விமானத்தில் ஏன் அனுப்பப்படவில்லை?; எல்லைக்கு மிக அருகில் 300 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து எப்படி பதுக்கி வைக்கப்பட்டது?; பிரதான சாலையைச் சந்திக்கும் மற்ற சாலைகள் ஏன் மூடப்படவில்லை?; ஜெ.இ.எம்- இயக்கத்தால் அச்சுறுத்தல் இருப்பதாக பல உளவுத்தகவல்கள் வந்த பின்பும் அந்தச் சாலையில் செல்ல வீரர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?; டி.எஸ்.பி தேவேந்திர சிங் இன்று எங்கிருக்கிறார்?' உள்ளிட்ட சந்தேகங்கள் இருக்கின்றன.
இது மோடி அரசின் அலட்சியம் மற்றும் அக்கறையின்மையின் விளைவால் நிகழ்ந்திருக்கிறது. மாலிக் சாதாரண நபர் அல்ல. 2019-ம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்திருக்கிறார். ஏற்கெனவே கோவா, பீகார், மேகாலயா போன்ற மாநிலங்களின் ஆளுநராக மோடி அரசால் நியமிக்கப்பட்டவர். இதன் மூலம் மோடியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர் என்பது தெளிவாகிறது.
எல்லோருக்கும் தேசத்துரோக சான்றிதழ் வழங்குபவர்கள் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இது தேசத்துரோகம் இல்லையா... சத்யபால் மாலிக் பொய் சொல்கிறார் என்றால், பிரதமர் அவர்மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும். அதற்குப் பதிலாக சி.பி.ஐ மூலம் சம்மன் அனுப்பி மிரட்ட முயல்கிறது மோடி அரசாங்கம். இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்குப் பிறகும் பிரதமர் பதவியில் நீடிக்க மோடிக்கு என்ன உரிமை இருக்கிறது. பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் ராஜினாமா செய்யக் கோருகிறோம்" என்றார்.
from India News https://ift.tt/6w4z8lg
0 Comments