``இந்துமத ஆச்சாரப்படி வாழ்கிறேன்" - உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்த சி.பி.எம் எம்.எல்.ஏ!

கேரள மாநிலத்தில் சி.பி.எம் கட்சி, கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளை சி.பி.எம் கூட்டணி கைப்பற்றியதால், பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார். இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக சி.பி.எம் வேட்பாளர் ஏ.ராஜா வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான டி.குமாரை விட 7,848 வாக்குகள் கூடுதலாக பெற்று ஏ.ராஜா வென்றார்.

தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜா

தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட ஏ.ராஜா பதவி ஏற்பின்போது தமிழில் உறுதிமொழி வாசித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் தனித்தொகுதியான தேவிக்குளத்தில் தான் கிறிஸ்தவர் என்பதை மறைத்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து ஏ.ராஜா போட்டியிட்டகாகவும், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட டி.குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏ.ராஜாவின் தந்தை ஆன்றணியும், அவரது தாய் எஸ்தரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏ.ராஜா கிறிஸ்தவ சபையின் அங்கமாக உள்ளதாகவும், ராஜாவின் மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது என உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 20-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏ.ராஜா மேல் முறையீடு செய்தார். வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது இந்துமத ஆச்சாரப்படி ஏ.ராஜா வாழ்ந்துவருவதாக அவரின் வழக்கறிஞர்கள் கோர்ட்டில் தெரிவித்தனர். அதை எப்படி நீதிமன்றம் புரிந்துகொள்ள முடியும் என நீதிபதிகள் விசாரணை செய்தனர். அப்போது ஏ.ராஜா கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும், அவரது மனைவியின் கழுத்தில் சிலுவை உள்ளதாகவும், திருமணத்தை சர்ச் பாதிரியார் நடத்தி வைத்ததாகவும் மனுதாரரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமாரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம்

அதே சமயம் தேவிக்குளம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்துவிட வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டினர் ஏ.ராஜாவின் வழக்கறிஞர்கள். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை நிபந்தனைகளுடன் நிறுத்தி வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ ராஜா சட்டசபைக்குச் செல்லலாம். அதே சமயம், சட்ட சபையில் நடக்கும் வாக்கெடுப்புகளில் ஓட்டளிக்கக்கூடாது என்பது போன்ற தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஜூன் 12-ம்.தேதி இறுதிகட்ட வாதங்களை கேட்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.



from India News https://ift.tt/HZYvT5V

Post a Comment

0 Comments