சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு, அதற்கான நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், நினைவு பேனா சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற்ற சுற்று சூழல் அமைச்சக கூட்டத்தில் இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஐஎன்எஸ் கடற்படை அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் அதில் இடம்பிடித்துள்ளது.
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ``கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.
மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
from India News https://ift.tt/a5X4MOe
0 Comments