தென்னிந்திய ஸ்டார்களைக் குறிவைக்கும் பாஜக-வின் ‘பான் இந்தியா’ பிளான்! - பின்னணி என்ன?

திரையுலகப் பிரபலங்களை தங்கள் கட்சியில் இணையவைப்பது அல்லது தங்களின் ஆதரவாளர்களாக மாற்றுவது என்ற முயற்சியில் பா.ஜ.க நீண்டகாலமாக ஈடுபட்டுவருகிறது. தென் இந்தியாவைப் பொறுத்தளவில் கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ.க செல்வாக்காக இருக்கிறது.

கிச்சா சுதீப்

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரிய கட்சியாக பா.ஜ.க வளரவில்லை. தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சியில் பா.ஜ.க தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்த நிலையில், தென் இந்தியாவில் பிரபலமான திரைக்கலைஞர்களை பா.ஜ.க-வில் இணைப்பது, அல்லது அவர்களை பா.ஜ.க-வின் ஆதரவாளர்களாக மாற்றுவது என்கிற முயற்சியில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு, ஆட்சியைத் தக்கவைக்க கடுமையான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டிருக்கிறது. இந்த நிலையில், பிரபல சினிமா நட்சத்திரங்களான கிச்சா சுதீப், தர்ஷன் தூகுதீபா ஆகியோர் பா.ஜ.க-வில் இணையப்போவதாகச் செய்திகள் பரபரத்தன. அதை உறுதிசெய்யும் வகையில், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக கிச்சா சுதீப் அறிவித்திருக்கிறார். பா.ஜ.க-வில் தாம் இணையவில்லை என்று தெரிவித்த கிச்சா சுதீப், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்யப்போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்தித் திணிப்பு தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, “தேசிய மொழியாக இந்தி ஒருபோதும் இருக்க முடியாது“ என்ற கருத்தைத் தெரிவித்தவர் கிச்சா சுதீப்.

பசவராஜ் பொம்மையுடன் கிச்சா சுதீப்

பின்னர், பா.ஜ.க-வைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கிச்சா சுதீப் சந்தித்தார். அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, “சுதீப் எந்தக் கட்சியையும் சாராதவர். அவர், தனக்கு ஆதரவு தெவித்திருப்பது பா.ஜ.க-வை ஆதரிப்பதாகும்” என்றார்.

கிச்சா சுதீப்பின் முடிவுக்கு அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக சுதீப் அறிவித்த உடனேயே, #WedontwantKichchainpolitics என்ற ஹெஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. ‘அரசியலில் இறங்காதீர்கள். சினிமாவில் நடிப்பதைத் தொடருங்கள்’ என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வேண்டுகோள் விடுத்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்துக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா பா.ஜ.க தலைவர் பண்டி சஞ்சய் குமார், கட்சியின் தெலங்கானா பொறுப்பாளர் தருண் சுக் ஆகியோர் இரவு விருந்தில் கலந்துகொண்டனர். அப்போது, ஜூனியர் என்.டி.ஆரை அரசியலுக்கு வருமாறு அமித் ஷா அழைத்ததாகச் செய்திகள் பரபரத்தன.

அமித் ஷா - ஜூனியர் என்.டி.ஆர்

தமிழ்நாட்டில் அதிகமான சினிமா பிரபலங்களைக் கொண்டிருக்கும் கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. ராதா ரவி, குஷ்பு, கௌதமி உட்பட பிரபலமான சினிமா கலைஞர்கள் பா.ஜ.க-வில் இருக்கிறார்கள். சமீபத்தில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகியாக இருந்த நடிகை காயத்ரி ரகுராம் சில மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகினார்.

பா.ஜ.க விரித்த வலையில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா விழுந்துவிட்டார் என்ற சர்ச்சை கடந்த ஆண்டு எழுந்தது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு ஒரு நூலுக்கு இளையராஜா அணிந்துரை எழுதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடைசியில், மாநிலங்களவை எம்.பி பதவி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை இளையராஜா நிகழ்த்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி - இளையராஜா

மக்கள் மத்தியில் பிரபலமாகவும் செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் சினிமா கலைஞர்கள் இருப்பதால், அவர்களைப் பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கலாம் என்பது பா.ஜ.க-வின் கணக்கு. அது எந்தளவுக்கு பலிக்கும் என்பது தெரியவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க-வில் பெரிய சினிமா பட்டாளம் இருந்தபோது, அவர்கள் மூலமாக பா.ஜ.க வளர்ந்ததாகத் தெரியவில்லை.

கர்நாடகாவில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப்போவதாக நடிகர் கிச்சா சுதீப் அறிவித்ததற்கு, “எத்தனை சினிமா நட்சத்திரங்கள் வரலாம், போகலாம். ஆனால், அரசியல் என்பது சினிமாவிலிருந்து வேறுபட்டது. அவர்களால் தேர்தல்களில் எந்தத் தாக்கமும் ஏற்படாது” என்றார் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான டி.கே.சிவக்குமார்.

ரஜினி, மோடி

``தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஏராளமான காய்நகர்த்தல்களை பா.ஜ.க மேற்கொண்டது. ஆனால், பா.ஜ.க-வின் திட்டம் எதுவும் வெற்றிபெறவில்லை" என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனாலும், திரைப்பிரபலங்களைக் கட்சிக்குள் கொண்டுவரும் முயற்சியில் மனம் தளராமல் பா.ஜ.க ஈடுபட்டுவருகிறது.



from India News https://ift.tt/md1B4AC

Post a Comment

0 Comments