சிவசேனாவில் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு முதல் முறையாக ஜல்காவ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மாவட்டத்தில் இதற்கு முன்பு சிவசேனாவிற்கு 5 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களில் 4 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவிவிட்டனர். அப்படி இருந்தும் பொதுக்கூட்டத்திற்கு மக்கள் கணிசமாக வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே, ``இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது உண்மையான சிவசேனா யாருடையது என்று பாகிஸ்தான் கூட சொல்லும். ஆனால் தேர்தல் கமிஷனுக்குத்தான் கண்புரை ஏற்பட்டுள்ளது. கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் துரோகிகளை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்டுவார்கள். நான் கட்சி மற்றும் சின்னத்தை இழந்த பிறகும் இந்த அளவுக்கு வந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள். எனவே அவர்கள் அரசியல் ரீதியாக ஒழிக்கப்படுவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். மகாராஷ்டிரா துணிச்சலான மக்களுக்காக நிலம். துரோகிகளுக்கானது கிடையாது. வெற்றி பெறும் வரை தொண்டர்கள் போராடவேண்டும். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் ஷிண்டே தலைமையில் தேர்தலை சந்திப்பார்களா என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும். ஷிண்டே அணிக்கு 48 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் பவன்குலே தெரிவித்துள்ளனர். இதனையும் பா.ஜ.க. தெளிவுபடுத்தவேண்டும்.
எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பா.ஜ.க-வுக்கு வந்துவிட்டால் அவர்கள் சுத்தமானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் மாறிவிடுகின்றனர். அவர்கள் தங்களது ஒரிஜினல் கட்சியில் இருக்கும் போது எப்படி ஊழல் செய்ய முடியும்? சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவை பயன்படுத்தி மிரட்டி அவர்களை உங்களது கட்சியில் சேரும்படி நிர்ப்பந்தம் செய்கிறீர்கள். அனில் தேஷ்முக், சஞ்சய் ராவத் போன்ற துணிச்சலான சிலர் அவர்களின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியவில்லை. தைரியம் இருந்தால் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம். நாங்கள் அதனை எதிர்கொண்டு சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்களில் எத்தனை மீது நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்று பார்ப்போம்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவர் மீது சிபிஐ விசாரணை நடத்துகிறது. நாட்டில் வேறு எந்தக்கட்சியும் இருக்கக்கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது. அதனால்தான் அக்கட்சிகளில் இருந்து தலைவர்களை அபகரிக்கிறது. பிரதமர் மோடியின் நண்பர் அதானி உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகிவிட்டார். ஆனால் விவசாயிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அதானி வெற்றிகரமான தொழிலதிபர் என்றால் அவரது வெற்றி கதையை புத்தகமாக கொண்டு வரவேண்டும்.
எம்.எல்.ஏ.க்கள் எங்களை விட்டு சென்று இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வாக்களித்த மக்கள் இன்னும் எங்களுடன்தான் இருக்கின்றனர். துரோகிகளுக்கு இங்கு கூடியிருக்கும் மக்கள் தக்க பாடம் கற்பிக்கவேண்டும். உங்களிடம் நான் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. நான் பா.ஜ.க-வுக்கு பயப்படவில்லை. ஆனால் நாட்டில் பா.ஜ.க.ஏற்படுத்திய சேதத்தை எப்படி சரி செய்யப்போகிறோம் என்பதுதான் கவலையாக இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே எந்நேரமும் மகாராஷ்டிராவில் தேர்தல் வரலாம்” என்று தெரித்தார். இப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்புதான் சஞ்சய் ராவத் எம்.பி. அடுத்த 20 நாட்களுக்குள் ஷிண்டே அரசு கவிழும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
from India News https://ift.tt/QSVwRf6
0 Comments