``அண்ணாமலை கூறிய கருத்தைச் சர்ச்சைக்குரியதாகப் பார்க்க வேண்டாம்!" - எல்.முருகன்

இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு கட்சியும் இப்போதிலிருந்தே வேலைகளைத் தொடங்கியிருக்கின்றன. அதில் தேசியக் கட்சியான பா.ஜ.க-தான் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களோடு, ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் அதிகம் கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து குறைந்தது ஐந்து எம்.பி-க்களையாவது பெற வேண்டும் என்று தீவிரம் காட்டுகிறது. இதற்கிடையே, கமலாலயத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான், தமிழ்நாடு முழுவதும் இருக்கிற சக்தி கேந்திர பொறுப்பாளர்களுடன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச்செயலாளர்கள் வழிகாட்டுதல் கூட்டம் நடத்திவருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக சென்னை சாலிகிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க-வின் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி சக்தி கேந்திரா, (பூத் கமிட்டி) பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

தமிழகத்தில் 9 தொகுதிகள் இலக்கு:

"பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலுக்கு இலக்கு வைத்து  பணியாற்றி வரும் 150 தொகுதிகளில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் இருக்கின்றன. அதில் தென் சென்னையை முக்கியத் தொகுதியாகக் கருதுகிறோம். 2024-ல் தென் சென்னையில் பா.ஜ.க வெற்றி பெறும் வகையில் கட்சியினர் உழைத்து வருகின்றனர். தமிழகத்தில் கட்டமைப்புகளை உயர்த்த கடந்த ஒன்பது ஆண்டுக்காலத்தில் மத்திய அரசு ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறது. 

எல்.முருகன், கரு.நாகராஜன்

மத்திய பட்ஜெட்டில் 6,000 கோடி ரூபாய் இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 800 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 1,000 கோடி ரூபாயில் தாம்பரம் ரயில் நிலையம் சீரமைக்கப்பட்டுவருகிறது. ஜே.பி.நட்டாவை மத்திய அமைச்சர் எனும் முறையில் வழக்கமான மரியாதை நிமித்தமான முறையில் நேற்று முன்தினம் சந்தித்தேன். தி.மு.க கூட்டணியிலும் பல சலசலப்புகள் இருக்கின்றன. அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வலிமையாக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க தலைவர்களும் இதைச் சொல்லிவருகின்றனர். 

`அண்ணாமலை கூறிய கருத்தைச் சர்ச்சைக்குரியதாகப் பார்க்க வேண்டாம்!'

அண்ணாமலை தனித்து போட்டியிடுவது குறித்துப் பேசியதாகக் கேட்கிறீர்கள், உட்கட்சி நிர்வாகிகள் கூட்டங்களில் இது போன்ற சில கருத்துகளைக் கூறுவது வழக்கம். அண்ணாமலை கூறிய கருத்தைச் சர்ச்சைக்குரியதாகப் பார்க்க வேண்டாம். அண்ணாமலை வந்த பிறகு கட்சியில் உறுப்பினர்கள் இணைவது குறைந்திருப்பதாகக் கேட்கிறீர்கள். அப்படியெல்லாம் ஏதும் கிடையாது, பா.ஜ.க தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. அண்ணாமலையும் மாநிலத் தலைவராக தனது பங்களிப்பை தந்து வருகிறார்.

எல்.முருகன், கரு.நாகராஜன்

ஸ்டாம்ப் அடிக்கும் தி.மு.க:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும், ஏறக்குறைய 20,000 மாணவர்களுக்கு காலை உணவை இலவசமாக வழங்க 2019-ம் ஆண்டு அப்போதைய தமிழக ஆளுநர்-சென்னை மாநகராட்சி ஆணையருக்குமிடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மாணவர்களுக்குச் சத்தான உணவைத் தயார் செய்வதற்கான உணவுக்கூடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. கொரோனா உச்சத்தில் இருந்த 2019 முதல் 2021 வரையான காலகட்டத்தில் அந்தப் பணிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தைக் கண்காணிக்க ஆளுநர் உத்தரவுப்படி குழு அமைக்க திட்டமிடப்பட்டது. 

தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அட்சயபாத்திரம் திட்டத்தில் உணவு தயாராகும் உணவுக்கூடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், மின் இணைப்பு வழங்க அனுமதி கேட்கப்பட்டபோது, அதிகாரிகள் உரிய  அனுமதியைத் தரவில்லை. அந்த அமைப்பினர் முதலமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்ட பிறகும், அவர்களைப் பார்ப்பதற்கு இன்றுவரை முதலமைச்சர் நேரம் ஒதுக்கவில்லை. அந்தத் திட்டத்தை ஸ்டாம்ப் அடித்து புதிதாக காலை உணவுத் திட்டத்தை தாங்கள் தொடங்கிவைத்ததுபோல தி.மு.க-வினர் சொல்கின்றனர். தி.மு.க-வினர் ஒரு திட்டத்தை காப்பி அடிப்பதை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. 20,000 மாணவர்களுக்கு உணவளிக்கும் அந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தொடங்கிவைக்க வேண்டும்.  

கலாஷேத்ரா விஷயத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.



from India News https://ift.tt/Qy23tlI

Post a Comment

0 Comments