கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலார் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட லலித் மோடி, மோசடி வைர வியாபாரி நிரவ் மோடி குறித்தெல்லாம் விமர்சித்தார். இதையடுத்து, ‘‘ராகுல் காந்தி, ஒரு சாதியையே அவமதித்துவிட்டார்.
‘ஏன் எல்லாத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது?’ என்று பேசியதற்குத் தகுந்த தண்டனை தரப்பட வேண்டும்'' என்று குஜராத் முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி, குஜராத் மாநிலத்தின் சூரத் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் 23-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அந்த தீர்ப்பில், "ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ரூ.15,000 துடன் ஜாமீனுக்கு ஒப்புதல் அளித்தது. மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மறுநாள் அவர் மக்களவையில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யபட்டார். இது நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்தது. அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மறுபுறம் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி கடந்த 3-ம் தேதி சிறைத்தண்டனைக்கு எதிராகவும், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் சூரத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வெளியான தீர்ப்பு அவர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து இந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான, மேல்முறையீட்டாளர் ராகுல் காந்தியின் மனு இதன் மூலம் தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், " காங்கிரஸ் கட்சி தற்போது இருக்கும் அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும். காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி, கட்சியின் எதிர்கால சட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்குவார்" என தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே அவரது எம்.பி தகுதி நீக்கம் தொடரும். வயநாட்டின் முன்னாள் எம்.பியான இவர் 2024 தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மேலும் அந்த கட்சி, "நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை காந்தி எழுப்பிய நேரத்தில் - காந்தியின் வாயை அடைப்பதற்கான பாஜகவின் வழிதான் இந்த தண்டனை" என்று கூறியுள்ளது. மேலும் இதற்கு பலவேறு அரசியல் கட்சிகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். முன்னதாக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது எதிர்பார்த்த ஒன்று தான். குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் கூட அங்கும் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா என்று தெரியவில்லை.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நிவாரணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் வயநாடு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். அப்போது பிரியங்காவை கலத்தில் இறக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது கூட பிரியங்காவை அழைத்துக்கொண்டு தான் ராகுல் வயநாட்டுக்கு சென்றார்.
இந்த விவகாரம் மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. எனவே தான் இதை அதிகபட்ச தண்டனை என்று அனைவரும் கூறுகிறார்கள். அடுத்த நாளே பதவி பறிக்கப்பட்டது, அரசியல் ரீதியிலானது என்று பார்க்கிறார்கள். ராகுல் காந்தி சட்ட போராட்டம் மேலும் அதிகமாக நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்" என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, "இது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. வழக்கு தொடுத்திருப்பவர்கள் தனிப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்.
துரதிஷ்டவசமாக நீதிமன்றங்களை அரசியல் களமாக பயன்படுத்தக்கூடிய சூழல் நிலவுகிறது. ராகுல் காந்தி தொடர்ந்து அதானி, மோடியின் ஊழல்களை ஆதரத்துடன் அம்பலப்படுத்தி வந்தார். மேலும் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இல்லாமை போன்றவற்றுக்காக கடுமையாக போரடி வருகிறார்.
நரேந்திர மோடிக்கு எதிராக போராடும் ஒற்றை குரலாக இருக்கிறார். எனவே தான் இதுபோன்ற அடக்குமுறைகள், அரசியல் பலி வாங்கும் நடவடிக்கைகள், சட்டத்தில் இருக்கும் சந்து பொந்துகள் மூலமாக ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் பயமுறுத்த முடியும் என்று மோடி நம்புகிறார்.
அதற்காக நாங்கள் அச்சப்பட போவதில்லை. சட்ட ரீதியாக இருக்கும் அனைத்து வழிகளையும் பின்பற்றி போராடுவோம். கீழமை நீதிமன்றங்களில் எங்களுக்கு கிடைக்காத நீதி மேலமை நீதிமன்றங்களில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
from India News https://ift.tt/XhKyDR0
0 Comments