சித்தா பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதது ஏன்?!

தமிழ்நாட்டில் புதிய சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவுக்கு ஒப்பதல் அளிக்காமல் இரண்டாவது முறையாக ஆளுநர் ஆர்.என். ரவி மசோதாவை திருப்பியனுப்பிவிட்டார் என சட்டப் பேரவையில் ஆளுநர்மீது குற்றம்சாட்டியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். இதன் பின்னணி குறித்து அலசினோம்.

தமிழக பட்ஜெட்

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு:

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டை கடந்த 2021 ஆகஸ்ட் 13-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, ``முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைத்திடத் திட்டமிட்டார். அதற்கென, உரிய நிலமும் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், இந்த திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப் போல் சித்தாவிற்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாக ரூ.2 கோடி வழங்கப்படும்!" எனக்கூறி முதல்முறையாக சித்தா பல்கலைக்கழகம் தொடர்பான தகவலை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, 2021 செப்டம்பர் மாதம் 2-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதை உறுதிசெய்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்:

அந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதற்கான சட்ட மசோதாவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சு, `தமிழ்நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனி பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் மு.க ஸ்டாலின்

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்!" எனக்கூறி சட்டமசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து, சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்:

அதன்பின்னர், வழக்கம்போல ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்களாக கிடப்பில் வைத்திருந்தார். அதன்பின்னர், சில சந்தேகங்களைக் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார். குறிப்பாக, `சித்தா பல்கலைக் கழகம் நீட் அடிப்படையிலான சேர்க்கையைப் பின்பற்றுமா?' என ஆளுநர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, `வழக்கமாக மருத்துவக் கல்லூரிகளில் என்ன மாதிரியான நடைமுறைகள் இருக்கிறதோ அதே நடைமுறைகள், சித்த மருத்துவ பல்கலைக் கழகத்துக்கும் பின்பற்றப்படும். எதிர்காலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் மாநிலம் வெற்றி பெறும் வரை நீட் அடிப்படையிலான சேர்க்கையைப் பின்பற்றுவோம்' எனப் பதிலளித்து கடந்த 2022 செப்டம்பர் 17-ம் தேதி ஆளுநருக்கு மீண்டும் சட்ட மசோதாவை அனுப்பி வைத்தது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பிய ஆளுநர்:

ஆனால், அதன்பிறகும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் 6 மாதங்களாக கிடப்பில்போட்டு வந்தார். இந்தநிலையில், நேற்று முந்தினம் (18-04-2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையென்றே தெரியவில்லை. ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக இருப்பிலேயே வைத்திருந்தார்" எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், ``தமிழ்நாடு முதலமைச்சரின் அழுத்தத்தின் காரணமாக கேட்டபோது, மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. பிறகு, இரண்டாவது முறையாக மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பப்பட்ட பிறகும் கடந்த மாதம் ஆளுநர் ஒரு விளக்கம் கேட்டு அனுப்பியிருக்கிறார். எல்லோருமே அந்த பல்கலைக்கழகத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்!" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது ஏன்?

`பாரதத்தின் பாரம்பர்யமான பெருமை ஆயுர்வேத மருத்துவம் எனவும் சித்தமருத்துவம்தான் தலைசிறந்த மருத்துவம் அதை மீட்டெடுக்கவேண்டும்' எனவும் மத்திய பா.ஜ.க அரசு பெருமைபேசிவருகிறது. இந்தநிலையில், மத்திய அரசு ஆதரிக்கும் சித்தமருத்துவம் தொடர்பான பல்கலைக் கழகத்தை தமிழ்நாடு அரசு அமைக்கமுன்வரும்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவதற்காக காரணங்கள் குறித்து விவரம் அறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்.

`சித்தமருத்துவ பல்கலைக் கழகம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கும் மசோதாவில், `தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, பிற அனைத்து அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தற்போது இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழக ஆளுநர் ரவி

மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா என்று அனைத்திற்கும் முதலமைச்சரே தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு சட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.' எனவே, அமைக்கப்படும் புதிய சித்தமருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு மாநில முதலமைச்சரே வேந்தராக இருப்பார் என்ற விஷயம்தான் ஆளுநரை அதிருப்திக்குள்ளாக்கும் ஒன்றாக, மசோதாவை கிடப்பில் போடவைத்திருக்கும் காரணமாக இருக்கலாம்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.



from India News https://ift.tt/P3mKF5z

Post a Comment

0 Comments