காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் கே. ஆண்டனி . இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சோசியல் மீடியா அண்ட் டிஜிட்டல் கம்யூனிகேசன் செல் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வகித்துவந்தார். குஜராத் கலவரம் குறித்த பிபிசி டாக்குமெண்டரி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், கேரள மாநிலத்தில் பொது இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் அதை வெளியிட்டனர்.
தடை செய்யப்பட்ட டாக்குமெண்டரி வெளியிட்டதற்கு எதிராக அனில் கே. ஆண்டனி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். "டாக்குமெண்டரிக்கு துணைபுரிவது அபாயமான ஒரு வழக்கத்தை ஏற்படுத்தும். இது தேசத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும்" என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்திருந்தார் அனில் கே.ஆண்டனி. சில மாதங்கள் அமைதியாக இருந்த அனில் ஆண்டனி நேற்று திடீரென பா.ஜ.க-வில் இணைந்தார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளிதரன் மூலமாக டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் அனில் ஆண்டனி பா.ஜ.க-வில் இணைந்தார். பின்னர் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அனில் ஆன்றணி, "காங்கிரஸ் தீவிர இடதுசாரி சித்தாந்தத்துக்கு மாறி வருகிறது.
ஒரு குடும்பத்தை பாதுகாப்பதுதான் தர்மம் என காங்கிரஸ் நினைக்கிறது. தேசத்துக்கு சேவைசெய்வதுதான் தர்மம் என நான் நினைக்கிறேன். காங்கிரஸ் தேசத்துக்கு எதிரானது. பா.ஜ.க-வில் இணைந்து செயல்பட அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வீ.டி.சதீசன் கூறுகையில், "அனில் ஆண்டனி பா.ஜ.க-வுக்கு சென்றுவிட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் நிகழ்ந்துவிடாது. அவருக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த பொறுப்பையே சரியாக செய்யவில்லை. அனில் ஆண்டனி பா.ஜ.க-வின் சதியில் வீழ்ந்துவிட்டார். பா.ஜ.க-வில் சேர்ந்ததற்கு விசித்திரமான காரணங்களை அனில் ஆண்டனி சொல்கிறார். அவருக்கு இந்த ஆபத்து பிற்காலத்தில் புரியும். ஏ.கே.ஆண்டனி என்ற தந்தையை அனில் ஆண்டனி நிந்தனை செய்துவிட்டார்" என்றார்.
from India News https://ift.tt/NsASnUx
0 Comments