நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி... தமிழக எம்.பி -க்கள் செலவு செய்யத் தயங்குவது ஏன்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியின் வளர்ச்சிக்கு செலவு செய்ய 2022-23 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் கிட்டத்தட்ட ரூ.1,500 கோடி அளவுக்கு செலவு செய்யப்படாமலே இருப்பதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நிறைவேற்றத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை

கடந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுக்காக மொத்த ரூ.3,965 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடந்த 2023 மார்ச் 30 வரை ரூ.2,387 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு இருப்பதாக இணை அமைச்சர் ராவ் இந்திரஜித் சிங் தெரிவித்துள்ளார். இது, ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 60% மட்டுமாகும்.

கடந்த ஆண்டுக்கு முந்தைய நிதி ஆண்டில் எம்.பி.களின் தொகுதி வளர்ச்சிக்காக ரூ.2,633 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.1,729 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது, ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 65% ஆகும். அதாவது, கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் செய்யப்பட்ட அளவுக்குக்கூட கடந்த ஆண்டு எம்.பி.க்கள் நிதி செலவு செய்யப் படவில்லை என்பது அதிர்ச்சிகரமான தகவலாகவே இருக்கிறது.

எம்.பி.களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இமாச்சலப்பிரதேசம் 48.6 சதவிகிதமும், ஹரியானா 41.3 சதவிகிதமும், தமிழ்நாடு 38.9 சதவிகிதமும், கேரளா 37.2 சதவிகிதமும் குஜராத் 35.7 சதவிகிதமும் செலவு செய்துள்ளது. அதாவது, இந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.கள் தங்கள் தொகுதி வளர்ச்சிக்கென ஒதுக்கப்பட்ட நிதி 50 சதவிகிதத்தைகூட செலவு செய்யவில்லை!

திட்ட செலவு

குஜராத் எம்.பி.களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.185 கோடியில் ரூ.66 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டு இருக்கிறது. கேரள எம்.பி.களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.145 கோடியில் ரூ. 54 மட்டுமே செலவு செய்யப்பட்டு உள்ளது. தமிழக எம்.பி.களுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.285 கோடியில் ரூ.11 கோடி மட்டும் செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆனால், அஸ்ஸாம் எம்.பி.களுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.105 கோடியில் ரூ.85.5 கோடியும், உத்தரப்பிரதேச எம்.பி.களுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.555 கோடியில் ரூ.446 கோடியும், ஒடிஷா எம்.பி.களுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.155 கோடியில் ரூ.116.5 கோடியும் செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

எம்.பி.கள் செலவு

அஸாம் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.கள் 81% நிதியையும், உத்தரப்பிரதேச மாநில எம்.பி.கள் 80.4% நிதியையும், ஒரிசாவை சேர்ந்த எம்.பி.கள் 75.2% நிதியையும், தெலங்கானாவைச் சேர்ந்த எம்.பி.கள் 75% நிதியையும், சத்தீஷ்கரைச் சேர்ந்த எம்.பி.கள் 68.1% நிதியையும், மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த எம்.பி.கள் 66.1% நிதியையும் தங்கள் தொகுதி வளர்ச்சிக்கு செலவு செய்திருக்கிறார்கள்.

அஸ்ஸாம், உ.பி., மகாராஷ்ட்ரா மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.கள் தங்கள் தொகுதி வளர்ச்சிக்கான நிதியைத் தாராளமாக செலவு செய்திருக்க, தமிழ்நாடு உள்பட சில மாநில எம்.பி.கள் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை செலவு செய்ய ஏன் தயங்குகிறார்கள்? நிதி இல்லை என்றாலும் பரவாயில்லை, கையில் நிறைய நிதி இருக்க, எம்.பி.கள் அதை செலவு செய்ய மறுப்பது எந்த வகையில் நியாயம்?



from India News https://ift.tt/KYrI1eC

Post a Comment

0 Comments