`எடப்பாடி பழனிசாமி vs பன்னீர்செல்வம்’ - அதிமுக தோல்விக்குப் பின் அதிகரிக்கும் வார்த்தைப் போர்

நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளைப் பெற்றநிலையில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்நிலையில் ஒற்றைத் தலைமையால் தனித்து செயல்படும், பன்னீர் வெளியிட்ட அறிக்கை வார்த்தை போரை உருவாக்கியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்

பன்னீர் தனது அறிக்கையில், ``கழகத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கும் நம்பிக்கைத் துரோகிக்கு கடும் கண்டனம். எம்.ஜி.ஆரின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையிலும், கழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற அம்மாவின் புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. வரலாறு காணாத படுதோல்வியை அ.தி.மு.க அடைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், கழகத்துக்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முடிந்தது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள்தான்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஓர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத்தேர்தல்தான். இதற்குக் காரணம் துரோகியும், துரோகியின் தலைமையிலான ஒரு சர்வாதிகார கூட்டமும்தான். இதற்கு முழுமுதற் காரணம், எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்" என்று மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

பன்னீர்செல்வம் இந்த கருத்தை முன்வைத்தது முதல், எடப்பாடி ஆதரவாளர்களும், பன்னீர் ஆதரவாளர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தை போர் நடந்துவருகிறது.

எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக, பன்னீர் தரப்பின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜூடம் கேட்டபோது, ``2021-ல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 69.5 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் த.மா.க. வேட்பாளர் யுவராஜ் மட்டுமே களத்தில் நின்று 58,000 வாக்குகளை பெற்றிருக்கிறார். ஆனால், 2 ஆண்டுகளில், அந்த நிலை மொத்தமாக மாற, எடப்பாடியின் சர்வதிகார போக்குதான் முக்கிய காரணம்.

ஈரோட்டு கிழக்கு இடைத் தேர்தலில் தென்னரசு-க்கு ஆதரவாக 116 தேர்தல் பொறுப்பாளர்கள் களமிறங்கியும், வெறும் 43,819 வாக்குகள்தான் பெற முடிந்திருக்கிறதென்றால், அவர் மீசையை மழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதானே அர்த்தம். எல்லாவற்றுக்கும் மேலாக திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றதை போலவே எடப்பாடியும் ஜெயிப்பார் என கூச்சமின்றி கூவியவர்கள் முகத்தை எங்கு கொண்டு வைப்பார்கள் என்றே தெரியவில்லை. அண்ணன் ஓபிஎஸ் கூறியதுபோல, இடைத்தேர்தல் படுத்தோல்விக்கு எடப்பாடி என்னும் துரோகிதான் காரணம் என்பதை எல்லா தொண்டர்களும் உணர்ந்துவிட்டனர்." என்றனர்.

மருது அழகுராஜ்

இதுகுறித்து அ.தி.மு.க ஐ.டி விங்-கின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யனிடம் கேட்டபோது, ``தேர்தல் அறிவிக்கப்பட்டபோது எடப்பாடிக்கு அ.தி.மு.க-வின் சின்னமான இரட்டை இலை கிடைக்காது என்றார்கள். சட்டப்போராட்டம் மூலமாக அதை பெற்றோம். பின் டெப்பாசிட்டே கிடைக்காது என்றார்கள். ஆனால், ஆளும் தரப்பின் பண பலத்தையும் தாண்டி 43,000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்த போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தது.

அப்படி பார்த்தாலும் ஈரோடு கிழக்கு எங்களுக்கு வெற்றிதான். இதையெல்லாம், அண்ணன் ஓ.பி.எஸ்-ஸாலும் அவருடன் இருக்கும் நபர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல் எதிரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, தான் வளர்ந்து வந்த பாதையை மறந்து, தனது குறுகிய எண்ணத்தால் கட்சியை அழிக்க நினைத்தார். ஆனால், எடப்பாடியார் அதை முறியடித்துவிட்டார்.

ராஜ் சத்யன்

பல தொகுதிகளில் போட்டியிடும் பத்மராஜன் என்பவருக்குக்கூட ஈரோடு கிழக்கில் முன்மொழிய பத்து பேர் இருந்தனர். ஆனால், அந்த பத்து பேர் கூட இல்லாமல்தான் ஓபிஎஸ் நிறுத்திய வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி ஆனது. அவர்தான் நாங்கள்தான் அ.தி.மு.க என்று கூறுவது வேடிக்கையாக இல்லையா? அவருக்கு அ.தி.மு.கவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை நீதிமன்றமே தனது தீர்ப்பு மூலம் தெளிவுபடுத்திவிட்டது. இனியும் அதிமுக பற்றி பேச அவருக்கு துளியும் அருகதை இல்லை." என்றார் காட்டமாக.



from India News https://ift.tt/ZoFkYsu

Post a Comment

0 Comments