கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது.
இந்த வீடியோக்களால், வடமாநிலத் தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டது. இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப் பேரவையில் எதிரொலித்தது. வடமாநிலத் தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுபோன்ற வதந்தியை நம்ப வேண்டாம் என இந்தியில் எழுதப்பட்ட விளம்பரப் பதாகைகள் மூலமும், இந்தியில் பேசியும் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் திருப்பூரில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கான எண்களையும் ஒவ்வொரு நிறுவனங்களில் வேலை செய்து வருகிற வடமாநில தொழிலாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வு:
திருப்பூரில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய பீகாரில் இருந்து அந்த மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு பணி படை வீரர் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், திருப்பூர் ஆட்சியர் வினீத், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு, காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், பீகாரை பூர்வீகமாக கொண்ட திண்டுக்கல் டி.ஐ.ஜி. அபினவ் குமார், தொழில்துறையினர், பனியன் நிறுவன உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆய்வு கூட்டத்தின்போது வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸார், நிறுவனத்தினர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் குறித்தும், தேவைப்படுகிற நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவையில் நடைபெற்ற வேறொரு கொலை உள்பட, பல பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களை திரித்து, தவறான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் வடமாநிலத் தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டது. அதைப் போக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். கட்டுப்பாட்டு அறை தொடங்கியது, ஒலிப்பெருக்கி மூலம் இந்தியில் அறிவிப்பு வெளியிட்டது, பின்னலாடை நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை கையாண்டது, மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விழிப்புணர்வு நடவடிக்கை தமிழக அரசு எடுத்துள்ளது.
வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது" என்றார். இதன் பின்னர் பீகார் குழுவினர் மற்றும் அதிகாரிகள் அவினாசி ஈட்டிவீரம்பாளையம், கணபதிபாளையம், எம்.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். மேலும், வடமாநிலத் தொழிலாளர்களிடம் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் வினீத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரவி வருவது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இணைதளம் மூலம் பரவும் வதந்திகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்து வருகிறோம். இந்த பிரச்னை தொடங்கிய விதம் குறித்து ஆய்வு செய்ய பீகாரில் இருந்து அதிகாரிகளின் குழுவினர் வந்துள்ளனர். அந்த குழுவுக்கு தமிழக அரசின் உத்தரவின் பேரில், மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்களுக்காக செய்த பாதுகாப்பு வசதிகள் குறித்து விளக்கம் அளித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது" என்றார்.
வங்கி கணக்கை முடக்க பரிந்துரை:
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் ட்விட்டர், யூடியூப், முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட சில வீடியோக்களை தடை செய்ய யூடியூப் மற்றும் ட்விட்டருக்கு பரிந்துரைத்துள்ளோம். பணம் சம்பாதிக்க மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் வதந்திகளை பரப்புகின்றனர். அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் பரிந்துரைத்துள்ளோம்.
வடமாநிலத் தொழிலாளர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, கட்டுப்பாட்டு மையத்துக்கு இதுவரை 600 அழைப்புகள் வந்துள்ளன. தொழிலாளர்களின் தாய்மொழிலிலேயே பதில் அளிக்கப்பட்டு, அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை" என்றார்.
குடும்பத்தினருக்கு வீடியோ: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் இந்த பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தற்போது தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் வீடியோவாக குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பி வருகிறார்கள்.
from India News https://ift.tt/MSvZuaQ
0 Comments