``பார்த்துக்கொண்டனர், பேசிக்கொள்ளவில்லை” - திருவாரூரில் நடந்த சசிகலா குடும்ப நிச்சயதார்த்த விழா

சசிகலா உறவினர் டாக்டர் சிவக்குமார் இல்ல நிச்சயதார்த்த விழா திருவாரூரில் நடைபெற்றது. இதில் சசிகலா, தினகரன் இருவரும் பேசிக்கொள்ளாமல் தனி தனி அணியாக செயல்பட்டது சசிகலா குடும்பத்தினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

டாக்டர் சிவக்குமார் இல்ல நிச்சயதார்த்த விழாவில் தினகரன்

சசிகலா உறவினரும், டி.டி.வி. தினகரனின் சகலையுமான டாக்டர் சிவக்குமார் மகன் டாக்டர் கார்த்திக், அ.தி.மு.க-வின் திருவாரூர் நகர செயலாளர் (எடப்பாடி அணி) ஆ.டீ.மூர்த்தி மகள் பூஜாஸ்ரீ நிச்சயதார்த்த விழா திருவாரூர் கமலாலயம் குளம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று இரவு விமர்சையாக நடைபெற்றது. இதில் சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன், ஜெயானந்த் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதற்காக வந்த சசிகலாவை ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த நாகை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது. அ.ம.மு.கவினர் சசிகலாவை சந்திப்பதை தவிர்த்து வரும் நிலையில் அ.ம.மு.க செய்தி தொடர்பாளரான முருகானந்தம் சசிகலா வரவேற்பு உள்ளிட்ட பலவற்றை முன்னின்று கவனித்து கொண்டார்.

டி.டி.வி.தினகரன்

சசிகலா, தினகரன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் சூழலில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே சசிகலா குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் விருப்பமாக இருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்பு இந்த நிச்சயதார்த்த விழாவில் ஏற்படும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியிருக்கிறது.

சசிகலா

இது குறித்து சசிகலா குடும்ப விவகாரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜுக்கு நெருக்கமானவர் மூர்த்தி. கடந்த சில மாதங்களுக்கு மேலாக சசிகலா, தினகரனுக்குமிடையே பனிப்போர் நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அ.ம.மு.கவினர் சசிகலாவை சந்திப்பதை தவிர்க்க தொடங்கினர். தினகரனும் சசிகலா குறித்து பட்டும் படாமலும் பேசி வந்தார்.

சசிகலா குடும்பத்தினர் இருவருக்கும் செய்த சமாதான முயற்சியும் தோல்வியில் முடிந்தன. சில தினங்களுக்கு முன் சசிகலாவின் கணவர் ம. நடராசன் 5ம் ஆண்டு நினைவு நாள் வந்தது. அப்போது தஞ்சாவூரில் இருந்த சசிகலா விளாரில் உள்ள தன் கணவர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த முடிவு செய்திருந்தார். அதற்கு தினகரனும் வருவதாக சொல்லப்பட்ட நிலையில் கணவர் சமாதிக்கு செல்வதை சசிகலா தவிர்த்துடன் தஞ்சாவூரிலிருந்தே புறப்பட்டு விட்டார்.

நிச்சயதார்த்த விழாவில் சசிகலா, திவாகரன்

இந்நிலையில் தினகரன், நடராசன் சமாதியில் அஞ்சலில் செலுத்தினார். திவாகரனுடன் சில வருடங்களாக பேசாமல் இருந்த சசிகலா, தினகரனுடன் ஏற்பட்ட மனகசப்புக்கு பிறகு திவாகரனுடன் கரம் கோர்த்தார். திவாகரனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட பார்க்க செல்லாத சசிகலா, பின்னர் மன்னார்க்குடியில் சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் பண்ணை வீட்டுக்கு சென்று சில தினங்கள் தங்கியதும் குறிப்பிடத்தக்கது.

திவாகரன், தினகரன் இருவருக்குமான மோதல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. திவாகரன் மகன் ஜெயாஆனந்த்துக்கும், தினகரனின் தம்பி பாஸ்கரனின் மகளுக்கும் நடைபெற்ற திருமணத்தில் கூட தினகரன் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க பொதுச்செயலாளர் விவகாரம் சூடுபிடித்திருக்கும் இச்சூழலில் டாக்டர் சிவக்குமாரின் இல்ல நிச்சயதார்த்த விழாவில் சசிகலா, தினகரன், திவாகரன் மூன்று பேரும் சேர்த்து கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற செய்தி சசிகலா குடும்பத்தினரை தாண்டி அவர்களது ஆதரவாளர்கள் தரப்பிலும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. இதற்காக டாக்டர் சிவக்குமார் ரொம்பவே மெனக்கெட்டதாக சொல்லப்படுகிறது.

அ.ம.மு.க நிர்வாகிகளுடன் தினகரன்

இந்நிலையில் நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த சசிகலா, தினகரன் இருவரும் பார்த்து கொண்டனரே, தவிர பேசிக்கொள்ளவில்லை. ஏதோ மூன்றாம் நபர்களை போல் இருவரும் வணக்கம் வைத்து கொண்டனர். அருகருகே இருக்கை இருந்தும் ஒன்றாக அமரவில்லை. சசிகலா, திவாகரன், விவேக், தினகரனின் மைத்துனரான டாக்டர் வெங்கடேஷ், ஜெயாஆனந்த் உள்ளிட்டோர் ஓர் அணியாகவும், தினகரன், அவரது சம்மபந்தி கிருஷ்ணசாமி வாண்டையார், முன்னாள் தஞ்சை எம்.எல்.ஏ ரெங்கசாமி. எஸ்.காமராஜ் ஓர் அணியாகவும் அமர்ந்திருந்தனர்.

மைத்துனரான டாக்டர் வெங்கடேஷ் கூட தினகரனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சசிகலா இறுக்கமான முகத்துடனேயே காணப்பட்டார். ஆர்.காமராஜின் அக்கா மகன் ஆர்.ஜி. குமார் தன் ஆதரவாளர்களுடன் தனியாக இருந்தார். சசிகலா, தினகரன், திவாகரன் மூன்று பேரயையும் சேர்த்து இந்த நேரத்தில் ஒரு குரூப் போட்டோ எடுத்து விட வேண்டும் என நினைத்த டாக்டர் சிவக்குமார் இதனை தினகரனிடம் சொல்ல அவர் கண்டு கொள்ளவில்லையாம். இரண்டு தரப்பும் தனி தனியாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தும் மருந்துக்கு கூட ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை. தினகரனின் மகள் சசிகலாவுடன் பேசிக்கொண்டார். மணமகளுடன் புகைப்படம் எடுக்கும் போதும் உடன் இருந்தார்,.

சசிகலா, டாக்டர் சிவக்குமார்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை விட்டால் சசிகலா தரப்பிற்கு அ.தி.மு.கவை கைப்பற்ற வேறு வாய்ப்பு அமையாது. இந்த நேரத்தில் ஒற்றுமையாக இல்லாமல் ஒருவருக்கொருவர் முரண்டு பிடிக்கிறார்களே என பலரும் புலம்பினர். நிச்சயதார்த்த விழாவில் சசிகலா, தினகரன் இருவருக்கும் இடையே சுமூகம் உண்டாகும் என நினைத்த உறவினர்களுக்கு அது நடக்காமல் போனதில் வருத்தமே” என்றனர்.



from India News https://ift.tt/aMcg9Cm

Post a Comment

0 Comments