கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் உலா வந்தன. குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் - தமிழர்களிடையே நடந்த மோதல் என ஒரு வீடியோ வெளியானது. காவல்துறை உடனே தலையிட்டு `அது டீக்கடை தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டை. தொழில் போட்டி எதுவும் இல்லை’ என விளக்கினர். அந்த நிகழ்வு, அதோடு முற்றுப்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக வடமாநிலத்தவர்களைத் தாக்கும் போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அச்சம் காரணமாக வடமாநிலத் தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊருக்குத் திருப்புகிறார்கள் என்ற வீடியோவும் வேகமாகப் பரவிவருகிறது. இந்த நிலையில்தான், தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வெளிவரும் வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. அந்த வதந்திகளை நம்பவேண்டாம் என தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த பீகார் மாநில பா.ஜ.க, சட்டப்பேரவையில் தமிழகத்திலுள்ள பீகார் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டது. பேரவையில் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ``வெளியான வீடியோவில் உண்மையில்லை என்பதை தமிழக டி.ஜி.பி விளக்கிவிட்டார். ஆனாலும், அரசியல் லாபங்களுக்காக இரு மாநிலங்களிடையே பகையைத் தூண்டும் வகையில் வதந்திகளைப் பரப்ப பா.ஜ.க முயல்கிறது. அப்படி நாங்கள் சொல்வதில் உண்மையில்லை என நம்பினால் மத்திய உள்துறை அமைச்சருடன் சென்று விசாரணைக்குழு அமைக்க முறையிடுங்கள்” என்றார்.
இதற்கிடையே ``தமிழ்நாட்டில் நிலவும் அமைதிச் சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்கவும் முயல்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. அதேபோல், பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப்போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தார்" எனப் பதிவிட்டிருக்கிறது.
from India News https://ift.tt/FfTQ0LG
0 Comments