விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ விருதுநகர் மாவட்டம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ``அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள அரங்குக்கு அனிதா பெயர் சூட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை தமிழக ஆளுநர் 142 நாள்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பியிருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாக அமைந்திருக்கிறது. அதற்கு அவர் அளித்திருக்கும் பதிலும் ஏற்கக்கூடியது அல்ல.
ராஜ் பவனில் ஆன்லைன் ரம்மி நிறுவன முதலாளிகளை தமிழக ஆளுநர் ரவி சந்தித்திருப்பதில் மர்ம முடிச்சு இருக்கிறது. அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆன்லைன் ரம்மி முதலாளிகளைச் சந்தித்தப் பிறகு அவரது நிலைப்பாடு மாறியிருக்கிறது. ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா மட்டுமல்லாமல் பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். எனவே, தமிழக ஆளுநரைக் கண்டித்து வரும் 17-ம் தேதி, சவப்பெட்டியுடன் ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் சென்று போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.
திரிபுராவில் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சொத்துகளை பா.ஜ.க-வினர் சூறையாடியிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. `எடப்பாடி பழனிசாமி மீது பொய்வழக்கு போடுவது தொடர்ந்தால், மனித வெடிகுண்டாக மாறுவோம்' என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பதை விரக்தியின் உச்சமாக நான் கருதுகிறேன். இது ஒரு பொறுப்பற்றப் பேச்சு. அப்படி ஒன்றும் பெரிய பொய் வழக்குகளை அ.தி.மு.க-மீது தி.மு.க-வினர் போடவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில்தான் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். கடந்த காலங்களில் பொறுப்பான அமைச்சராக இருந்தவர், இப்படிப் பேசுவது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் இந்தப் பேச்சுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும். தமிழகம் சமூக நல்லிணத்துக்கான பூமி, அனைவரையும் அரவணைக்கக்கூடிய மாநிலம். எனவே, இங்கு பிரிவினைவாத, மதவாத அரசியலுக்கு இடமில்லை. ஆகவே, தமிழகத்தில் விரைவில் பா.ஜ.க ஆட்சி மலரும் எனப் பேசிய அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் கனவு பலிக்காது. நிச்சயமாக இந்தியாவின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்தவர்தான் அங்கம்வகிப்பார். இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்ட நாடாக இருக்கிறது. சமீபத்தில் ராகுல் காந்தி நடத்திய ஒற்றுமைப்பயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த பிரதமர் வாய்ப்பு நரேந்திர மோடியைவிட ராகுல் காந்திக்குத்தான் அதிகமாக இருக்கிறது" என்றார்.
`வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க-வின் ஊழல் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவேன்' என அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அண்ணாமலை வாய்ச்சவடால் மன்னன்" என ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டுப் புறப்பட்டார்.
from India News https://ift.tt/kDdxSrc
0 Comments