உக்ரைன் சென்ற ஜோ பைடன்:
நேட்டோ படையில் இணைவதற்கு உக்ரைன் முனைப்பு காட்டியது. இதற்கு ரஷ்யா அதிபர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நாடு தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு புதின் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இருபக்கங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் கடந்த மாதம் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு திடீரென பயணம் மேற்கொண்டார்.
கோபமடைந்த புதின்:
அப்போது அவர், "உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ஆயுதங்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது" என அறிவித்தார். இது புதினை மேலும் கோபமடைய செய்தது. இதையடுத்து உக்ரைனுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
இதன் காரணமாக போர் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் மரியுபோல் பகுதிக்கு புதின் திடீரென பயணம் செய்தார். அங்கிருந்த மக்களுடன் உரையாடியதாக ரஷ்ய அதிபர், "மரியுபோல் நகரத்தை மீட்டுருவாக்கம் செய்யப்படும்" என தெரிவித்தார்.
"பிடிவாரன்ட்..."
இந்த சூழ்நிலையில் சர்வதேச நீதிமன்றம் புதின் மற்றும் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா ல்வோவா-பெலோவா ஆகியோர் மீது பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதனால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படப்போவதில்லை என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷ்யா, 'ஆதரவற்றோர்களை பாதுகாப்பதற்காக அழைத்துச் சென்றோம்" என கூறியது. இதேபோல் சீனா, "இந்த வாரன்ட் இரட்டைத் தரத்தை பிரதிபலிக்கிறது" என தெரிவித்தது.
`ரஷ்யாவில் ஜி ஜின்பிங்’
இதுஒருபுறம் இருக்க மறுபுறம் ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றார். பின்னர் அவர் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். முன்னதாக அவருக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருவரும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் கிரெம்ளினில் நடந்த அரசு விருந்தில் கலந்து கொண்டனர். அப்போது ஒருவரையொருவர் "அன்பான நண்பர்" என்று நட்பு பாராட்டினர்.
"எப்போதும் நெருக்கமான உறவு..."
உக்ரைன் மோதலில் சமாதானத்தை உருவாக்கும் ஒரு சக்தியாக சீனா தன்னைத்தானே காட்டிக் கொள்ள முற்பட்டாலும், இந்த விஜயம் மாஸ்கோவிற்கும் - பெய்ஜிங்கிற்கும் இடையே எப்போதும் இருக்கும் நெருக்கமான உறவை அடிக்கோடிட்டுக் காட்டியது.
இதுகுறித்து உக்ரைன் ராணுவம், "ஜி ஜின்பிங் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் மட்டுமே பேச முடியும். உக்ரைனில் தொடர்ந்து ஏவுகணை, ராக்கெட், மூலமாக வான்வழித் தாக்குதல்களில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. டான்பாஸில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk), லுஹான்ஸ்க் (Luhansk) பிராந்தியங்களின் எல்லைகளை அடைவதே ரஷ்யாவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
ஏவுகணை அழிப்பு
ஏற்கெனவே இதில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் பாக்முட் நகரத்தின் மீதான தாக்குதல் நிறுத்தப்படவில்லை. கிரிமியா தீபகற்பத்தின் வடக்கே உள்ள ஜான்கோய் (Dzhankoi) நகரில் ரயில் மூலமாக கொண்டு செல்லப்பட்ட ஏவுகணைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையில் கப்பல்களில் இருந்து ஏவப்படும் வகையில் ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன" என தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் கடந்த 20-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரை ரஷ்ய செய்தித்தாள் பிராவ்தாவில் (Pravda) வெளிவந்தது. இதேபோல் ரஷ்ய அதிபர் புதின் எழுதிய கட்டுரை சீனாவில் வெளியாகும் பீப்பிள்ஸ் டெய்லியில் (People’s Daily) ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
"ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரை"
அதில் இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களில் உக்ரைன் போரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் நடந்துகொண்டிருக்கும் போரில் அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கெடுத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிணைந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.
சீனா அதிபர் ஜி ஜின்பிங் தனது கட்டுரையில், "ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் உட்பட, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டம் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு திறம்பட நிலைநிறுத்தப்பட வேண்டும்.
சர்வதேச சட்டத்தின் சமமான மற்றும் சீரான பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எவ்வாறாயினும் இரட்டை தரநிலைகள் நிராகரிக்கப்பட வேண்டும். மேலாதிக்கத்தின் சேதப்படுத்தும் செயல்கள், ஆதிக்கம் மற்றும் கொடுமைப்படுத்துதல் மற்றும் நீண்ட மற்றும் சித்திரவதையான உலகளாவிய பொருளாதார மீட்சியின் காரணமாக நமது உலகம் சிக்கலான மற்றும் பின்னிப்பிணைந்த மற்றும் பாரம்பரியமற்ற பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. எந்த ஒரு நாடும் சர்வதேச ஒழுங்கை மீறக்கூடாது. சீனா-ரஷ்யா கூட்டணி எந்த மூன்றாம் நாட்டிற்கும் எதிராக இலக்கு வைக்கப்படவில்லை" என தெரிவித்திருக்கிறார்.
"இரட்டைக் கட்டுப்பாட்டுக் கொள்கை..."
அதிபர் புதின் தனது கட்டுரையில், "ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிராக அமெரிக்கா இரட்டைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அறிவுறுத்தல்களுக்கு அடிபணியாத எந்த நாட்டையும் கட்டுப்படுத்த, அந்த நாடு முயற்சிக்கிறது. சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பின் கட்டமைப்பு சிதைக்கப்படுகிறது.
ரஷ்யா ஒரு உடனடி அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் மேற்கு நாடுகளின் செயல்பாடுகள் எரியும் நெருப்பில் எரிபொருளைச் சேர்க்கும் வகையில் இருக்கிறது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ஊடுருவுவதன் மூலம் நேட்டோ தனது நடவடிக்கைகளை உலக அளவில் விரிவுபடுத்த முயற்சிக்கிறது என்பது அனைவருக்கும் வெளிப்படையானது" என தெரிவித்திருக்கிறார்.
"ரஷ்யா வழியில் ஜி ஜின்பிங்.."
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச அரசியல் நோக்கர்கள். "உக்ரைனுக்கு எதிரான போரில் சீனாவும், ரஷ்யாவும் தங்கள் நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்துள்ளன என்பதும், அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கு எதிரான இருதரப்பு ஒத்துழைப்பில் "வரம்புகள் இல்லை" என்பதை நோக்கி நகர்வதும் இரு தலைவர்களின் கட்டுரைகளிலிருந்து தெளிவாகிறது.
இதில் எவ்விதமான ஆச்சரியமும் இல்லை. அதேநேரத்தில் இதுவரை ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவித்து வந்த ஜி ஜின்பிங் தனது நிலைப்பாட்டை மாற்றி, ரஷ்யா வழியில் செல்கிறாரோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்கள்.
"சீனா உணரவில்லை..."
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி. "உக்ரைனில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுமாறு புடினுக்கு அழுத்தம் கொடுக்க ஜி தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்திருக்கிறார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன். "உக்ரைனில் நடந்த அட்டூழியங்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்கச் செய்யும் பொறுப்பை சீனா உணரவில்லை.
ரஷ்யாவைக் கண்டனம் செய்வதற்குப் பதிலாக, அந்தக் கடுமையான குற்றங்களைத் தொடர ராஜதந்திர பாதுகாப்பு அளிக்கிறது" என்றார். இதுகுறித்து வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள், "புதின் உக்ரைன் மீது ஜி ஜின்பிங்-இடமிருந்து வலுவான ஆதரவை எதிர்பார்க்கிறார். அவருடைய மாஸ்கோ பயணம் எந்தவொரு ராணுவ ஆதரவையும் விளைவிக்கும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்றனர்.
from India News https://ift.tt/W1oyHwg
0 Comments