`தமிழ்நாட்டில் வெற்றிடம் நிலவுகிறது, கழகங்களுக்கு மாற்றாக மய்யம்' வருகிறது எனக்கூறி கட்சி ஆரம்பித்தவர் சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்டும், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிறந்தநாள் புகைப்படக்கண்காட்சியை திறந்தும் வைத்திருக்கிறார். தனித்துப்போட்டி, தனது தலைமையில் கூட்டணி அமைத்து போட்டி என தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று என்று வந்தவர், இன்று தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் ம.நீ.ம இடம்பெறுவதை மறைமுகமாக உறுதிபடுத்தியிருக்கிறார். அதேசமயம், ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆரம்பித்த துடிப்புகுறையாமல் ஐந்தாண்டுகளைக் கடந்திருப்பதாக ஆரூடம் சூட்டியிருக்கிறார் கமல்.
மக்கள் நீதி மய்யம் தொடக்கம்:
கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி, மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் மாநாடு கூட்டி தனிக்கட்சி ஆரம்பித்தார் நடிகர் கமல்ஹாசன். `ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை' எனக் களமிறங்கிய கமல்ஹாசனுக்கு மாற்றத்தை விரும்பிய இளைஞர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என ஒரு புதிய பட்டாளமே பேராதரவு கொடுத்து வரவேற்றது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாணியில் ஊழல் ஒழிப்பு கோஷத்தை முன்னெடுத்த கமல், தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளுமே தீய சக்திகள், 50 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எதையுமே செய்யவில்லை எனக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
`ஊழல் கட்சி திமுக!' - கமல் :
அதேசமயம், 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரவும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ``காங்.,-திமுக கூட்டணிக்கு ம.நீ.ம வரவேண்டும்' என அழைப்பு விடுத்தார். ஆனால், அதற்கு பதிலளித்த கமல், ``தி.மு.க ஒரு ஒரு ஊழல்கட்சி, அந்த ஊழல் பொதியை எங்களால் சுமக்க முடியாது!' நோஸ்கட் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க, தனது அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், `பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும்?' `நாய் வாலை நிமிர்த்த முடியுமா? புலி வேட்டைக்குச் செல்பவன், இடையில் பன்றிகள் வீசும் சேற்றைப் பற்றிக் கவலைப்படக் கூடாது; பா.ஜ.க அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கிவிட்டார் கலைஞானி' எனக் கமலைக் கடுமையாக விமர்சித்து எழுதியது. அதேபோல, காங்கிரஸ் கட்சியும் கமலின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அதற்கு மாறாக தேர்தல் பிரசாரத்தின்போது கமல், ``சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியான கோட்சே ஒரு இந்து. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்விகேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூவர்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன்' என பா.ஜ.க, சங்பரிவாரங்களை கடுமையாக விளாசினார்.
`காப்பியடித்த தி.மு.க!' - கமல்:
மேலும், ``நேற்று வந்த எங்களைப்பார்த்து கிராம சபை கூட்டம் நடத்துவதைப் காப்பியடித்துவிட்டார்கள். நானெல்லாம் சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு நிற்கமாட்டேன்" எனக்கூறி ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார். இது `கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்' என முரசொலி விமர்சித்தது. அதேபோல, தி.மு.க உதயநிதி ஸ்டாலின், ``கமல் அறியாமையில் பேசிக்கொண்டிருக்கிறார். கமல் என்ன 50 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்தாரா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
அந்த சூட்டோடு சூடாக, 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவும் தனித்துக்களம் கண்டது ம.நீ.ம. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் ம.நீ.ம தோல்வியடைந்தாலும், மூன்று இடங்களில் 10% வாக்குகளையும், 11 இடங்களில் மூன்றாம் இடத்தையும் பிடித்து முதல் தேர்தலிலேயே 3.7% வாக்குவங்கியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமானது. வழக்கம்போல தி.மு.க-வுடனான வார்த்தை யுத்தமும் நீடித்தது.
`கலைஞரை அவமானப்படுத்த ஸ்டாலின் என்று சொன்னாலே போதும்!' - கமல்
ம.நீ.ம நான்காம் ஆண்டு தொடக்கவிழாவில் பேசிய கமல், ``ஆக்டிவாக இருக்கும்போதே மக்கள்சேவை செய்வேன். சக்கர நாற்காலியில் இருந்துகொண்டு தொந்தரவு செய்யமாட்டேன்'' என்று கூற, அது முன்னால் முதல்வர் கருணாநிதியைதான் அவமானப்படுத்துவதாகக்கூறி தி.மு.க-வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு விளக்கமளித்த கமல், ``நான் கருணாநிதியைக் குறிப்பிடவில்லை; கருணாநிதியை அவமானப்படுத்த 'மு.க.ஸ்டாலின்' எனக் கூறினாலே போதுமானது!" என இன்னும் காட்டமாக விமர்சித்தார். தொடர்ந்து, ``அதிமுகவை யாரும் எதிர்க்க வேண்டாம், அதுவே உட்கட்சிப் பூசலால் அழிந்துவிடும். தி.மு.க-வுடன்தான் எங்களின் போட்டி. தி.மு.க அரசியலுக்கு வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. இன்று தி.மு.க-வை அரசியலைவிட்டு ஒதுக்க வேண்டியுள்ளதற்கும் காரணம் இருக்கிறது" என அதிரடித்தார்.
`ஊழலின் கால்களை நோக்கி தவழும் காங்கிரஸ்!' - கமல்
மேலும் தேர்தல் பிர]சாரத்தின்போது தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி பேசியதைக் குறிப்பிட்டு, ``தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் தொடங்கி விடுவோம் என்கிறார் செந்தில் பாலாஜி. எங்கள் வேட்பாளர் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். இதுதான் கழகங்களுக்கும் ம.நீ.ம-விற்கும் உள்ள வித்தியாசம்!" என்றார். அதற்கு செந்தில்பாலாஜி, `` மாட்டுவண்டி விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக குரல் எழுப்பினேன். அதைக் கண்டு பகுதிநேர அரசியல்வாதிக்கு ஏன் கோபமும் பதற்றமும் வருகிறது?" என காட்டமாகப் பதிலடி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து, ``எங்கள் திட்டங்கள், உறுதிமொழிகள் உட்பட அத்தனையையும் தி.மு.கவினர் காப்பியடிக்கிறார்கள். இப்போது நாங்கள் எழுதிவைத்திருக்கும் சீட்டு கிழிச்சு கிழிச்சு அங்கே போய்க்கொண்டிருக்கிறது துண்டு சீட்டாக!" என விமர்சித்தார் கமல். மேலும், ``சமூகநீதி பேசும் தி.மு.க-வில் திருமாவளவனுக்கு குறைந்த இடமே கொடுக்கப்பட்டுள்ளது. என் தம்பி திருமாவளவன் இனி இங்குதான் வரவேண்டி இருக்கும்" என நாசூக்காக காய் நகர்த்தினார். மேலும், தி.மு.க-வுடனான காங்கிரஸின் கூட்டணியை விமர்சிக்கும் வகையில், ``ஊழலின் கால்களை நோக்கி, தவழ்ந்து செல்வது தான் சௌகர்யம் என காங்கிரஸ்காரர்கள் அறிவாலயத்தின் வாட்ச்மேன்களாக இருக்கிறார்கள்" என கிண்டலடித்தார்.
`துரோகிகள் விலகிவிட்டார்கள்; இனி உருமாறிய ம.நீ.ம!' - கமல்
அந்தநிலையில், 2021 தேர்தல் நடைபெறவே தனது தலைமையில் ச.ம.க., ஐ.ஜே.கே. போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது ம.நீ.ம. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்துவதிலும் திணறியது. அந்த தேர்தலில் ம.நீ.ம கூட்டணி போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை பறிகொடுத்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட 7 லட்சம் வாக்குகளைக் குறைவாகப் பெற்ற ம.நீ.ம-வின் வாக்குசதவீதம் 2.5%-மாக வீழ்ச்சியடைந்தது.
கட்சியின் தொடர்ச்சியான வீழ்ச்சி பல இரண்டாம் கட்டத் தலைவர்களை கட்சியைவிட்டே வெளியேற வைத்தது. குறிப்பாக, மாநிலப் பொறுப்புகளில் இருந்த ஆர்.மகேந்திரன், சி.கே.குமரவேல், முருகானந்தம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, அப்துல்கலாம் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் உள்ளிட்டோர் விலகினர். அதில், ம.நீ.ம துணை தலைவராக இருந்த டாக்டர் ஆர்.மகேந்திரன், சுற்றுச்சூழல் பொறுப்பில் இருந்த பத்ம பிரியா உள்ளிட்டோர் தி.மு.க-வில் இணைந்தனர்.
அதைத்தொடர்ந்து, விலகிச்சென்றவர்களின் பொறுப்புகளுக்கு புதியவர்களையும் நியமித்த கமல், ``இப்போது துரோகிகள் நம்மைவிட்டு விலகிவிட்டனர். உருமாறிய கொரோனாபோல, உருமாறிய மக்கள் நீதி மய்யமாக நிற்கிறோம். இனி படிப்படியாக நல்லது நடக்கும்' என அறிவித்தார். ஆனால், மீண்டும் பிக்பாஸ், படப்பிடிப்பு என சென்றுவிட்டார். இதனால், புதிய பொறுப்புக்கு வந்த பொன்ராஜ், பழ.கருப்பையா, சரத்பாபு உள்ளிட்டோரும் கட்சியில் கமல்ஹாசனின் ஈடுபாடு குறைந்துவிட்டது எனக்கூறி அடுத்தடுத்து விலகிக்கொண்டனர்.
`விக்ரம் படம், பாரத் ஜோடோ... தி.மு.க-காங். கூட்டணிக்கு அடித்தளம் !'
அந்தநிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் நடித்த `விக்ரம்' படத்தின் தமிழக உரிமையை தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியது. அப்போதே, தி.மு.க-வுடன் கமல் நெருங்குகிறாரா என்ற சந்தேகப் பார்வையும் எழுந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த டிசம்பர் 24-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் ராகுல்காந்தியுடன் கைகோர்த்து நடந்தார் கமல்.
மேலும், நடைபயணத்தையடுத்து நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல், ``இது இந்தியாவின் இரண்டு கொள்ளுப்பேரன்கள் கலந்து நடத்தும் யாத்திரை. நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி, நான் காந்தியின் கொள்ளுப்பேரன். இதுதான் எங்கள் இருவருக்குமான உறவு. இந்தியாவில் அதுபோல நிறைய கொள்ளுப்பேரன்கள் இருக்கின்றனர். அதனால், கட்சி உள்ளிட்ட பாகுபாடுகளெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் தெருவில் இறங்கிப் போராட நாங்கள் வருவோம்!" என காங்கிரஸ் உடனான நெருக்கத்தையும் அதிகரித்தார்.
`பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக காங்கிரஸுக்கு ஆதரவு' - கமல்
இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி, ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் கமல்ஹாசன். அப்போது, ``ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் எனக்கும் ஒரு உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி. இன்று விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை. இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்கும் லாபத்திற்கும் இல்லை. நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இங்கு வந்திருக்கிறேன். அதற்கு முன்னோடி வேலைகளைப் பார்த்த ஒரு கட்சியின் வேட்பாளரான இளங்கோவனுக்கு என் ஆதரவைக் கொடுப்பது ஒரு இந்தியனின் கடமை. நாம் கட்சிக்காக என்பதை விட அறத்தின் சார்பாக வாக்களிக்க போகிறோம் என நினைத்து கொள்ளுங்கள்.
மய்ய வாதம் என்பது நடுநிலையில் இருப்பது அல்ல. மக்களின் நலன் என வரும் போது நியாயத்தின் பக்கம் இருப்பதே. சுதந்திர போராட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். இப்போது இந்தியாைவை ஆளும் வடக்கு இந்திய கம்பெனியை (பா.ஜ.க அரசை) எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பல விமர்சனங்களைக் கேட்டுவிட்டுத்தான் இது சரியான பாதை என்று தேர்ந்தெடுத்து வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள் பாதை புரியும்!" என காங்கிரஸை ஆதரிப்பதற்கான விளக்கத்தைச் சொன்னார். மேலும், `விஸ்வரூபம் படம் வெளியான போது, என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார் (ஜெயலலிதா). அப்போது கலைஞரும், ஸ்டாலினும் எனக்கு தொடர்புகொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்கள்..' என்பதையும் கமல் பதிவுசெய்தார். இந்த தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜியும் கமலும் ஒரே வாகனத்தில் பயணித்ததும் குறிப்பிடத்தக்கது.
`தி.மு.க கொள்கையுடன் ஒத்துப் போகிறேன்!' - கமல்!
இந்தநிலையில், மார்ச் 1-ம் தேதி, தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் `எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டது. தி.மு.க அழைப்பின் பேரில் அந்தப் புகைப்படக் கண்காட்சியை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் திறந்துவைத்தார். அப்போது, அங்கிருந்த வருகை பதிவேட்டில், ``மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக, தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும், சவாலையும் அனுபவித்து ஏற்றவர். அவரின் படிபடியான உயர்வை படம்பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம், நன்றி" என எழுதினார்.
மேலும் பேட்டியின்போது, ``தி.மு.க கொள்கையுடன் நீண்ட நாள்களாகவே ஒத்துப் போகிறேன். முதல்வா் ஸ்டாலினுக்கு இப்போது பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுகிறேன். கூட்டணி குறித்து பிறகு கூறுகிறேன். கூட்டணியைப் பேச வேண்டிய நேரம் இது அல்ல. அதை இப்போது சொல்லக் கூடாது. `சீன் பை சீனாகத்தான்' கதையை நகா்த்த வேண்டும். க்ளைமாக்ஸை இப்போதே கேட்கக் கூடாது!" எனக்கூறி `க்ளைமாக்ஸை க்ளியராக' வெளிப்படுத்தியிருக்கிறார்.!
from India News https://ift.tt/pbjz1r7
0 Comments