மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என சசிகலா கூறியிருப்பதைத்தான் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம். சாதாரண தொண்டர்கள்கூட கழகத்தின் பதவிக்குப் போட்டியிடலாம். ஆனால், எடப்பாடி தரப்பு 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்து, 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிந்தால் மட்டுமே உச்சபட்ச பதவிக்குப் போட்டியிடலாம் என்று கழக விதிகளை மாற்றி அமைத்திருக்கிறது. அதைத்தான் கூடாது என்கிறோம். அ.தி.மு.க-வின் பழைய விதிகளைப் பின்பற்றினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன்.
அடிமட்டத் தொண்டர்கள் ஆதரவுடன் 50 ஆண்டுக்காலம் முழுமையாக தமிழகத்தை வழிநடத்தி ஆட்சிபுரிந்த கட்சி அ.தி.மு.க என்ற நிலையை அம்மாவும், புரட்சித் தலைவரும் உருவாக்கினார்கள். அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். அதேபோல கழகத்தின் சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கவும், பழைய உறுப்பினர்களைப் புதுப்பிக்கவும் வேண்டும். உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டு, சட்ட விதிப்படி அவர்களுக்கெல்லாம் உறுப்பினர் அட்டை வழங்கப்பட வேண்டும்.
அதன் பிறகே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். அப்படிச் செய்தால் உறுதியாக, கீழ்மட்டத் தொண்டர்கள்கூட தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைதான் புரட்சித் தலைவர் காலத்திலிருந்து மாண்புமிகு அம்மா காலம் வரை கடைப்பிடிக்கப்பட்டது. அதை மாற்றக் கூடாது என்றே வலியுறுத்தியிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
from India News https://ift.tt/DShM6QF
0 Comments