தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, இன்று காலை 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார். இதில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கான பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட் உரையில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ``சமூகத்தின் சரிபாதி பெண் இனத்தை சரிநிகர் சமாக மாற்ற பாடுபடுகிறது தி.மு.க அரசு. கல்வியில், நிர்வாகத்தில், அதிகாரம் மற்றும் பெரிய பொறுப்பில் பெண்களை உயர்த்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்கு சொத்துரிமை, உள்ளாட்சியில் தனி இடஒதுக்கீடு முதல் இன்று கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை மகளிர் நலன் காத்து அவர்களது உரிமைகளுக்காக எப்போதும் செயல்பட்டு வருகிறோம்.
அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம். தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படவுள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
மத்திய அரசால் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு மற்றும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்கைக்கு பெரும் உதவியாக இருக்கும். வரலாற்று சிறப்புமிக்க இந்தத் திட்டம் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல்வரால் தொடங்கிவைக்கப்படவுள்ளது.
இத்திடத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழக மகளிரின் வாழ்வில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த திட்டத்துக்காக ரூ. 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
from India News https://ift.tt/wtacrXM
0 Comments