கர்நாடகா: ரோகிணி IAS Vs ரூபா IPS - பொதுதளத்தில் பெண் அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் சண்டை என்ன?

பொதுவெளியில் பலரும் அறியும் வண்ணம், சமூக வலைதளங்களில் முரண்பட்ட கருத்துகளால் சிலர் சண்டை போட்டுக் கொள்வதுண்டு. கர்நாடகாவில் உயர் பொறுப்புகளை வகிக்கும் இரு பெண் அதிகாரிகள், இப்போது அப்படி சண்டையிட்டு வருகின்றனர்.

கர்நாடகாவின் ஐ.பி.எஸ் அதிகாரியான ரூபா மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரோகிணி சிந்தூரிக்கு இடையில் சமூக வலைதள சண்டை வலுத்து வருகிறது.

Social Media

ரூபா, சிந்தூரியின் சில படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மைசூர் கிருஷ்ணராஜ நகரைச் சேர்ந்த ஜனதாதள எம்.எல்.ஏ. சாரா மகேஷ் மற்றும்  சிந்தூரி ஒன்றாக உணவகத்தில் இருக்கின்றனர். 2021ல் இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் ஒன்றாக உணவகத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ரூபா, `ஓர் அதிகாரி, அரசியல்வாதியை ஏன் சந்திக்கிறார்? சமரசம் செய்யப்படுகிறதா?' என்ற பதிவிட்டுள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் களேபரமானது.

அதோடு மட்டுமல்லாமல், பிப்ரவரி 18 சனிக்கிழமையன்று, ரோகிணியின் மீது 20 குற்றச்சாட்டுகள் கொண்ட ஒரு விரிவான ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டார் ரூபா. அதில் ஊழல், தனிப்பட்ட புகைப்படங்களை 3 ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பகிர்ந்து கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ஊழல் குறித்த பேச்சுகள் இருந்தபோதும், ரோகிணியின் மீது ஏன்  விசாரணை நடத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார். அப்போதைய மைசூரு சிட்டி கார்ப்பரேஷன் கமிஷனர் ஷில்பா நாக் உட்பட சக அரசு ஊழியர்களுடன் ரோகிணியின் கடந்தகால மோதல்களையும் குறிப்பிட்டார். 

`கோவிட் தொற்று சமயத்தில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சாமராஜநகர் அரசு மருத்துவமனையில், 24 பேர் இறந்தனர். மைசூரு சாமராஜ நகருக்கு போதிய ஆக்சிஜன் கொண்டு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தது. இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவில், ரோகிணி தனது வீட்டில் நீச்சல் குளம் கட்டியது ஏன்?’ என்றும் கேள்வி எழுப்பினார்.

கோவிட் இறப்பு

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமையன்று, ரோகிணி சிந்தூரி ஊடக அறிக்கையை வெளியிட்டார். அதில், ``மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்னை. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்படும்போது, அது மிகவும் ஆபத்தானதாகிறது. 

எனக்கு எதிராக ஒரு தவறான, தனிப்பட்ட அவதூறு பிரசாரத்தை நடத்துகிறார் ரூபா. அது அவரின் நிலையான செயல்பாடாகவே உள்ளது. அவர் பணியாற்றிய ஒவ்வோர் இடத்திலும் அதைச் செய்துள்ளார்.

ரூபா பகிர்ந்த படங்கள் சமூக ஊடகத்திலும், வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களில் இருந்தும் எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்கள். அவை என்னை அவதூறு செய்ய தவறாகப் பயன்படுத்தப்பட்டது. ரூபா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்’’ என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

ரோகிணி சிந்தூரி தற்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகவும், ரூபா கர்நாடக கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இரண்டு உயர் பதவிகளில் இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் இந்தப் பிரச்னை, சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. 



from India News https://ift.tt/y0dRIbB

Post a Comment

0 Comments