``முப்பெரும் விழா; மாவட்டம் டு கிளை நிர்வாகிகள் நியமனம்" - பன்னீர்செல்வத்தின் திட்டம்தான் என்ன?!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் தனது சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்ற பன்னீர், இரட்டை இலைக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார். அதற்காக பன்னீர் தரப்பு சமர்பித்த நட்சத்திர பேச்சாளர் பட்டியலை நிராகரித்து ஷாக் கொடுத்தது தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் உள்ள மொத்த கட்சியும் ஈரோடு இடைத்தேர்தலில் தீயாய் சுற்றிவந்த நேரத்தில், கடந்த இரண்டு வார காலமாக அரசியல் முடக்கத்தை சந்தித்தது பன்னீர் தரப்பு.

பன்னீர்செல்வம்

இந்நிலையில்தான், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார் பன்னீர். அதன்படி, தனது அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 20-ம் தேதி நடைபெற்றது.

இதுகுறித்து பன்னீர் அணியின் மாவட்ட செயலாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், ``ஈரோடு இடைத்தேர்தல் களம், இரட்டை இலை சின்னத்துக்கான மவுசு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதலில் ஆலோசிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கியது உள்ளிட்ட தற்போது நமது அணியில் நிலவும் தேக்கநிலை குறித்தும் பேசப்பட்டது. இதை சரி செய்ய முதற்கட்டமாக பெரிய அளவிலான பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களில் நமது செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் எல்லாம் கையை விட்டு போய்விடும்.

மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

தர்மயுத்த காலகட்டத்தில் நாம் செய்த மாஸான விஷயங்களை மீண்டும் செய்ய வேண்டும். இடைத்தேர்தலில் ஆளும் திமுக பணத்தை தண்ணீர் போல் செலவு செய்கிறது. அதை எடப்பாடியால் நிச்சயம் எதிர்கொள்ள முடியாது. மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார்கள். அப்போது நமது பக்கம் பலமாக இருந்தால்தான், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் நமது பக்கம் வருவார்கள் என்று கூட்டத்தில் பேசிய எல்லா நிர்வாகிகளும் ஓ.பி.எஸ்-ஸுக்கு கோரிக்கை வைத்தோம். அதன்படிதான், விரைவில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்டம், கிளை அளவுகளில் நிர்வாகிகள் நியமனம் செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து தனித்தனிக்குழுவாகவும் நாங்கள் ஆலோசித்தோம். அதேபோல, எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, அம்மா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா என முப்பெரும் விழா மார்ச் மாதம் நடத்தப்படும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

பன்னீர்செல்வம்

ஏற்கனவே, 2019 உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்வி, 2022 நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி என அ.தி.மு.க-வை இறங்குமுகத்தில் கொண்டு சென்றிருக்கிறார் எடப்பாடி. ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர், தற்போது பாஜக-விடம் முரண்டுபிடிப்பதுபோல எடப்பாடியால் இருக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தல் அ.தி.மு.க-வின் மொத்த அரசியல் காட்சிகளையும் மாற்றிவிடும்" என்கின்றனர்.



from India News https://ift.tt/TY0AZku

Post a Comment

0 Comments