‘‘ஆட்டநாயகன் நான்தான்; சபரீசன் ஈரோட்டுக்குச் சென்றது ஏன் தெரியுமா?’’ - விளக்கும் சீமான்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் நேற்றிரவு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில், சுமார் இரண்டாயிரம் பேர் அந்தக் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். அப்போது பேசிய சீமான், ‘‘நம் நிலத்தின் வளங்கள், நம் கண் முன்னேயே களவுபோய்க்கொண்டிருக்கின்றன. காற்றும், நீரும், உணவும் நஞ்சாகிக்கொண்டிருக்கின்றன. இதைப்பற்றி சிந்திக்கவோ, தடுத்து செயலாற்றவோ முடியாத, அது குறித்த புரிதலற்ற தலைமைகளிடத்தில் நாடு நீண்டகாலமாக சிக்கிக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலில் அறிவென்று ஒன்று இருந்தால் ‘கடலுக்குள் பேனா வைக்கிறேன்’ என்று கிளம்புவார்களா... ஆனால், அவர்கள்தான் பகுத்தறிவைக் கண்டுபிடித்த பகுத்தறிவு பகலவனின் துகள்கள், தூசுகள் என்று எதை, எதையோ சொல்லிக்கொள்கிறார்கள். நமக்கும் ஒரு என்டர்டெய்ன்மென்ட் வேண்டும். 24 மணி நேரமும் நம்மைப் பரபரப்பாகவே வைத்திருக்கிறார்கள். அதற்காகவாவது அவர்களைப் பாராட்ட வேண்டும்.

சீமான்

ஒரு கோட்பாடு கொண்டவன்; ஆகச்சிறந்த ஆட்சியைக் கொடுத்தவன்; மக்களின் நலனுக்காகத் திட்டங்களைத் தீட்டி அதைச் செயல்படுத்துகின்றவன்; ஒரு நேர்மையாளன்; ஒரு உண்மையாளன் என்றால் ஓட்டுக்கு காசு கொடுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஐந்தாயிரம் கோடி திருடினால் ஓட்டுக்கு 500 ரூபாய்; பத்தாயிரம் கோடி திருடினால் ஓட்டுக்கு 1,000 ரூபாய்; லட்சம் கோடி திருடினால் ஓட்டுக்கு 10,000 ரூபாய் கொடுப்பான். உனக்குக் கொடுக்கின்ற காசை வைத்தே அவன் எவ்வளவு திருடியிருப்பான் என்று கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளலாம். இதுவரை ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 10,000 ரூபாய் என்றார்கள். அது நாளையிலிருந்து 15,000 ரூபாயாக மாறும். ஏனென்றால், நான் அங்கு போகிறேன். மொத்தமாக விளையாட்டுப் போட்டி முடிந்துவிட்டது. பல அணிகள் விளையாடிவிட்டார்கள். ஆனாலும், ‘மேன் ஆஃப் தி மேட்ச்’, ‘ஆட்ட நாயகன்’ யாரென்றால் நாங்கள்தான்.

எங்கள் ஆட்டத்துக்குப் பின்னர் ஓட்டுக்கு 20,000 ரூபாய் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏதோ எங்களால் முடிந்தது. மக்களுக்குச் செய்ய எங்களிடம் ஒன்றுமே இல்லை. இதையாவது செய்கிறோம். களத்தில், அதிகாரமற்ற எளியப் பிள்ளைகளாக நிற்கிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் முதலியார் வாக்குகள் அதிகம். நானொரு முதலியார் தங்கையை நிறுத்தியிருக்கிறேன். முதலியார்கள் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று பயந்துகொண்டு, மருமகன் சபரீசனை அனுப்பி முதலியாளர்களைச் சந்திக்கச் செய்திருக்கிறார் மாமனார் ஸ்டாலின். காரணம், சபரீசன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இதுவும் திராவிட மாடலில் வருகிறது. சாதி ஒழிப்பு, சமத்துவம், சமூகநீதி எல்லாமே ஸ்டாலின் வீட்டுக்குள் மட்டுமே இருக்கிறது.

சீமான்

என்னிடம் நிறைய பேர் வந்து, ‘ஏதாவது கூட்டணிக்குப் போ... 10 எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்குள் போய்விடுவார்கள். அதுக்குப் அப்புறம் நல்லாயிருக்கும்’ என்கிறார்கள். எனக்கு பத்து சீட்டு வேண்டாம். இந்த நாடு வேண்டும். கெஜ்ரிவாலால் வெல்ல முடிகிறது. இந்த சீமானால் வெல்ல முடியாதா... நாடாளுமன்றத் தேர்தலில் பாருங்கள் என்ன அடி அடிக்கப்போகிறேன் என்று! காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, தி.மு.க என நான்கு பேருக்கும் ஒரே எதிரி நான்தான். ஒருத்தரும் நிம்மதியாகத் தூங்குவதில்லை. நான் தூங்க விடப்போவதுமில்லை. நான் போதிக்கும்போது உங்களுக்குத் தெரியாது. நீங்களெல்லாம் பாதிக்கும்போதுதான் புரியும். தயவுசெய்து சொல்கிறேன். தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மட்டும் ஓட்டு போட்டுவிடாதீர்கள். எனக்குக்கூட போட வேண்டாம். அன்றைக்கு பிரியாணி சாப்பிட்டு வீட்டுலயேகூட இருங்கள். தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடுவதும், நமக்கு நாமே வாய்க்கரிசி போட்டுக்கொள்வதும் ஒன்றுதான்.

என்னை ‘இனவெறியன்’ என்று சொல்கிறார்கள். ஆனால், பி.பி.சி ஆவணப்படம் பற்றி சொல்வதற்கு இந்தியாவில் ஒருத்தனும் இல்லை. ‘துணிந்து சொல்கிறேன்’ என்று சாட்சி சொல்லப் போனவன் சிறையில் இருக்கிறான். சிலர் கொல்லப்பட்டார்கள். இது முழு ஆவணம் கிடையாது. ஒரு கர்ப்பிணி வயிற்றைக் கீறி குழந்தையை வெளியே எடுத்து நெருப்பில் வீசியதும் இருக்கிறது. இதை எந்த மதம் கற்பித்திருக்கிறது. எந்த வேதம் போதித்திருக்கிறது. மதம் எப்படி நாட்டை ஆள முடியும். மதத்துக்கும், அதிகாரத்துக்கும் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும். அதிகாரத்துக்கு வருவது மனிதமாகத்தான் இருக்க வேண்டும். மதத்தைத் தாண்டி மனிதம்தான் உலகிலேயே புனிதமானது. நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகளின் கோட்பாடு மனிதம் மட்டுமல்ல. அதையும் தாண்டி உயிர்மை நேயம். ஏனென்றால் நாங்கள் மனிதநேயவாதிகள் அல்ல; உயிர்மை நேயர்கள்.

சீமானுக்கு நினைவுப்பரிசு வழங்கிய நிர்வாகிகள்

கலவரத்தின் முழுப் பகுதியையும் போட்டிருந்தால் பார்க்கவே முடியாது. 40 நிமிடங்களுக்கு வெளியிடப்பட்ட அந்த காட்சிகளையே இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை; தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உண்மைச் சுடும். உண்மை வலிமையானது. இந்த ஆவணப்படத்தை கேரள அரசு மக்களுக்குத் தெருத் தெருவாக திரையிட்டுக் காட்டியது. அது ஆண்மையுள்ள அரசு; துணிவுள்ள அரசு; நேர்மையுள்ள அரசு. இங்கே வாய்க்கிழிய பீத்திக்கொண்டிருப்பவர்கள் அலைபேசியில் பார்த்தவர்களைக்கூட கைதுசெய்தார்கள். நம் அரங்குக்குள்ளேயே ஒளிபரப்புவதைத் தடைசெய்கிறார்கள். இன்னும் மூன்றே ஆண்டுகளில் நான் வீதி, வீதியாகப் போட்டுக் காட்டுகின்ற காலம் வரும். உண்மையிலேயே பி.ஜே.பி-க்கு எதிராக நீங்கள் கோட்பாடு, நிலைப்பாடு கொண்டவர்களாக இருந்தால், இந்த ஆவணப்படத்தைத் திரையிடத் தயங்குவது ஏன்... உண்மையிலேயே பி.ஜே.பி-யின் B டீம் அல்லது மெயின் டீமே நீங்கள்தான். ‘தி.மு.க-தான் எங்களுக்குப் பாதுகாப்பு’ என்று இந்த மக்கள் இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆமாம். உங்களைப் பத்திரமாக ஜெயிலுக்குள் வைத்துப் பாதுகாக்கும்’’ என்றார் ஆவேசமாக!



from India News https://ift.tt/4SXyYwc

Post a Comment

0 Comments