`தவறுதலாக நடந்துவிட்டது' - புது பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை வாசித்த ராஜஸ்தான் முதல்வர்!

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த பட்ஜெட் தாக்கலின்போது, பட்ஜெட்டை வாசித்த முதல்வர் அசோக் கெலாட் தற்செயலாக பழைய பட்ஜெட்டை வாசிக்காத தொடங்கினார். அசோக் கெலாட், சுமார் 8 நிமிடங்கள் பழைய பட்ஜெட்டையே வாசித்துக்கொண்டிருக்க, உடனடியாக தலைமைச் செயலாளர் அதனைச் சுட்டிக்காட்டி நிறுத்தினார்.

அசோக் கெலாட்

இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவையில் கூச்சல் போட்டு அமளியில் ஈடுபடத்தொடங்கினர். இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ``முதல்வர், சுமார் 8 நிமிடங்களுக்கு பழைய பட்ஜெட்டையே வாசித்துக்கொண்டிருந்தார். நான் முதல்வராக இருந்தபோது பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்பு பலமுறை அதனைச் சரிபார்த்து வாசித்தேன்.

வசுந்தரா ராஜே

இதன்மூலம், பழைய பட்ஜெட்டை வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க முடியும்" என விமர்சித்தார். மேலும், மற்றொரு பா.ஜ.க தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, ``இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இது கசிந்துவிட்டதா..." என கேள்வியெழுப்பினார்.

அசோக் கெலாட்

பின்னர் எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அசோக் கெலாட், ``என் கையிலிருக்கும் பட்ஜெட்டுக்கும், அவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நகல்களுக்கும் வித்தியாசம் இருந்தால் மட்டுமே அதனைச் நீங்கள் சுட்டிக்காட்ட முடியும். என்னுடைய பட்ஜெட் நகலில் தவறுதலாக ஒரு பக்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க எப்படி பட்ஜெட் கசிவு என்ற கேள்வி எழுகிறது..." என்றார். பின்னர் பட்ஜெட்டை தாக்கல்செய்த அசோக் கெலாட், ``இது தவறுதலாக நடந்துவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்" என்று கூறினார். ராஜஸ்தானில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/DZJQ4Mw

Post a Comment

0 Comments