ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி, மாநில தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையர் என பல்வேறு படிநிலைகளிலும் புகார்களை பறக்கவிடுக்கிறது அ.தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மட்டும் இதுவரை 200-க்கும் மேற்பட்ட புகார்கள் சென்றிருக்கின்றன.
குறிப்பாக, 'ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர் பட்டியலிலுள்ள பல வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லை. ஒரே வீட்டிலுள்ள ஐந்துக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒரே முகவரியில் இல்லாமல் வெவ்வேறு முகவரிகளில் இருக்கின்றனர். இறந்தவர்களின் பெயர்கள்கூட வாக்காளர்கள் பட்டியலில் இருக்கிறது. சுமார் 40,000 வாக்குகள் மோசடியாக இருக்கின்றன' என டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரைச் சந்தித்து சி.வி.சண்முகம் புகார் மனுவை 16-ம் தேதி வழங்கியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
அதேபோல, இடைத்தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள், அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் உடனுக்கு உடன் அனுப்பவேண்டும் என்றும், புகார்களை ஆதாரத்துடன் அளித்தால் அவற்றின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைதான் இடைத்தேர்தலை தள்ளிப் போகுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அதேபோல, களத்தில் அ.தி.மு.க-வும் புகார்களை உடனுக்கு உடன் அனுப்ப ஆயத்தமாகி வருவதோடு, தேர்தல் செலவுகளையும் குறைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அ.தி.மு.க சீனியர் தேர்தல் பொறுப்பாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ஆளுங்கட்சியின் பணபலத்துக்கு ஈடாக அ.தி.மு.க தொண்டர்களால் நின்று போராட முடியவில்லை. ஆரம்பத்தில் தி.மு.க-வுக்கு இணையாக அ.தி.மு.க செலவு செய்தது.
ஆனால், அந்தச் செலவை இப்போது குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது தலைமை. தி.மு.க நாளுக்கு நாள் சூட்கேஸ்களை அதிகரித்து வருகிறது. வார்டுகளில் லைட், தண்ணீர் குழாய்கள் இல்லையென புகாரளிக்கப்பட்டால், உடனடியாக அவற்றை சரி செய்கிறார்கள் தி.மு.க-வினர். வாக்காளர்களை லாரிகளில் கூட்டம் கூட்டமாக ஏற்றி மனிதப் பட்டிகளில் அடைக்கிறார்கள்.
அவர்களுக்கு டோக்கன் கொடுத்து பணமும் கொடுக்கிறார்கள். இந்தச் சூழலில், ஆளுங்கட்சியின் அதீத பணப்பட்டுவாடாவை பெரிதாக்கி, இடைத்தேர்தலையே ரத்து செய்ய வியூகம் வகுக்க ஆரம்பித்திருக்கிறது தலைமை. அதற்காக ஆதரங்களைச் சேகரித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வருகிறது. இதற்கான பொறுப்பு ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், இன்பதுரை ஆகியோரிடம் ஒப்படைத்திருக்கிறார் எடப்பாடி. தேர்தல் ஆணையமும் தனது பங்குக்கு பார்வையாளர்களை அதிகரித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் 40,000 பேர் போலி வாக்காளர்களாக இருக்கின்றனர். அதை நீக்காமல் தேர்தல் நடத்தவே முடியாது. நிலைமை இப்படியே சென்றால், நிச்சயம் இடைத்தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது" என்றனர்.
from India News https://ift.tt/xOYuZ9I
0 Comments