``நம் தேச வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது கார்ல் மார்க்ஸ் சிந்தனை" - ஆளுநர் ரவி பேச்சு

சென்னை ராஜ் பவனில் நேற்று (21.02.2023) பேராசிரியர் தர்மலிங்கத்தின் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள்' மற்றும் 'பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம்' ஆகிய புத்தகங்களின் தமிழாக்க வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது, ``பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் என்பது சனாதன ஆன்மிகத்தின் சமகால விளக்கமாகும். இது ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ஆன்மாவிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. இன்று நம் நாடு முன்னேறும்போது, தீன்தயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனித நேயம் வெளிப்படுகிறது.

புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர்

சனாதன தர்மம்

‘சனாதன தர்மம்’ என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அனைத்தையும் உள்ளடக்கிய 'தர்மம்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சமஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ் பாடலான கனியன் பூங்குன்றனாரின் "புறநானூறில்" கூட "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற வரிகளில் காணப்படுகிறது.

‘தர்மம்’ என்ற சொல்லை ‘மதம்’ என்பதன் ஆங்கில பொருளாக தவறாக புரிந்து கொண்டு, தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் மாபெரும் தவறைச் செய்துவிட்டோம். நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பிரபஞ்சத்தின் நித்திய சட்டம் தர்மம்.

காலனித்துவ மனப்பான்மை

பிரிட்டிஷ் ஆட்சி, பாரதத்தின் சமூகம், கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் அழிவை ஏற்படுத்தியது. சுதந்திரத்திற்குப் பிறகு, நம் நாட்டின் ஆன்மாவுக்கு தக்கபடி நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் நாம் பாதை தொலைத்து அதே காலனித்துவ மனப்பான்மையை தொடர்ந்தோம். மேலும் நமது கொள்கைகள் மேற்கத்திய கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களை நோக்கியே பெரிதும் இருந்தன. பசி, படிப்பறிவற்ற, நோயாளிகள், ஏழைகள் என பலர் நம்மிடையே இருந்தது, பிரச்னைகளை மேலும் தீவிரப்படுத்தியது. அது பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை விளைவித்தது. மிகவும் வளர்ந்த மாநிலங்களில் கூட, நமது தமிழ்நாடு உட்பட, மாநிலத்துக்குள்ளாகவே சில ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.

காரல் மார்க்ஸ்!

நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நான்கு முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள். அவை இறையியல், டார்வினிய கோட்பாடு, கார்ல் மார்க்ஸ் கோட்பாடு மற்றும் ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகியவை.

வாழ்க்கையைப் பற்றிய மானுட மையக் கண்ணோட்டத்தை நம்பும் இறையியலில் மனிதர்கள் படைப்பின் மையமாக உள்ளனர். மீதமுள்ள படைப்புகள் மனிதன் இன்புற்று அனுபவிக்கவே என அது கூறியது. இயற்கை வளங்களை பொறுப்பற்ற முறையில் சுரண்டுதல், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே முரண்பட்ட நிலையை உருவாக்குதல், காலநிலை நெருக்கடியை விளைவித்தல் போன்றவை அவை.

மறுபுறம் பாரதிய தர்ஷன் என்பது, நாம் அனைவரும் படைப்பின் ஒரு பகுதியே என்றும், நாம் மனிதர்களாக இருந்தாலும், விலங்குகளாக இருந்தாலும், பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளோம் என்று நம்புவது அல்லது நாம் அனைவரும் ஒரே தாய் பூமியின் குழந்தைகள் என கருதுவதாகும்.

டார்வின்

வல்லோன் வாழ்வான் என்ற டார்வினிய கோட்பாடு, பலவீனமானவர்களுக்கு இருப்பதற்கான உரிமை இல்லை என்றும் வலிமையானவர்கள் மட்டுமே முன்னேறுவார்கள் என்று குறிப்பிட்டார். சரியோ தவறோ என்ற உணர்வு இல்லாத காட்டாட்சி போன்றது அது. ஆனால், ‘பாரதிய தரிசனம்’ என்பது கருணையுடன் கூட்டாக உயிர்கள் வாழ்வதை நம்பியது.

கார்ல் மார்க்சின் கோட்பாடு என்பது, இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே நிரந்தர மோதல்ளைக் கொண்டது. அந்த கோட்பாட்டின்படி, 'இல்லாதவர்கள்' மேலோங்க வேண்டும். இந்த யோசனை வைரஸாக பரவுகிறது. இந்த மாதிரியானது வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையேயும் அதற்குள்ளும் பிளவுகளை உருவாக்கியது. இது சமூகத்தில் நிரந்தர மோதலைத் தூண்டியது.

புத்தகங்க வெளியீட்டு விழாவில் ஆளுநர்

ரூசோவின் சமூக ஒப்பந்த கோட்பாட்டில், அவர், ஒரு தனி நபர், ஒரு சமூகம் மற்றும் ஒரு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான தோற்றம் மற்றும் உறவை ஒரு "ஒப்பந்தமாக" பார்த்தார். இது தனிநபரை முதன்மைப் பங்குதாரராகக் கருதுகிறது. கூட்டு, மாநிலங்கள் மற்றும் சமூகத்தை விட, தனி நபரின் மேலாதிக்கத்தை அது ஆதரிக்கிறது. ஆறு பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் கேட்ட ஒரு யானை கதை போல, எல்லோரும் அதன் ஒரு பகுதியை மட்டுமே பார்த்தார்கள், யாரும் மொத்தமாகப் பார்க்கவில்லை.

நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கு எடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள் காட்டிப் பேசுகிறார்கள். மேற்கோள் காட்ட இந்த நாட்டிலிருந்து ஒருவர் கூட இல்லை என கருதுகிறார்கள். "மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது" என்ற ஜனநாயகம் பற்றி பேசும்போது ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் அதே நபர் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதை மறந்து விடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனைப் புகழ்கிறார்கள். இவை எல்லாம் பதிவு செய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை.

மோடி

இன்று, இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. மேலும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் இருப்போம், மேலும் 2047 ஆம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறுவோம். முழு உலகமும் இந்தியாவின் நம்பகத்தன்மை வாய்ந்த கதையையும் வளர்ச்சியையும் பார்க்கிறது. இந்தியாவை உலகளாவிய மீட்சியின் இயங்கு சக்தியாக பார்க்கிறது.

கொரோனா பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு, உலகம் மந்தநிலை போன்ற சூழ்நிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவால் மட்டுமே வளர்ச்சிப் பயணத்தில் செல்ல முடிந்தது. உலக வல்லரசுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்தபோது, ​​அவை அந்த நிலைமையை கூட பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகப் பார்த்தன. ஆனால் இந்தியா தனது சொந்த தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை கிட்டத்தட்ட 150 நாடுகளுக்கு இலவசமாக வழங்கியது. இந்தியாவின் தடுப்பூசிகள் இன்னும் உலகிலேயே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

தடுப்பூசி

இன்று, நாம் கருணை குணத்தோடு முழுமையாக மீண்டு வருகிறோம். இந்த மாற்றம் ஏற்பட காரணம், நாம் நமது நாட்டை பார்க்கும் விதம் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் நாம் இந்த நாட்டை மேற்கத்திய கண்ணோட்டத்தில் பார்த்தோம். ஆனால் தொலைநோக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய தலைமையின் கீழ், இன்று நம் நாட்டை ‘பாரதிய’ கண்ணோட்டத்தில் ஒரே குடும்பமாக பார்க்கிறோம். இதன் விளைவாக, நாம் அற்புதமான முடிவை எட்டுகிறோம்.

தூய்மையான எரிசக்தித் துறையில் சாதிக்கிறோம். மகளிர் சக்தி, கட்டுமான துறை வசதிகளை உருவாக்குகிறோம். விரிவான மற்றும் துணிச்சலான அணுகுமுறை அற்புதமான விளைவுக்கு வழிவகுக்கிறது. நாட்டின் பிரச்னையை துண்டு துண்டாக அல்லாமல், ஒட்டுமொத்தமாக பார்த்ததால் தான் இதை நாம் சாதித்தோம். தேசிய தலைமை அழைப்பு விடுக்கும்போது, அது பாரதத்தின் ஆன்மாவைத் தொடுகிறது, ஒட்டுமொத்த தேசமும் நம்பிக்கை வைக்கிறது.

புத்தகங்க வெளியீட்டு விழாவில் ஆளுநர்

130 கோடி மக்களின் படைப்பு மற்றும் கூட்டு ஆற்றலுடன், இந்த ‘அமிர்த காலத்தில்’ தேசம் தனது இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. முன்னதாக, ஆளுகை மாடல் என்பது பிறரது அனுசரணையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நம் மக்கள் கண்ணியத்துடன் வளரும் போது தான் நமது பாரதம் வளரும், உலகம் பாதுகாப்பாக இருக்கும். அது இப்போது உறுதிப்படுத்தப்படுகிறது.

இளம் அறிஞர்கள் படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும், புத்தகங்கள், கட்டுரைகள், தலையங்க கட்டுரைகள் எழுதவும் முன்வர வேண்டும். நமது அறிவுசார் இடத்தை சிந்தனைக்கு உரமிட்டு காலனித்துவ மனப்பான்மையில் இருந்து வெளிவந்து, நாம் யார் என்பதைப் புரிந்து கொள்ளவும், ஆராயவும் புதிய சிந்தனைகளைத் தூண்டிவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.



from India News https://ift.tt/clEZyTa

Post a Comment

0 Comments