சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி - அண்ணாமலையின் ரூட் க்ளியராகிறதா?

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிராவோடு சேர்த்து மொத்தம் 12 மாநிலங்களுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் புதிய ஆளுநர்களை நியமித்திருக்கிறார்.

அயோத்தி வழக்கு, பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு ஆகியவற்றில் தீர்ப்பளித்த அமர்வுகளில் ஒருவராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அப்துல் நசீர், ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பெய்ஸ் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, பாஜகவின் முன்னாள் எம்.பியும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். லடாக்கின் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் மாத்தூருக்கு பதிலாக அருணாச்சல பிரதேச ஆளுநராக இருந்த பிரிகேடியர் (டாக்டர்) பி.டி.மிஸ்ரா, லடாக்கின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்துக்கும், ஆந்திர மாநில ஆளுநராக இருந்த ஹரிசந்தன், சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் மாற்றபட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட 13 ஆளுநர்களில், இருவர் ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள், ஒருவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது!

இல. கணேசன் 

பாஜகவின் மாநில தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் ஆகியோரைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாஜகவிலிருந்து மூன்றாவது நபராக ஆளுநராகும் வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றி கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.பி ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டிலிருந்து மீண்டும் ஒரு ஆளுநரை, குடியரசுத் தலைவரும் பிரதமரும் கொடுத்துள்ளனர். அவர்கள், தமிழினத்தின் மீதும், தமிழ் பாரம்பரியத்தின் மீதும், கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்துக்கும் என்னென்ன வழியில் ‌செய்லபட முடியுமோ அதை மனதில் வைத்துப் பணியாற்றுவேன். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவேன்‌,

இது, எனக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை. தமிழினத்திற்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கிறேன். பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் அரசியல் வாழ்வின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதைப் பார்க்கிறேன. " என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

1957-ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்த ராதாகிருஷ்ணன், அங்கு பள்ளிப்படிப்பை முடித்த பின் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பி.பி.ஏ படித்தார். பள்ளி மாணவராக இருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அறிமுகம் கிடைக்கப்பெற்று, தனது 16-வது வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்தார். இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியவர். கோவை மாவட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எமர்ஜென்சி எதிர்ப்பு மாணவர் இயக்கத்தில அமைப்புச் செயலாளராக பணியாற்றியவர். ஜனதா கட்சியில் அரசியல் ரீதியாக பணியாற்றினார். பிறகு, 1997-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த பா.ஜ.க பொதுக்குழுவில் அக்கட்சியில் இணைந்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

1998, 1999, 2004, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார். இதில் 1998-ல் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார். ஆனால், மத்திய பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றதால், 1999-ல் மீண்டும் தேர்தல் நடந்தது. அதில், கோவை தொகுதியில் திமுக - பாஜக கூட்டணியில் போட்டியிட்டு வென்று எம்.பி ஆனார்.

2003-ம் ஆண்டு தமிழ்நாடு பஜக தலைவராக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் நின்றபோது தோல்வி கண்டார். அதன் பிறகு, அவருக்கான அரசியல் வாழ்வில் பெரிய வெற்றி கிடைக்காத நிலையில் 2014, 2019 தேர்தல்களில் மீண்டும் கோவை தொகுதியில் பாஜக சார்பாக நின்று தோல்வியைத் தழுவினார். தற்போது, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர், கேரள மாநில பொறுப்பாளர் ஆகிய பொறுப்புகளை ராதாகிருஷ்ணன் வகித்து வந்த நிலையில், அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி குறித்து பா.ஜ.க சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

சி.பி.ராதாகிருஷ்ணன், வாஜ்பாய்

இப்போது ஏன் ஆளுநர் பதவி?

“ சி.பி.ஆரு-க்கு ஆளுநர் பதவி கொடுத்திருப்பது கௌரவமான ஒன்றுதான். ஆனால், திடீரென்று அறிவித்ததன் பின்னணியிலும் ஒரு கணக்கு இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து குறைந்தது 5 எம்.பிக்களையாவது பெற வேண்டும் என்று பாஜக முனைப்புக் காட்டுகிறது. அதற்காக, இதற்கு முன் நாங்கள் போட்டியிட்ட இடங்கள், எங்களுக்கான செல்வாக்கு இருக்கும் பகுதிகள் அடங்கிய தொகுதிகள் என பத்து தொகுதிகளை தேர்வு செய்து வேலை செய்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில் கொங்கு பகுதியான நீலகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகனும், கோவையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோரும் வேலை பார்த்து வருகின்றனர். வானதிக்கு கிரவுண்ட் லெவலில் நல்ல அச்சாரம் இருக்கிறது. இவர்களைப் போலவே இந்து முன்னணியினர் அதிகம் இருக்கும் திருப்பூரில் சி.பி.ஆரும் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார். ஒருவேளை திருப்பூர் கிடைக்காவிட்டால், அடுத்ததாக தான் ஏற்கனவே பல முறை போட்டியிட்ட கோவை தொகுதியைத்தான் சி.பி.ஆர் தேர்ந்தெடுத்து, அதற்காக லாபி செய்வார். அது அண்ணாமலைக்கு இடையூறாகும்.

சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜ, பொன் ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில்தான் சி.பி.ஆரின் கடந்த கால அரசியல் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தலைமையிடம் கொடுக்கப்பட்டது. அதில், ஒருவர் தேர்தலில் நிற்கும்போது மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, சாதிய ரீதியாக ஒருவருக்கான ஆதரவு, கட்சிக்காக ஒருவர் செய்யும் தியாகம், செலவுகள் ஆகிய 3 விஷயங்கள் முக்கியமாக கவனிக்கப்படும். ஆனால், அந்த மூன்றிலும், அவருக்கு பெரிய அளவில் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல் அவர் தமிழக பாஜக-வின் தலைவராகவும், எம்.பி-யாகவும் இருந்த காலங்களில் மட்டுமே கட்சி வேலைகளில் ஆக்டிவாக ஈடுப்பட்டிருந்தார். எனவே, தமிழக பாஜக-வின் முகமாகவும், டெல்லியில் அவருக்கான ஒரு லாபி இருப்பதன் அடிப்படையிலும் கௌரவமாக கட்சியிலிருந்து அவருக்கு ரிட்டையர்ட்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சி.பி.ஆர்., பொன்னார், ஹெச்.ராஜா ஆகிய மூவரும் கட்சியின் சீனியர்கள் என்ற அடிப்படையில் எம்.பி சீட் கேட்டு வந்தனர். அதில் சி.பி.ஆருக்கு ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதால் அண்ணாமலைக்கு ரூட் கிளியர் ஆகியிருக்கிறது. அடுத்து ஹெச்.ராஜாவுக்கு ஆளுநராகவோ அல்லது ஒரு ஆணையத்தின் தலைவராக பொறுப்புக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பொன்னார் டெல்லியில் தனக்கிருக்கும் லாபி மூலம் கன்னியகுமரி எம்.பி சீட்டை உறுதிப்படுத்தியிருக்கிறார்” என்கிறார்கள்!



from India News https://ift.tt/07juH1J

Post a Comment

0 Comments