எதிர்க்கட்சித் தலைவரும். அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருங்கல்பாளையம், பெரியார் நகர் பகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து 3-வது நாளாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி, ``அ.தி.மு.க. ஆட்சியின்போது நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த நாங்கள் வாக்காளர்களை எந்த கொட்டகையிலும், அடைத்து வைத்தது கிடையாது. ஆனால், இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆடு, மாடுகளை பட்டிகளில் அடைத்து வைப்பதை போல தற்போதைய ஆளும் தி.மு.கவினர் மக்களை அடைத்து வைத்திருக்கின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால், எந்த இடத்தில் வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிறார்களோ அங்கு நானும், அ.தி.மு.க.வினரும் நேரில் சென்று அடைத்து வைத்திருக்கும் வாக்காளர்களைச் சந்தித்து வாக்குகளை கேட்பேன்'' என்றார். அதன் பிறகு, ஈரோடு மாவட்ட எஸ்.பி.யே நேரில் சென்று கொட்டகைகளில் அடைத்து வைத்திருந்த வாக்காளர்களை விடுவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், ``இனிமேல் எங்கு வாக்காளர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தாலும், அங்கு நானே நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை கேட்பேன். வாக்காளர்கள் இருக்கும் இடத்தில் தான் வாக்குகளைச் சேகரிக்க முடியும். எனவே, பட்டிகளில் மக்களை அடைத்து வைப்பதை தேர்தல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்காமல் தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் சாதிக்கிறார்கள்.
தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 21 மாதங்களாகியும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. மரப்பாலம், முனிசிபல் காலனி பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு நிரந்தர பணி தருவதாகக் கூறி தினமும் ரூ.700 வீதம் சம்பளம் தருவதாகச் சொல்லி விட்டு, அவர்களுக்கு ரூ.350 மட்டுமே கொடுக்கிறார்கள். மீதி பணத்தை தி.மு.க.வினர் கட்டிங் போட்டு கொள்கின்றனர்.
அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம், இலவச திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களையும் கைவிட்டு விட்டனர். முதியோருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையையும் நிறுத்தி விட்டனர். இதனால் 7 லட்சம் முதியோருக்கான உதவிதொகை நிறுத்தப்பட்டு விட்டது. இவர்களை அந்த ஆண்டவர் கூட மன்னிக்க மாட்டார். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு, இல்லாதப்போது ஒரு பேச்சு என ஸ்டாலின் தொடர்ந்து பொய்யை கூறி வருகிறார். இதுவரை 85 % வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 தருவதாகச் சொன்னீர்களே என்ன ஆச்சு என்று கேட்டால், இப்போது தான் கணக்கு பார்த்து கொண்டிருக்கிறோம் என்று நிதியமைச்சர் கூறுகிறார். பாம்பு, கீரியை வைத்து வித்தை காட்டும் மஸ்தான்களை போல மக்களை வைத்து ஸ்டாலின் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது. ரௌடிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தன் கட்சியில் இருக்கும் அமைச்சர்களையே கட்டுப்படுத்த முடியாதவர் எப்படி நாட்டை கட்டுப்படுத்துவார். கடந்த 1 வாரமாக ஈரோடு மாவட்டத்தில் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டது.

ஈரோட்டில் எல்லா போலீஸாரு,ம் அமைச்சர்களின் பாதுகாப்புக்காக சென்றுவிட்டதால் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. வாக்காளர்களாகிய நீங்கள் ரூ. 2,000க்கு ஆசைப்பட்டு தி.மு.க.வினரோடு பிரசாரத்துக்கு சென்று விட்டால், உங்கள் வீட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்து சென்று விடுவார்கள்.
இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாமை முன்மொழிந்தவர் ஜெயலலிதா. அன்று அவருக்கு எதிராக வாக்களித்த கட்சி தி.மு.க.தான். இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. சிறுபான்மை மக்களுக்காக நன்மை செய்யும் ஒரே கட்சி அ.தி.மு.க தான். எங்கள் கட்சியின் அவைத்தலைவராக இஸ்லாமியரான தமிழ்மகன் உசேன் இருக்கிறார். அவர்தான் நீதிமன்ற தீர்ப்பின்படி அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காக கையெழுத்திட்டார்'' என்றார்.
from India News https://ift.tt/zRmPDJp
0 Comments