ஒரே நாடு, ஒரே வரி... அரசியலுக்காக சொல்வது எளிது, நடைமுறைபடுத்துவது கடினம் - பிடிஆர் பழனிவேல்!

புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் நேற்று 49 -வது சரக்கு மற்றும் சேவை வரி (GST)  குழுக்கூட்டம் மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள்  பலரும் கலந்து கொண்டனர்.

49 -வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், வணிகவரித் துறை ஆணையர் தீரஜ்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

" ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மாநில அளவில் இருக்க வேண்டுமா, மத்திய அளவில் இருக்க வேண்டுமா? அதன் உறுப்பினர்களாக யார் இருக்க வேண்டும் என நீண்ட விவாதம் நடந்தது.  மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என 13 மாநிலங்கள் கோரிக்கை வைத்தது. மாநில அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கியமான ஒன்று,  ஜிஎஸ்டி தீர்ப்பாயங்கள் மாநிலங்களில் அமைக்க வேண்டும்.

மத்திய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்க கூட்டத்தில் வலியுறுத்தினேன். 2020 - 21 மற்றும் 2021 - 22 ஆண்டுகளுக்கான நிலுவை தொகையை விடுவிக்க தணிக்கை அறிக்கைக்காக காத்திருந்தோம். தற்போது, தணிக்கை அறிக்கை வந்துவிட்டது. எதற்கு எல்லாம் தணிக்கை வந்துவிட்டதோ அதற்கு எல்லாம் கடன் அனுப்பப்பட்டுவிட்டது என மத்திய நிதியமைச்சர் கூறினார். அதன் அடிப்படையில்,தமிழகத்திற்கு ரூ 4230 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | பத்திரிக்கையாளர் சந்திப்பில்..

கூட்டாட்சித் தத்துவத்தில் அனைத்து மாநிலங்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை மாநிலங்களுக்கு வந்தால்தான் உண்மையிலேயே ஒரே நாடு ஒரே வரியை செயல்படுத்த முடியும். ஒரே நாடு, ஒரே வரி என்பதை நடைமுறைப்படுத்த நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒரே நாடு, ஒரே சட்டம் என்றிருக்கும் போது ஏன் இத்தனை நீதிமன்றங்கள்?. ஒரே நாடு, ஒரே வரி என்பது போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது எளிது. ஆனால், அதை நடைமுறையில் செயல்படுத்துவது கடினம்” என்றார்.

தமிழக நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதவியேற்ற நாள் முதல் மத்திய அரசின் ``ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேர்தல்" என்ற கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/AptfuvB

Post a Comment

0 Comments