தமிழ்நாட்டில் பொது போக்குவரத்தையடுத்து, நகரத்தில் உள்ள அதிகமான மக்கள் பயன்படுத்துவது ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை டாக்ஸிகள் தான். ஆனால், தனியார் ஆப்கள் கமிஷன் என்ற பெயரில் பெருமளவில் கொள்ளையடிக்கிறது என்பதே ஒட்டுநர்கள் சார்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டு. இதற்குத் தீர்வாக கேரளாவில் அரசு சார்பாக 'சவாரி ஆப்' உருவாக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்திலும் அரசு சார்பாக செயலி உருவாக்கப்படுமா? என்னும் கேள்வி எழந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், ``தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆட்டோ வாகன ஓட்டுநர்கள் எரிபொருள், அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு சரியான வருமானம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆன்லைன் முன்பதிவு செயலி மூலம் வாடகைக்கு வாகனம் ஓட்டுவோரின் உழைப்பு தனியார் நிறுவனங்கள் வாயிலாக சுரண்டப்பட்டு வருகிறது. இப்படி பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், பெரு நிறுவனங்கள் செயலியைப் பயன்படுத்தினால் பெரும் தொகை அவர்கள் எடுத்துக் கொள்ளும் நிலை இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க ஓட்டுநர்கள், இந்தத் தொழிலை விட்டே வெளியேறும் சூழல் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, கேரளா அரசு கொண்டு வந்த குறைந்த பிடித்த தொகையில் முன்பதிவு வாகன செயலிகளை தமிழ்நாட்டிலும் அறிமுகம் செய்யும் முயற்சிகளை அரசும் எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
ஓட்டுநர்கள் சந்திக்கும் பிரச்\னைகள் என்ன?
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பயன்பாட்டுக்கு வந்த தனியார் வாகன செயலிகள், தொடக்கத்தில் ஓட்டுனருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.6500, சவாரி கட்டணம் ரூ.40-க்கு 30 ரூபாய் உயர்த்தி , மொத்தமாக 70 ரூபாய் வழங்கியது. பொதுமக்களை கவரும் வகையில் முதல் பயணம் இலவசம், சேவை வரி இல்லை என்றதும் பயணிகள் பலரும் ஆர்வத்துடன் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்தனர். அப்போது, தமிழக அரசால் நிர்ணியக்கப்பட்ட கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு ரூ.25-ம், கூடுதல் கிலோ மீட்டருக்கு ரூ.12 சேர்த்து வழங்கப்பட்டது.
அப்போது பெட்ரோல் விலை 60 என்ற நிலையில் இருந்தது, அது தற்போது 100-ஐ கடந்துவிட்டது. இருப்பினும், அதன் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், தனியார் செயலி மூலம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலிருந்து மிகக் குறைந்த தொகைதான் ஓட்டுநர்களுக்கு கிடைக்கிறது. பெரும் அளவிலான தோகை கமிஷனாக நிறுவனமே எடுத்துக்கொள்கிறது. குறிப்பாக, பயனாளர்கள் கட்டணமாக செலுத்தும் தொகையில் இருந்து 30% நிறுவனம் பிடித்துக்கொள்ளப்படுகிறது. இதனால், அவர்கள் கைக்கு மிகக் குறைந்த அளவிலான பணம் தான் கிடைக்கிறது.
கேரளாவின் 'சவாரி ஆப்'!
வருமான சுரண்டல் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழவே, கேரள அரசு சார்பாக "சவாரி ஆப்" என்னும் வாகன ஆன்லைன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. "சேவை முதன்மை, நியாயமான கட்டணம் விதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்" என்கிறது அரசு. தனியாரின் 20-30% சேவை வரிக்கு பதிலாக 8% மட்டுமே சேவை வரியாக விதிக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு சரியான தொகையும், பயணிகளும் குறைந்த செலவில் பயணத்தை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, தனியார் நிறுவனங்களை பீக் ஹவர்ஸ் , பண்டிகை நாட்கள் மற்றும் நகரத்துக்கு வெளியில் செல்லும் பயணங்களுக்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையும் தடுக்கப்படும்.
இது தொடர்பாக இந்திய தொழிற்சங்க மையம் (CITU) மாநில செயல் தலைவர் பால சுப்பிரமணியம், ``கேரளாவைப் போல் தமிழக அரசும் வாகன ஆப் தொடங்கினால் பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வரும். போக்குவரத்து தேவை அதிகமுள்ள தமிழகத்தில் இந்தச் சேவையை அரசாங்கம் கொண்டுவருவது அவசியமானது.
மேலும், சேவை வரி இல்லாத, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தால் மக்களும் , ஒரு பயணத்திற்கு ஓட்டுநர்களிடம் தனியார் பெறும் கமிஷன் ரூ.30-ஐ, ரூ.15-ஆக குறைத்தால் ஓட்டுநர்களும் இதைப் பயன்படுத்த தொடங்குவார்கள். அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்தால் கட்டமைப்பை உருவாக்க தேவைப்படும் நிதியை எங்கள் கூட்டமைப்பின் "வெல்ஃபேர் போர்டு" தர தயாராக இருக்கிறது. எனவே, இதை அரசு செயலுக்கு கொண்டு வந்தால் தனியாரால் நடக்கும் வருமான சுரண்டலை முற்றிலுமாக தடுக்க முடியும்" என்றார்.
from India News https://ift.tt/yb7F9Y5
0 Comments