உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தில் வசித்தவர்கள் தரம்வீர் சிங் (35) - ராஜேஷ் தேவி (33) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தரம்வீர் சிங் தூக்கில் தொங்கிய நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, காவல்துறையின் தீவிர விசாரணையில், அவருடைய மனைவி ராஜேஷ் தேவிதான் அவரைக் கொலைசெய்தார் என்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது நீதிமன்றம், வழக்கில் கொலைசெய்யப்பட்டவரின் மனைவி உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போலீஸார், ``ராஜேஷ் தேவி, பிரதீப் குமார் என்ற நபருடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கிறார். இதற்கு அவர் கணவர் தரம்வீர் சிங் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதைப் போல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் நேரில் பார்த்த ராஜேஷ் தேவியின் மகன், பின்னாளில் அவரின் தாத்தா, அத்தை உள்ளிட்ட உறவினர்களிடம் நடந்ததைத் தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தோம். இது தொடர்பான வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, 11 வயது சிறுவன் தன்னுடைய தாய்க்கு எதிராகச் சாட்சியம் அளித்ததால், நீதிமன்றம் இரண்டு குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது" எனத் தெரிவித்தனர்.
இது குறித்து சிறுவன் செய்தியாளர்களிடம், ``எனக்குப் பெரிய போலீஸ் அதிகாரியாக வேண்டும். அதனால்தான் இது போன்ற குற்றங்களை சட்டத்துக்கு முன்பு கொண்டுவர முயன்றேன்" எனக் கூறியிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/rbE1Xgq
0 Comments