டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க கொள்முதல் செய்யப்படும் நெல் ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாநில அரசு சார்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு மாநில அரசால் இழப்பீடு தொகையும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, 33 சதவிகிதம் மற்றும் அதற்கு அதிகமான இழப்பை சந்தித்த ஹெக்டர் நிலத்துக்கு 20,000 ரூபாய், இளம் பயிர்களுக்கான இழப்பீடாக ரூ.3000 என அறிவிக்கப்பட்டது.
மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு சார்பாக டெல்டா பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக, ஈரப்பத அளவை 20 சதவிகிதமாக நிர்ணியத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததை நிறைவேற்றவில்லை. மேலும், காலம் கடந்து அறிவிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நம்மிடம் பேசுகையில், ``மத்திய அரசு அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு நாடகம். தமிழகத்தில் இரு வகையான நெல் வகைகள் மட்டுமே பயிரப்படுகின்றன. கடந்த முறை மழையால் குருவை சாகுபடியில் இழப்பைச் சந்தித்தோம். தற்போது சம்பா சாகுபடியிலும் மழையால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர்க்க நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகள் கையில் எடுக்க வேண்டும்.
காரணம், ஒவ்வொருமுறையும் மாநில அரசு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, அவர்கள் வந்து ஆராய்ச்சி நிறுவங்ககளுக்குப் பயிர்களை அனுப்பி சோதனை செய்து, ஆய்வறிக்கையைப் பெற்று உணவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடும். அதற்குள் பயிர்களும், நெல்லும் மொத்தமாக வீணாகி விடுகின்றன. மழையில் நனைந்த ஈர நெல்லை விரைவில் விற்பனை செய்தாக வேண்டும். எல்லாம் முடிந்தபிறகு அறிவிப்பு வருவதில் எந்தப் பயனும் இல்லை. இதற்கு நிரந்தரமாக முடிவு எடுக்க வேண்டும். கொள்முதல் அதிகாரத்தை மாநில அரசுக்கு தர மத்திய அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கை பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது நடைபெறாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று, மத்திய அரசு மாநில அரசுக்கு அதிகாரம் தர மறுப்பது, இரண்டாவது தங்களுக்கு இந்தப் பொறுப்பு கிடைத்தால், கூடுதல் சுமை ஏற்படும் என்று மாநில அரசுகள் எண்ணுவது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் நான் நேரடியாகச் சென்று, `காலநிலை மாற்றத்தால் பெய்யும் மழை மற்றும் இரு பருவமழை கொண்ட தமிழகத்தை மற்ற மாநிலத்தைப் போல் பார்ப்பது சிக்கல் நிறைந்தது. இதனால் ஈரப்பதம் அறிவிப்பது கால தாமதாகிவிடுவது' தொடர்பாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கமிஷனர் வி.பி.சிங்கிடம் பேசினேன். அவர்கள், மாநில அரசு நேரடியாக கொள்முதல் செய்யும்போது அவர்கள் ஏன் இதற்கான வரைவை உருவாக்கவில்லை என்னும் கேள்வியை எழுப்பினார்கள்.
மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லை தமிழக அரசு வாங்கி விநியோகிக்க பயன்படுத்திக் கொள்கிறது. இந்த நிலையில், எதற்காக தங்களின் அனுமதியை தமிழக அரசு எதிர்ப்பார்க்க வேண்டும் என்ற கேள்வியை மத்திய அரசு முன்வைத்தது. எனவே, கொள்முதலில் ஏற்படும் காலதாமதம் தங்களால் அல்ல... என்பதை மத்திய அரசு தெளிவாக விளக்கிவிட்டது. இவ்வாறு மத்திய அரசு சொல்வதை மாநில அரசிடம் தெரிவித்திருக்கிறோம். ஆனால், அதற்கான நடவடிக்கையோ விளக்கத்தையோ தமிழக அரசு சார்பாக தரவில்லை. `நீட் தேர்வு தொடர்பாக நாங்கள் முடிவெடுக்கிறோம்' என மாநில அரசு சொல்கிறது. அதை ஏன் நெல் கொள்முதல் விஷயத்தில் அரசால் சொல்ல முடியவில்லை. அதை மத்திய அரசிடம் கேட்பதில் என்ன தயக்கம்?
ஒருவேளை மாநில அரசு கேட்டு மத்திய அரசு மறுக்கிறதா... என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஏற்கெனவே, அழிந்ததை மாற்ற முடியாது. ஆனால், இனி மேலும் அழியாமல் இருப்பதைத் தடுக்க முடியும். எனவே இரண்டு அரசுகளும் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதை விட்டுவிட்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
from India News https://ift.tt/iBXSIce
0 Comments