நீலகிரி மாவட்டத்தில், குந்தா, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. காட்டுப்பன்றிகள் இனமே அழியும் அளவுக்கு இவற்றின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. காட்டுப்பன்றிகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய, அவற்றின் உடல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மையத்துக்கு அனுப்பி வருகின்றனர். மேலும், இறக்கும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் உடனுக்குடன் அகற்றி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதே போல முதுமலை புலிகள் காப்பகத்திலும் அண்மையில் 15 காட்டுப்பன்றிகள் இறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவற்றின் உடல் மாதிரிகளையும் சேகரித்து இந்திய கால்நடை ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த காட்டுப்பன்றிகளின் உடல் மாதிரிகளை ஆய்வு செய்ததில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒருங்கிணைந்த வனப்பகுதியாக உள்ள முதுமலையிலும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், ``நீலகிரி வனத்தில் காட்டுபன்றிகளும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் இறந்திருக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுப்பன்றிகளின் இறப்பைக் கண்டறிய தனி குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நோய் மனிதர்களுக்கும், பிற வனவிலங்குகளுக்கும் பரவுவது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.
பன்றிகளுக்கே அதிகம் பரவும் அபாயம் இருக்கிறது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பந்திப்பூர் , முதுமலை பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும் அபாயமும் இருக்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் பகுதிக்கு காட்டுப்பன்றிகள் நுழையாத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்''என்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/V5fLDlw
0 Comments