`ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்’... கர்நாடகாவில் கைகொடுக்குமா பாஜக-வின் தேர்தல் வியூகம்!

கர்நாடகாவில் இன்னும் நான்கு மாதங்களில், சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளதால், பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி என அனைத்து கட்சியினரும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

ஒருபுறம் காங்கிரஸ் கட்சியினர் ‘ஜோடோ’ யாத்திரை நடத்தி முடித்து, பா.ஜ.க அரசின் ஊழல்களை மையப்படுத்தியும், சிறுபான்மை மற்றும் பட்டியல் இன மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி விட்டனர். மறுபுறம் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் ‘பஞ்ச ரத்தின ரத யாத்திரை’ நடத்தி, சாதி வாரியாகவும், தாங்கள் ஏற்கனவே வென்ற இடங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

கெம்பேகெளவுடா சிலை.

இதனை தொடர்ந்து, `ஜன் சங்கல்ப’ யாத்திரை தொடங்கியுள்ள பா.ஜ.கவினர், சாதி வாரியான முக்கிய தலைவர்களை சந்தித்தும், மடாலய தலைவர்களை சந்திப்பதுடன், மாவட்ட வாரியாக மக்களிடம் வாக்கு வங்கியை பலப்படுத்தி வருகின்றனர். ஹிஜாப் பிரச்னையில் தொடங்கி பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டி அதற்கு காவி நிறம் பூச திட்டமிடப்பட்டுள்ளது வரையில், பா.ஜ., கட்சியினரின் ஒவ்வொரு நகர்வும் பேசுபொருளாகவே உள்ளது. வாக்கு வங்கியை தக்கவைத்து கர்நாடகாவை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.கவின் தேர்தல் வியூகம் அமைத்துள்ளது என்கிறார்கள்.

ஒக்கலிகா வாக்கு `வங்கி’

கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான, 6.5 கோடியில் 18 சதவீதம் வரையில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். 17 சதவீதம் வரையில் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். மொத்தமுள்ள, 224 தொகுதிகளில் லிங்காயத்து சமூக மக்கள், 90 தொகுதிகள், ஒக்கலிகா சமூக மக்கள், 80 தொகுதிகளில் அதிகம் உள்ளனர். கர்நாடக அரசியலை தீர்மானிக்கும் பல சமூகங்களில், லிங்காயத், ஒக்கலிகா மக்கள் முதன்மையான இடங்களை பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் பா.ஜ.கவுக்கு முக்கிய வாக்கு வங்கியாக உள்ள ஒக்கலிகா  சமூகத்தை சேர்ந்த பலரின் மீது, கடந்த காலங்களில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டதுடன், அவர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், ஒக்கலிகா மக்கள் பா.ஜ.க மீது அதிருப்தியில் உள்ளனர்.

வாக்கு வங்கி சிதறுவதை உணர்ந்த பசவராஜ் பொம்மை சமீபத்தில் ஒக்கலிகா சமுதாயத்தை சேர்ந்த கெம்பேகெளவுடாக்கு, 108 அடி உயரத்தில், 98 டன் வெண்கலம், 120 டன் எஃகு என, 218 டன் எடையுடன், பெங்களூரு விமான நிலையத்தில் சிலை அமைத்தார். சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும், அதற்கு ‘செழுமையின் அடையாளம்’ எனவும் பெயரிட்டு லிங்காயத் சமூக மக்களை ‘கூல்’ செய்தனர்.

லிங்காயத் சமூகத்தினர் போராட்டம்!

பா.ஜ.கவின் ‘ஸ்டிராங் வோட் பேங்க்’ ஆக லிங்காயத் சமூக மக்கள் உள்ளனர். இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள், தற்போது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 5 சதவீதம் இட ஒதுக்கீடு பெறும் ‘3B’ பிரிவில் உள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சுவர்ண விதான சவுதாவில் குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கியது.

லிங்காயத் மக்கள்.

சட்டமன்றத்துக்கு அருகே, ‘கல்வி மற்றும் அரசு வேலையில், ‘2A’ (15 சதவீதம் இட ஒதுக்கீடு பிரிவு) என்ற இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, வலியுறுத்தி, பா.ஜ.க எம்.எல்.ஏ பசானாகெளவுடா பட்டில் மற்றும் லிங்காயத் மடாலய தலைவர் மருத்யுநய சுவாமி தலைமையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லிங்காயத் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நெருங்குவதால், லிங்காயத் மக்களின் இந்தப்போராட்டம் அரசியல் களத்தில், பா.ஜ.கவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

பசவராஜ் பொம்மை

‘ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்’…

இந்ந நிலையில், இறுதி நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘‘லிங்காயத் மக்கள் மட்டுமின்றி, ஒக்கலிகா மக்களுக்கும் சேர்த்து சிறப்பு, OBC சாதி பிரிவுகள் உருவாக்கப்படும். ஒக்கலிகா சமூகத்துக்கு ‘2C’ எனவும், லிங்காயத் மக்களுக்கு ‘2D’ என்ற புதிய உட்பிரிவுகள் உருவாக்கப்படும்,’’ என, அறிவித்து லிங்காயத் மக்களை ‘ஆப்’ செய்து, ஒக்கலிகா மக்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு, மற்ற சமூக மக்களிடையே எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

அரசியல் விமர்சகர்களிடம் பேசியதற்கு, ‘‘லிங்காயத் மக்களுக்கு மட்டும் சிறப்பு இட ஒதுக்கீடு கொடுத்தால் அதை ஒக்கலிகா சமூகம் எதிர்க்கும் என்று எண்ணிய கர்நாடக பா.ஜ.க, இரு சமூகத்துக்கும் சிறப்பு பிரிவு உருவாக்குவதாக அறிவித்துள்ளது. ‘ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்’ என்பது போல, போராட்டம் நடத்திய லிங்காயத் மக்களை ‘ஆப்’ செய்ததுடன், இரு சமூக மக்களின் வாக்கு வங்கியை பலப்படுத்தவும் திட்டம் தீட்டியுள்ளது,’’ என்றனர்.

‘இது பா.ஜ.கவின் திட்டமிட்ட போராட்டம்’

இது குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில பொறுப்பாளர்களிடம் பேசினோம், ‘‘பெலகாவியில் லிங்காயத் பஞ்சமசாலி பிரிவு மக்களால் நடத்தப்பட்ட போராட்டம், தேர்தலுக்காக பா.ஜ.கவினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட போராட்டம் தான். இது பா.ஜ.கவின் வியூகத்தில் ஒன்று. போராட்டம் நடத்திய லிங்காயத் பஞ்சமசாலி பிரிவு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகக்கூறி, OBCக்குள் இரு சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளனர்.

அமித் ஷா

இது தெளிவற்ற  ஓர் அறிவிப்பு. ஏனெனில், OBC ‘2A’ பிரிவில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், நாயுடு சமூகத்தின் ஒரு பிரிவு, யாதவர், வன்னியர் உள்பட பல சமூக மக்களும், ‘2B’ பிரிவில் இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ சிறுபான்மை மக்கள் மற்றும் சில இந்து மதத்தை சேர்ந்த பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர்.

தற்போது, 2C, 2D என்ற புதிய பிரிவுகள் உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவர்களுக்கு புதியதாக எவ்வளவு ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்தத்தகவலும் சொல்லப்படவில்லை. இதனால், அனைத்து சமூக மக்களுக்கும் பெரும் குழப்பத்தையும், தங்கள் இட ஒதுக்கீடு பறிபோகுமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களின் ஒதுக்கீட்டை பறிக்கும் வகையில், லிங்காயத், ஒக்கலிகா சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்களா என்ற அச்சமும் நிலவுகிறது. இந்த அறிவிப்புகள் பா.ஜ.கவுக்கு வாக்கு வங்கியை வலுப்படுத்துவதை விட, வாக்கு வங்கியை சிதறடிக்கும் என்பது தான் உண்மை,’’ என்றனர் காட்டமாக.

ஆட்சிக்கட்டிலை மற்ற கட்சிக்கு பறிகொடுக்காமல் தப்ப, பா.ஜ.கவினரின் இடஒதுக்கீடு அரசியல், சிலைகளில் அரசியல் என்பது போன்ற ‘ஸ்டிரேடெஜி’கள், தேர்தலில் உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...



from தேசிய செய்திகள் https://ift.tt/jUqRD5x

Post a Comment

0 Comments