கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த தினேசன் என்பவரின் மகள் நயன சூர்யா (28). பிரபல மலையாள சினிமா இயக்குநர் லெனின் ராஜேந்திரனிடம் 10 வருடங்களுக்கு மேலாக இணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். பல விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார். திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளையம்பலம் அருகே ஆல்தரை பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் இயக்குநர் லெனின் ராஜேந்திரன் மரணமடைந்தார். அதற்கு அடுத்த மாதம் நயன சூர்யா, அவரது வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்டார். திருவனந்தபுரம் மியூசியம் போலீஸார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தியது. இறுதியாக நயன சூர்யா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறி வழக்கை போலீஸார் முடித்தனர்.
ஆனால், நயன சூர்யாவின் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், அடிவயிற்றில் தாக்குதல் ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், நயன சூர்யா உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புவரை அவருடன் வசித்த தோழியிடம் கூட விசாரணை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து நயன சூர்யா வழக்கில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கேட்டு எதிர்க்கட்சியான காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
நயனாவின் நண்பர்கள், `நயன சூர்யா தற்கொலை செய்யவில்லை என்றும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அவர் கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததாகவும், கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயம் உள்பட சில காயங்கள் இருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீஸார் எந்த விசாரணையும் நடத்தவில்லை’ என்று புகார் தெரிவித்துள்ளனர்.
ஆலப்புழாவில், மணல் கொள்ளைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நயன சூர்யா கலந்து கொண்டதாகவும், எனவே நயன சூர்யாவின் மர்ம மரணம் குறித்து மீண்டும் முறையாக விசாரணை நடத்தவும் அவரின் நண்பர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இயக்குநர் நயன சூர்யா வழக்கை மறு விசாரணை நடத்த திருவனந்தபுரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரம், அந்த வழக்கில் முதன்மை எஸ்.ஐ-யின் பங்கு தெளிவாக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நயன சூர்யா வழக்கு விசாரணையின்போது எடுக்கப்பட்ட போட்டோவில் முதன்மை எஸ்.ஐ உள்ளார். வழக்கின் ஆதாரங்களை கையெழுத்திட்டு வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கிரேடு எஸ்.ஐ ஒருவர்தான் ஈடுபடுள்ளார். எனவே நயன சூர்யா மரண வழக்கை மறுபடியும் விசாரிக்கும் கிரைம் பிரான்ச், ஏற்கெனவே நடந்த விசாரணையில் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்தும் ரிப்போர்ட் அளிக்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் வழக்கை சரியாக விசாரிக்காத போலீஸ் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/vSCOX04
0 Comments