ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து... ராகுல் காந்தியின் வாக்குறுதி, `வாக்கு' அரசியலா?!

பலத்த பாதுகாப்புடன் ஜம்மு - காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, ரம்பான் மாவட்டத்தில் மழை பெய்து, நிலச்சரிவு ஏற்பட்டதால், பயணத்தை இரண்டு நாள்கள் ஒத்திவைத்திருக்கிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

ராகுல் காந்தி

2019-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜம்மு -காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.

இந்த நிலையில்தான், ஜம்மு - காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, “ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பது இந்த மாநில மக்களின் மிகப் பெரிய கோரிக்கை. மாநில அந்தஸ்து விவகாரத்தைவிட பெரிய விவகாரம் வேறு இல்லை. உங்கள் உரிமை உங்களிடமிருந்து பறிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க, உங்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும். இதற்காக எங்களுடைய அனைத்துப் பலத்தையும் பயன்படுத்துவோம். தங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் காதுகொடுத்துக் கேட்பதில்லை என்று ஜம்மு - காஷ்மீர் மக்கள் என்னிடம் வேதனையுடன் கூறினர்.

ராகுல் காந்தி

தற்போது, ஜம்மு - காஷ்மீரில் ஒட்டுமொத்த வர்த்தகமும் வெளியாள்களிடம் சென்றுவிட்டது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஜம்மு - காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு முன்பு, ராணுவம் அதிக வேலைவாய்ப்பை வழங்கிவந்தது. தற்போது, `அக்னிவீரர்’ என்ற பெயரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டத்தால் ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களுக்கு ராணுவத்திலும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை'' என்றார் ராகுல் காந்தி.

ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது அந்த மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று. சட்டமன்றத் தேர்தலை நடத்தினாலும், மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. டெல்லியிலும் புதுச்சேரியிலும் சட்டமன்றங்கள் இருந்தாலும், அவை யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கின்றன. அதேபோல, ஜம்மு - காஷ்மீரையும் லடாக்கையும் யூனியன் பிரதேசங்களாக நீடிக்கும் நிலையிலேயே அங்கு தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர்

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு - காஷ்மீர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘முதலில் மாநில அந்தஸ்து வழங்கிவிட்டு, அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற அரசியல் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஆனால், இங்கு தொகுதி மறுவரையறை செய்வதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே, முதலில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்படும். அதன் பிறகுதான், மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

ஜம்மு - காஷ்மீரில் தொகுதி மறுவரையறை முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது தெரியாத நிலை நீடிக்கிறது. மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும், தேர்தல் நடத்தப்படும் என்று தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜ.க ஏமாற்றிவருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் ஜம்மு - காஷ்மீர் தலைவர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

“விரைவாக மாநில அந்தஸ்து வழங்குவோம்... ஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்துவோம் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. மாறாக, கடந்த மூன்றரை ஆண்டுகளாக அவ்வப்போது வெற்று வாக்குறுதிகளை வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஜம்மு - காஷ்மீர் மக்களை ஏமாற்றியதுடன், அவர்களை முட்டாளாக்க பா.ஜ.க முயல்கிறது” என்று” ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விகாஸ் ரசூல் வானி பேசியிருக்கிறார்.

நடைப்பயணத்தில் ராகுல், பிரியங்கா

இந்த சூழலில்தான், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இது ராகுல் காந்தியின் வாக்குவங்கி அரசியலா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பது அங்குள்ள அரசியல் கட்சிகளின் கோரிக்கை மட்டுமல்ல, பெரும்பாலான ஜம்மு - காஷ்மீர் மக்களின் கோரிக்கையாகவும் அது இருக்கிறது. எனவே, அந்தக் கருத்துக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு அப்படி அவர் பேசியிருக்கலாம்.

ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் சற்று தாமதமாகக்கூட நடத்தப்படலாம். ஆனால், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மாறி மாறி வாக்குறுதி அளித்துவந்தாலும்கூட, ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

ஏனென்றால், ஜம்மு - காஷ்மீர் பிரச்னை பா.ஜ.க-வுக்கு அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டாகப் பிரித்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றியதன் மூலம், ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீரும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. சண்டிகரைப் போல, சட்டமன்றம் இல்லாத ஒரு யூனியன் பிரதேசமாக லடாக் இருக்கும்.

ராகுல் காந்தி

ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கிவிட்டால், அந்த மாநிலத்தின் மீதான மத்திய அரசின் பிடி தளர்ந்துவிடும். முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஜம்மு - காஷ்மீரின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டிருக்கின்றன. ஒருவேளை, ஓரணியில் திரண்டிருக்கும் இந்தக் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றுவிட்டால், அதிகாரம் முழுவதும் மாநில அரசின் கைக்குப் போய்விடும். யூனியன் பிரதேசமாக இருக்கும் நிலையில் தேர்தலில் எதிர்க் கட்சியினர் வெற்றிபெற்றாலும்கூட, மத்திய அரசின் கையில்தான் அதிக அதிகாரம் இருக்கும். ஆகவே, அவ்வளவு எளிதாக மாநில அந்தஸ்தை மத்திய பா.ஜ.க அரசு கொடுத்துவிடாது.

மேலும், பிரிவு 370 நீக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகும், மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் ஜம்மு - காஷ்மீர் இருந்துவரும் நிலையில், தற்போதும் அங்கு பயங்கரவாத செயல்பாடுகள் தொடரவே செய்கின்றன. இப்படியான சூழலில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி அதிகாரத்துவந்தாலும்கூட, ராகுல் காந்தி சொல்வதைப் போல ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது அத்தனை எளிதான காரியமாக இருக்காது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது!



from தேசிய செய்திகள் https://ift.tt/n2Az4gx

Post a Comment

0 Comments