"16 வருட போலீஸ் சர்வீஸில் முதன் முதலாக திருடனைப் பிடித்திருக்கிறேன்"- மின்னல் முரளி நடிகர் பெருமிதம்

கேரள மாநிலத்தில், போலீஸ் வேலையில் இருந்துகொண்டே சினிமாவிலும் நடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஜிபின் கோபிநாத். மின்னல் முரளி, கோல்ட் கேஸ், தி கிரேட் ஃபாதர் உள்ளிட்ட பல சினிமாக்களில் நடித்திருக்கிறார் ஜிபின் கோபிநாத். இவர் திருவனந்தபுரம் போலீஸ் கன்ட்ரோல் ரூமில் அதிகாரியாக இருக்கிறார். இவரது வீடு பட்டம் பிலாமுறி பகுதியில் அமைந்திருக்கிறது. இவர் தன்னுடைய வீட்டில் கார் நிறுத்த வசதி இல்லாததால், வீட்டுக்குச் செல்லும் பாதையில் கார் பார்க்கிங் செய்வது வழக்கம். அந்த வகையில், நேற்று பணி முடித்து வழக்கம்போல காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர் அருகிலுள்ள கடைக்குச் சென்று குழந்தைக்கு சாக்லேட் வாங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது அவரது காருக்கு அருகே ஓர் ஆட்டோ நிற்பதைக் கண்டார். பக்கத்தில் சென்று பார்த்தபோது, ஆட்டோவில் இருந்தவர் காரின் ஸ்டீரியோ கிட்டை கையில் வைத்திருந்தார்.

ஜிபின் கோபிநாத்

தனது காரின் ஸ்டீரியோவை திருடியதை உணர்ந்த ஜிபின் கோபிநாத், விரைந்து செயல்பட்டு அந்த நபரை கையும், களவுமாகப் பிடித்தார். அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் நிதீஸ் எனவும், ஆனையறை பகுதியைச் சேர்ந்த அவர் கார் ஷோரும் ஒன்றில் வேலை செய்துவருவதும் தெரியவந்தது. இந்தச் சம்பத்தைத் தொடர்ந்து, தனது 16 வருட போலீஸ் பணியில் முதன்முதலாக ஒரு திருடனைப் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஜிபின் கோபிநாத்.

இது குறித்து ஜிபின் கோபிநாத் தனது முகநூல் பக்கத்தில், ``எனது 16 வருட போலீஸ் வாழ்க்கையில் இதுவரை ஒரு திருடனைக்கூட பிடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், மாலை 6:20 மணிக்கு மகனின் சாக்லேட் ஆசையை நிறைவேற்ற பக்கத்திலுள்ள கடைக்கு பைக்கில் செல்வதற்காக கிளம்பினேன். சின்ன கேட்டை திறந்து வெளியே வந்து பார்த்தபோது, எனது கார் டிரைவர் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார். எதற்காக அவர் இருக்கிறார் என அறிந்துகொள்வதற்காக அவர் வெளியே வரும்வரை காத்திருந்தேன்.

ஜிபின் கோபிநாத்

காரில் இருந்த ஆடியோ, வீடியோ மானிட்டர் சிஸ்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கீழே இறங்கியவர், ஒரு புன்னகையுடன் என்னை பார்த்தார். அவரிடம் இங்கு என்ன நிகழ்ச்சி எனக்கேட்டேன். 'ஏய் ஒன்றும் இல்லை' என நல்லவரைப்போலச் சொன்னார். கையில் என்ன என்று கேட்டேன். ஸ்டீரியோ என பதில் சொன்னவரிடம், எங்கு போகிறீர்கள் எனக்கேட்டேன். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது என்பதை உணர்ந்த அவர், 'சார் ஒரு தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்' என்றார். உடனே அவரது காலரைப் பிடித்து அருகிலுள்ள கடையில் கொண்டு நிறுத்தினேன். அடுத்ததாக போலீஸ், பத்திரிகையினர் எல்லோரும் வந்தார்கள், மியூசியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவழியாக என் காரில் திருடியவரைப் பிடித்து 16 வருட போலீஸ் சர்வீசில் ஒரு திருடனைக்கூட பிடிக்கவில்லை என்ற பாவத்தை கழுவிவிட்டேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இவரின் இந்தப் பதிவுக்கு பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/mkIJK97

Post a Comment

0 Comments