பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களில், ஆளும் கட்சிக்கும் கவர்னருக்குமான உரசல் தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கவர்னர்கள் மாநில அரசுக்கு எதிராக மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். தமிழ்நாடு, தமிழகம் என்ற விவாதத்தை கிளப்பிய கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றும்போது 'தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர்' உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார். இதனால் சட்டசபையில் முதல்வர், அரசு கொடுத்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம் பெறும் என தீர்மானம் கொண்டு வர, கவர்னர் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் தமிழ்நாடு என்ற பெயரை மாற்றும் எண்ணம் தனக்கு இல்லை என கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை மூலம் விளக்கினார். கேரளாவிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முஹம்மதுகானுக்கும் உரசல் இருந்து வருகிறது. பல்கலைக்கழகங்களில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களில் இன்னும் கவர்னர் கையெழுத்து போடாமல் உள்ளார். மேலும் 2020-ல் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான உரையை கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் வாசிக்காமல் தவிர்த்தார்.
அதுமட்டுமல்லாது ஒரு பல்கலைக்கழக விழாவில் சிலர் தன்னை தாக்க முயன்றதாக குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை கிளப்பினார் கவர்னர் ஆரிப் முஹம்மதுகான். இந்த நிலையில் நேற்று தொடங்கிய கேரள சட்டசபை கூட்டத்தில் உரையாற்றிய கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் கவர்னர் உரையில் ஒரு எழுத்தைக்கூட விடாமல் வாசித்தார்.
அதில் 'எனது அரசு' என்ற வார்த்தையை 67 முறையும், 'அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு' என 15 முறையும் வாசித்தார். மாநிலங்களின் கடன் வரம்பை மத்திய அரசு குறைக்கிறது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்புத் துறைகளில் மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று ஆளுநர் கூறினார். பொருளாதார சீர்திருத்தத்தில் மாநில அரசுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்பது போன்ற மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் கவர்னர் வாசித்தார்.
கவர்னர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் வாசித்தது பா.ஜ.க-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் கூறுகையில், "கவர்னர் உரையில் உண்மையை மறைக்கும் வழக்கமான நாடகம் அரங்கேறியுள்ளது. கவர்னர் மூலம் பொய் பேசவைத்து மக்களை வஞ்சிக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். 3.90 லட்சம் பொது கடன் கேரள மாநிலத்துக்கு உள்ளது. சம்பளமும், பென்சனும் கொடுக்க முடியாத நிலை கேரளத்தில் உள்ளது. இதை மாநில அரசு முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றார்.
சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து உரையாற்றினார். அதுபோன்று காஷ்மீர் சென்று திரும்பிய கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் குங்குமப்பூ மற்றும் சாக்லேட் ஆகியவற்றை முதல்வர் பினராயி விஜயனுக்கு வழங்கினார். எனவே கவர்னரும், முதல்வரும் இணக்கமாகிவிட்டதாக கருத்துகள் எழுந்துள்ளன.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZCeQ6wB
0 Comments