``மும்பையிலிருந்து பாலிவுட்டை எடுத்துச்செல்ல வரவில்லை” - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்திற்கு முதலீட்டை திரட்டுவதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று மும்பை வந்தார். அவர் இன்று தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் வங்கி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ரோடு ஷோ ஒன்றையும் நடத்துகிறார். இதற்காக மும்பையிலிருந்து வெளியாகும் நாளிதழ்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக முழுப்பக்க விளம்பரங்கள் வெளியிட்டு வருகிறார்கள். நேற்று மும்பையில் உள்ள உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அதோடு மாநில ஆளுநர் கொஷாரியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனிருந்தார்.

மும்பை நிகழ்ச்சியில் ஆதித்யநாத்

மும்பையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``உத்தரப்பிரதேசத்தில் கட்டப்படும் திரைப்படம் நகரம் ஆயிரம் ஏக்கர் பரப்பு கொண்டதாகும். உத்தரப்பிரதேசம் மும்பையிலிருந்து தொழில் அல்லது பாலிவுட்டை எடுத்துச்செல்லாது. மகாராஷ்டிராவுடன் ஆரோக்கியமான போட்டியையே நாங்கள் விரும்புகிறோம். எங்களது நோக்கம் பாலிவுட்டை உத்தரப்பிரதேசத்திற்கு எடுத்துச்செல்வது கிடையாது. சர்வதேச வசதியுடன் இருக்கும் திரைப்பட நகரத்தை பயன்படுத்திக்கொள்ள வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம். எனவே யாரிடமிருந்தும் எதையும் பறிக்கவில்லை. இது இருதரப்பினருக்கு இடையே ஆரோக்கியமான போட்டியாகும். அடுத்த 5 ஆண்டில் உத்தரப்பிரதேசம் ஒரு டிரிலியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்.

யோகி ஆதித்யநாத்

கடந்த 6 ஆண்டில் உத்தரப்பிரதேசம் அனைத்து செக்டரிலும் வளர்ச்சியடைந்திருக்கிறது. எனவே ஒரு டிரிலியன் பொருளாதார வளர்ச்சியை எட்ட இது உதவியாக இருக்கும். உத்தரப்பிரதேசத்தில் 94 லட்சம் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதோடு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருக்கிறோம். கடந்த ஆறு ஆண்டில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. இப்போது தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். புல்டோசர் கட்டமைப்பு பணி மற்றும் மேம்பாட்டுப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதால் அது அமைதி மற்றும் வளர்ச்சியின் அடையாளமாக இருக்கிறது.

யாராவது சட்டம் ஒழுங்கை மீறினால் அதனை கட்டுப்படுத்த புல்டோசர் பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று மும்பை தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொள்வதற்காகவே ஆதித்யநாத் மும்பை வந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 1000 ஏக்கரில் திரைபட நகரம் கட்டப்பட்டுள்ளது. எனவே மும்பையிலிருந்து பாலிவுட்டை எடுத்துச்செல்ல ஆதித்யநாத் வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/4XaYm2V

Post a Comment

0 Comments