கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரின் மையப்பகுதியில், லால்பாக் தாவரவியல் பூங்கா உள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி லால்பாக் தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்த, கர்நாடக அரசு திட்டமிட்டது.
அதன்படி, பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியின் துவக்க விழா இன்று நடந்தது. கர்நாடக தோட்டக்கலைத்துறை மற்றும் மத்திய வேளாண்துறை சார்பில் நடத்தப்படும் இந்த கண்காட்சியை, முதல்வர் பசவராஜ் பொம்மை துவங்கி வைத்தார்.
‘பெங்களூரின் வளர்ச்சி மற்றும் வரலாறு’ என்ற தலைப்பில் நடக்கும் இக்கண்காட்சி, இன்று துவங்கி வரும், 29ம் தேதி வரையில் நடக்கிறது. பெங்களூருவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய கெம்பேகெளவுடா, திப்பு சுல்தான், நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆகியோரின் சேவைகளை மையப்படுத்தி, மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மைசூர் கோட்டை, திப்புசுல்தான் அரண்மனை, உயர்நீதிமன்றம், கோட்டைகள், கோபுரங்கள், யானை, மயில், மாடுகள் என, பலவகை விலங்குகள், காட்டுயிர்கள் போல, மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
97 வகையான மலர்களைக்கொண்ட, மூன்று லட்சம் தொட்டிகளில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. நுழைவுக்கட்டணமாக தலா, 70 ரூபாய் செலுத்தியும், 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு தலா, 30 ரூபாய் செலுத்தி, காலை, 9:00 மணி முதல் இக்கண்காட்சியை மக்கள் கண்டு ரசிக்கலாம். மலர் கண்காட்சிக்காக, கிருஷ்ணகிரி கிராமப்பகுதிகள், ஓசூர், பெங்களூர் உள்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பல டன் மலர்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது.
சுமார், 12 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வார்கள் என்பதால், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். லால்பாக் சுற்றிலும் திருவிழா போன்று கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு சென்றால் பல வண்ண மலர்களை கண்டு ரசிப்பதுடன், விதவிதமான ‘புட்’, ‘ஸ்நாக்ஸ்’, ‘டாய்ஸ்’ வாங்கி மகிழலாம். ‘வீக் எண்டு’ கொண்டாட இக்கண்காட்சி சிறந்த இடமாக இருக்கும்.
from தேசிய செய்திகள் https://ift.tt/NApi7W3
0 Comments