மும்பை மலாடு பகுதியில் உள்ள 3 மாடிக்கட்டடத்தில் இருந்த வீட்டில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருடர்கள் வேலையை முடித்துவிட்டு ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிச்சென்றது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் இத்திருட்டு தொடர்பாக போலீஸார் 80க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் திருடர்கள் குர்லா குடிசைப்பகுதியில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் தங்கி இருந்தது தெரிய வந்தது. ஹோட்டலில் விசாரித்த போது டெல்லியை சேர்ந்த 5 பேர் தங்கி இருந்ததாகவும், இரண்டு பேர் ஏற்கனவே சென்றுவிட்டதாகவும், எஞ்சிய 3 பேர் சில மணி நேரத்திற்கு முன்புதான் அறையை காலி செய்துவிட்டு சென்றதாகவும் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி சென்று இருக்கவேண்டும் என்பதை கண்காணிப்பு கேமரா மூலம் உறுதி செய்த போலீஸார், நேராக அங்குச் சென்றனர். மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டெல்லி செல்லும் ரயில்களில் பயணிகள் பட்டியலை ஆய்வு செய்த போது, அவர்கள் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லி செல்வது தெரிய வந்தது. உடனே ராஜதானி ரயில் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து ரத்லம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலில் அதிரடி ரெய்டு நடத்தி 3 பேரை கைது செய்தனர். அவர்கள் உடனடியாக மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடமிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள திருட்டு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களது பெயர் நிஜார் ஷேக், அப்ஷர், அன்வர் என்று தெரிய வந்தது. இதில் நிஜாம் ஷேக் தான் இக்கூட்டத்திற்கு தலைவனாக செயல்பட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இக்கும்பல் குர்லாவில் உள்ள ஹோட்டலில் ஒரு வாரம் தங்கியிருந்து 7 வீடுகளில் திருடி இருக்கின்றனர். குடிசைப்பகுதியில் உள்ள சிறிய ஹோட்டல்களில் தங்குவதன் மூலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இவ்வாறு தேர்வு செய்து தங்கி இருந்தனர்.
இது குறித்து மலாடு சீனியர் இன்ஸ்பெக்டர் ரவீந்திரா கூறுகையில், ``திருடர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் டெல்லியில் தங்கி இருந்து அப்பகுதியில் திருடி வந்தனர். ஆனால் டெல்லி போலீஸாருக்கு அவர்களை நன்றாக தெரிந்துவிட்டதால் மேற்கொண்டு அங்கு திருடுவது சரியாக இருக்காது என்று கருதி டெல்லியில் தங்கி இருந்து கொண்டு நாட்டின் மற்ற பகுதிக்கு சென்று திருட ஆரம்பித்தனர். இதுவரை 100 திருட்டுக்களை முடித்துள்ளனர். அவர்கள் 30 ஆண்டுகளாக இத்திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பிச்சென்ற இரண்டு பேர் விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
எந்த இடத்திற்கு அவர்கள் சென்றாலும் ஒருவாரம் தங்கியிருந்து திருடுவது வழக்கம். குறிப்பாக அதிக பட்சம் நான்கு மாடிக்கு குறைவான கட்டடங்களில் திருடுவதுதான் அவர்களது வழக்கம். இக்கட்டடங்களில் செக்யூரிட்டி கார்டு இருக்கமாட்டார்கள். பூட்டை திறப்பதில் இக்கும்பல் மிகவும் கைதேர்ந்தது ஆகும். இத்திருட்டில் ஈடுபடும்போது பக்கத்தில் வீட்டையும் பூட்டு போட்டுவிடுவது வழக்கம் ஆகும். இதனால் பக்கத்து வீட்டுக்காரர்களால் அவர்களை பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/92tFng5
0 Comments