கேரள மாநிலம், திருவனந்தபுரம் வர்க்கலா தெற்றிக்குளம் பகுதியைச் சேர்ந்த சஜீவ்-ஷாலினி தம்பதியின் மகள் சங்கீதா (17). ஸ்ரீ சங்கரா கல்லுரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார் சங்கீதா. நேற்று இரவு தன்னுடைய தங்கையுடன் தூங்கிக்கொண்டிருந்தார் சங்கீதா. பின்னர் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சங்கீதாவின் செல்போனில் அழைத்த அவருடைய நண்பரான பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு, வீட்டைவிட்டு வெளியே வரும்படி கூறியிருக்கிறார். சங்கீதாவும் வீட்டிலிருந்து வெளியே சாலைக்கு வந்திருக்கிறார். சங்கீதாவைப் பார்த்த கோபு வாக்குவாதம் செய்ததுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் கழுத்தை அறுத்திருக்கிறார். இதனால் அலறியபடி சங்கீதா வீட்டை நோக்கி ஓடியிருக்கிறார். வீட்டின் வராந்தா பகுதிக்குச் சென்று கதவை இடித்த சங்கீதா, அங்கேயே விழுந்திருக்கிறார். சத்தம் கேட்டு சங்கீதாவின் பெற்றோர் வெளியே வந்தபோது, மகள் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்திருக்கிறார்கள். அதற்குள் அந்தப் பகுதியினர் அங்கு சென்று உடனடியாக சங்கீதாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், கோபுவைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கீதாவின் மொபைல் போனை வழியில் வீசி எறிந்த கோபு, கொலைசெய்ய பயன்படுத்திய கத்தியை அந்தப் பகுதியில் போட்டுவிட்டு சென்றிருக்கிறார். செல்போன், கத்தியைக் கண்டுபிடித்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய சங்கீதாவின் தந்தை சஜீவ், "கதவை யாரோ தொடர்ந்து இடிப்பதுபோல் இருந்ததால் எழுந்து ஜன்னலை திறந்து 'யாரது' எனக்கேட்டபடி வெளியே பார்த்தேன். அங்கு என்னுடைய மகள் துடித்தபடி ரத்தம் படிந்த கையை உயர்த்திக் காட்டினாள். அவள் பேசமுடியாத நிலையில் இருந்தாள். உடனே கதவை திறந்தேன். கதவு முழுவதும் ரத்தம். 'என்னா ஆயிற்று மகளே' என அவளை வாரி அணைத்தேன். என்றே பொன்னு மோள் போய்விட்டாள்" என கதறி அழுதார் சஜீவ்.
சங்கீதாவும், கோபுவும் நட்பாக பழகி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கோபு மற்றொரு எண்ணிலிருந்து அகில் என்ற பெயரில் சங்கீதாவுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அவருடனும் சங்கீதா சாட் செய்ததாகக் கூறப்படுகிறது. தன்னை ஏமாற்றுவதாக நினைத்த கோபுவுக்கு சங்கீதா மீது கோபம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து இன்று அதிகாலை அகில் என்ற பெயரில் சாட் செய்த கோபு சங்கீதாவை வீட்டைவிட்டு வெளியே வரும்படி கூறியிருக்கிறார். பின்னர், வெளியே வந்த சங்கீதாவின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலைசெய்திருக்கிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/xSNtcKC
0 Comments