மும்பையை சேர்ந்த அனிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும், மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த அரசுப்பணி ஆசிரியர் ஒருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான நாளில் இருந்து ஆசிரியர் தன் மனைவியை தன்னிடம் நெருங்க விடவில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தாம்பத்யத்தை தவிர்த்து வந்தார். ஓர் ஆண்டு இதே நிலை தொடர்ந்தது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண அனிஷா பல வழிகளில் முயன்றும் பலன் இல்லை. இதையடுத்து கணவரிடமிருந்து பிரிந்து தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்ற அனிஷா, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனிஷாவிற்கு அவர் கணவர் மாதம் 15 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2021-ம் ஆண்டு அனிஷாவின் கணவர், செசன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அனிஷா தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், `திருமணத்திற்குப் பிறகு பலமுறை கணவருடன் உறவு கொள்ள முயன்றேன். ஒவ்வொரு முறையும் என்னைத் தவிர்த்தார், மறுத்தார். இது குறித்து என் அத்தையிடம் கூறினேன். அவரும் இதில் எனக்கு எந்த வித உதவியும் செய்ய முன்வரவில்லை.
நாளடைவில் என் கணவர் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வர ஆரம்பித்தார். கேட்டால் வேலை அதிகமாக இருக்கிறது என்று சொன்னார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் என் கணவரின் மொபைல் போனை பார்க்க நேரிட்டது. அதில் அவர் வேறு ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் இருந்தன’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ மற்றும் போட்டோக்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கோர்ட்டில் ஆதாரமாகத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ’குடும்ப வன்முறை என்பது உடலில் காயம் ஏற்படுத்துவது மற்றும் துன்புறுத்துவது மட்டும் கிடையாது. பாலியல் ரீதியாகவோ, உணர்வுபூர்வமாகவோ, பொருளாதார ரீதியாகவோ துன்புறுத்துவதும் குடும்ப வன்முறைதான்’ என்று தெரிவித்து, பாதிக்கப்பட்ட அனிஷாவுக்கு ரூ.1 லட்சமும், மாதம் ரூ.15 ஆயிரம் ஜீவனாம்சமும் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் தனது வேலையை ராஜினாமா செய்து இருப்பதை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/jJrMKnP
0 Comments