கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அனுதினமும் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. மாநிலத்தின் ஆட்சிக்கட்டிலில் கட்சிகளை அமரவைக்கும் முக்கிய காரணிகளுள், லிங்காயத் சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ தலைமையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டடோர், பா.ஜ.க அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை துவங்கியுள்ளது, கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான, 6.5 கோடியில் 18 சதவீதத்துக்கும் மேல், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 90 தொகுதிகளுக்கு மேல் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். கர்நாடக அரசியலை தீர்மானிக்கும் பல சமூகங்களில், லிங்காயத் மக்கள் முதன்மையானவர்கள். தற்போது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 5 சதவீதம் இட ஒதுக்கீடு பெறும் ‘3B’ பிரிவில் உள்ளனர்.
லட்சக்கணக்கானோர் போராட்டம்!
இந்த நிலையில், இன்று காலை முதல், லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், ‘கல்வி மற்றும் அரசு வேலையில், ‘2A’ (15 சதவீதம் இட ஒதுக்கீடு பிரிவு) என்ற இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, வலியுறுத்தி பெலகாவியில் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
பா.ஜ.க எம்.எல்.ஏ பசானாகெளவுடா பட்டில் மற்றும் லிங்காயத் மடாலய தலைவர் ம்ருத்யுநய சுவாமி தலைமையில், போராட்டக்காரர்கள் கர்நாடக மாநிலம், பெலகாவியில், குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் சுவர்ண விதான சவுதா அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
‘2023 தேர்தலில் முடிவு தெரியும்’!
லிங்காயத் மடாலய தலைவர் ஜகத்குரு ஸ்ரீ பசவ ஜெய ம்ருத்யுநய சுவாமி நிருபர்களிடம், ``கர்நாடகத்தில் நாங்கள், 1.3 கோடி பேர் உள்ளோம். லிங்காயத் சமூகத்திலேயே நாங்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளோம். எங்கள் சமூகத்தில், 22 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள், 4 எம்.எல்.சி-கள் உள்ளனர். நாங்கள்தான் தற்போதைய பாஜக அரசின், 80 சதவீத வாக்கு வங்கி. பல ஆண்டுகளாக, இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோரிக்கை வைத்து வருகிறோம். எங்களை, 2-ஏ பிரிவுக்கு மாற்றி, கல்வி மற்றும் அரசு வேலைகளில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
எடியூரப்பா தலைமையிலான அரசு எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை, அதனால்தான், அந்த அரசு கலைந்தது. தற்போது, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு தொடர்ந்து வாக்குறுதி மட்டுமே கொடுக்கிறது, இதுவரை எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. பசவராஜ் பொம்மை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2023 தேர்தலில் எங்கள் முடிவு என்ன என்பது தெரியும்" என, காட்டமாக பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து பேட்டியளித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் லிங்காயத் சமூகம், தங்களுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளதால், கர்நாடக பாஜக–வினர் கலக்கத்தில் உள்ளனர். ‘லிங்காயத் சமூகத்தின் வாக்கு வங்கியை தக்கவைக்க, முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/rDFLWSA
0 Comments