`சாலையை சரி செய்யும்வரை செருப்பு அணியமாட்டேன்!' - சபதமிட்ட அமைச்சரை செருப்பு அணியவைத்த சிந்தியா

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த அமைச்சர் பிரத்யுமான் சிங் கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது தொகுதிக்கு சென்றபோது அங்கு சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. இது குறித்து தொகுதி மக்கள் அமைச்சரிடம் குறை கூறினர். அவர்களின் குறையைக் கேட்ட அமைச்சர், `சாலை சரி செய்யப்படும் வரை என்னுடைய காலில் செருப்பு அணியமாட்டேன்' என்று சபதம் செய்தார். அதன்படி, கடந்த 2 மாதங்களாக அமைச்சர் சிங் எங்கு சென்றாலும் காலில் செருப்பு அணியாமலேயே அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இதையடுத்து அமைச்சரின் தொகுதியில் சாலைகளை சரிசெய்ய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உதவி செய்தார். மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான் அமைச்சரின் தொகுதியில் சாலைகளை சரி செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

ஜோதிராதித்ய சிந்தியா

எனவே சாலை பணிகள் விரைவில் முடிவடையும் என்று கூறிய மத்திய அமைச்சர் சிந்தியா, தானே ஒரு ஜோடி ஷூ வாங்கி அமைச்சர் சிங்குக்கு கொடுத்து அதனை அணியும்படி கேட்டுக்கொண்டார். அமைச்சர் சிங்கும் அதனை வாங்கிக்கொண்டார். அதோடு அமைச்சர் சிங்கும் முதல்வர் சௌஹானைச் சந்தித்து சாலை பணிகளுக்கு ஒப்புதல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டதோடு, மீண்டும் காலில் செருப்பு அணிய ஆரம்பித்திருக்கிறார். அமைச்சர் சிங் இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2020-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் சேர்ந்தார். இதனால் கமல்நாத் அரசு கவிழ்ந்து சிவ்ராஜ் சிங் செளஹான் முதல்வராகப் பதவியேற்றார். சிந்தியாவுடன் தற்போது அமைச்சராக இருக்கும் சிங்கும் பா.ஜ.க-வில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/Qb5s8He

Post a Comment

0 Comments