மும்பையில் மேற்கு பகுதியில் உள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் கமல்நாத் ஷா(46). கார்மென்ட் பிஸினஸ் (garment business) செய்து வந்தார். இவரின் மனைவி காஜல் ஆவார். கமல்நாத் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து போனார். கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கமல்நாத் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவரின் வயிற்று வலி குறையவில்லை. இதையடுத்து, அவர் பாம்பே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கமல்நாத்திற்கு ஏற்பட்ட அதே வயிற்று வலி பிரச்னையில் கமல்நாத் தாயாரும் இறந்துபோனார். கமல்நாத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் அவரின் ஒவ்வொரு உடல் உறுப்பாக பழுதடைந்துகொண்டே வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் கமல்நாத் ரத்தத்தை சோதனை செய்து பார்த்தபோது, அதில் மிகவும் சக்தி வாய்ந்த விஷம் கலந்திருந்தது. அதோடு தாலியம் (thallium) என்ற ஒருவகை உலோகமும் ரத்தத்தில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் கமல்நாத் இறந்துவிட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் தனியாக விசாரித்து வந்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கமல்நாத்திற்கும், அவரின் மனைவி காஜலுக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை என்று தெரிய வந்தது. அதோடு காஜல், ஹிதேஷ் ஜெயின் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருப்பதும் தெரிய வந்திருக்கிரது. கடந்த ஆண்டு காஜல் , ஹிதேஷ் ஜெயின் என்பவருடன் போனில் பேசியது தொடர்பாக கமல்நாத் தன் மனைவியுடன் சண்டையிட்டிருக்கிறார். இதனால் காஜல் தன் கணவனுடன் சண்டையிட்டுக்கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்தார். அதுவும் தன் குழந்தைகளுக்காகத்தான் வந்திருப்பதாகவும், தனக்கும், கணவருக்கும் தொடர்பு கிடையாது என்று கூறித்தான் வந்தார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``காஜலும் அவரின் காதலன் ஜெயினும் சேர்ந்து கமல்நாத் சொத்தை அபகரிக்க திட்டமிட்டிருந்தனர். அதனால்தான் முதலில் கமல்நாத் தாயாருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கிறார். கமல்நாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த போது, அவருக்கு காஜல் எந்த விதமான உதவியும் செய்யவில்லை. மாறாக கமல்நாத்திடம் சண்டையிட்டு ரூ.2 லட்சத்தை வாங்கிச்சென்றார். இதனால் அவர் மீது கமல்நாத் குடும்பத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. கமல்நாத் சாப்பிட்ட சாப்பாட்டைதான் காஜலும் சாப்பிட்டிருப்பார் என்பதால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யவேண்டும் என்று சொன்னபோது கேட்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
கமல்நாத்தும், அவருடைய தாயாரும் சாப்பிட்ட சாப்பாட்டைத்தான் காஜல் சாப்பிட்டாரா என்று கேட்டதற்கு அதற்கு சரியாக பதிலளிக்கவில்லை. எனவே காஜலையும், ஜெயினையும் தனித்தனியாக 10 மணி நேரம் விசாரித்த போது `இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இருவரும் சேர்ந்துதான் கெமிக்கல் வியாபாரி ஒருவரிடமிருந்து தாலியம் (thallium) மற்றும் விஷம் வாங்கி வந்து சாப்பாட்டில் கலந்து கொடுத்திருந்தனர்' என்றனர்.
இது குறித்து கமல்நாத் சகோதரி கவிதா கூறுகையில், ``என் தாயாரும் வயிற்று வலி வந்துதான் இறந்து போனார். என்னுடைய சகோதரர் இறந்த சில நாட்களில் காஜல் தன் சகோதரனுடன் சேர்ந்து பிவாண்டியில் இருக்கும் என்னுடைய சகோதரனின் அலுவலகத்தை விற்பனை செய்துவிட்டனர். அதோடு என்னுடைய சகோதரன் எடுத்திருந்த இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு பணம் வாங்குவதில்தான் குறியாக இருந்தனர். எனவேதான் எங்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது'' என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/1lC0VQy
0 Comments